சாதிவாரி கணக்கெடுப்புதான் இப்போதையத் தேவை!


சாதிவாரி கணக்கெடுப்புதான் இப்போதையத் தேவை!
x
தினத்தந்தி 2 Dec 2020 9:30 PM GMT (Updated: 2 Dec 2020 7:45 PM GMT)

கடந்த 2 நாட்களாக சென்னையில் பா.ம.க.வினர் நடத்தும் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறார். போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 25 சதவீதம் அளவுக்கு வன்னியர் சமுதாயத்தினர் இருக்கிறார்கள். ஆனால் அந்தளவுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் இல்லை என்பது அவர்களது கருத்து. ஏற்கனவே 1987-ம் ஆண்டு இதேபோல வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று ஒருவார காலம் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., 1987-ம் ஆண்டு நவம்பர் 25-ந்தேதி, வன்னியர் சங்கம் உள்பட 94 சாதி சங்கங்களை அழைத்து பேசினார். ‘ஒவ்வொரு சாதியும், தங்கள் சாதிக்கு இருக்கும் மக்கள்தொகை என்று சொன்ன எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால், தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையைவிட மிக அதிகமாக இருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்திருந்தார்.

சாதி பிரச்சினை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. அண்ணல் அம்பேத்கர்கூட, ‘இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை. இங்கிருப்பது சாதிகளின் தொகுப்பு மட்டும்தான்’ என்றார். தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பிரச்சினையும் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல, நீண்ட பல ஆண்டுகளாக இருக்கிறது. கருணாநிதி ஆட்சியில் 1969-ம் ஆண்டு ‘சட்டநாதன் கமிஷன்’ அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் ‘அம்பாசங்கர் கமிஷன்’ அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு ஏற்படவில்லை. இப்போது நேற்று முன்தினம் வன்னியர்கள், பா.ம.க.வினர் போராட்டம் நடந்தபோது, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார்கள்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ‘தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளி விவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழுதகவல் கிடைக்கப்பெறும். சாதிவாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கு என்று பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்’ என்று கூறியிருந்தார். தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு நிச்சயமாக வரவேற்புக்குரியது. ஆனால் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தி, ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறார்கள்? என்பதை தெரிவிப்பதே சரியான தீர்வாக இருக்கும்.

ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் 1931-ம் ஆண்டு வரையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாகதான் நடத்தப்பட்டது. பின்பு அவ்வாறு நடைபெறவில்லை. 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு, சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை என்று தீர்ப்பு அளித்துள்ளது. 2011-ம் ஆண்டு இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த புள்ளிவிவரங்கள் மத்திய அரசிடம்தான் இருக்கின்றன. இன்னும் வெளியிடப்படவில்லை. அதில் உள்ள தமிழக சாதிவாரி புள்ளிவிவரங்களை தரும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அந்த புள்ளிவிவரங்கள் கிடைத்துவிட்டால், தமிழ்நாட்டில் பிரச்சினையே இல்லை. இல்லை என்றால், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது.


Next Story