இதை தமிழ்நாடு முழுவதும் பின்பற்றலாமே!


இதை தமிழ்நாடு முழுவதும் பின்பற்றலாமே!
x
தினத்தந்தி 4 Dec 2020 9:30 PM GMT (Updated: 4 Dec 2020 5:58 PM GMT)

‘வரும்முன் காப்போம் என்பதைப்போல, குற்றம் நிகழாமல் தடுப்பது’ என்பது போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணியில்தான் இருக்கிறது.

எல்லையில் சீருடை அணிந்த ராணுவத்தினர் எப்படி எதிரிகளின் தாக்குதலில் இருந்தும், பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்தும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கிறார்களோ, அதுபோல காக்கிச்சீருடை அணிந்த போலீசார், நாட்டுக்குள் நடக்கும் குற்றங்களை தடுப்பதிலும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதிலும் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

சாத்தான்குளம் போன்ற ஒருசில காவல் நிலைய சம்பவங்கள், பால் நிலவில் இருக்கும் கரும்புள்ளி போல இருந்தாலும், பொதுவாக போலீசார் ஆற்றும் பணியில்தான் மக்கள் ஒரு பாதுகாப்பை உணருகிறார்கள். ‘வரும்முன் காப்போம் என்பதைப்போல, குற்றம் நிகழாமல் தடுப்பது’ என்பது போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணியில்தான் இருக்கிறது. சென்னை நகரில், போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பிறகு, மக்களை நாடி போலீஸ் செல்லும் வகையில், பல அதிரடி முயற்சிகளை தொடங்கியுள்ளார். சென்னை நகரிலுள்ள 171 போலீஸ் நிலையங்களிலும் இருந்து ஒரு ரோந்து வாகனம், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் 2 மணி நேரம் நிற்கும். பொதுமக்கள் அந்த ரோந்து வாகனத்திலுள்ள அதிகாரியிடமே தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். சிறிய அளவிலான புகார்கள் என்றால், அங்கேயே விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். இல்லையென்றால், சி.எஸ்.ஆர். என்று கூறப்படும் சமுதாய சேவை பதிவேடு ரசீது அவர்களுக்கு வழங்கப்பட்டு, போலீஸ் நிலையத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்படும். இந்த நடைமுறை வந்தபிறகு, சென்னை நகரில் பொதுமக்கள் ரோந்து வாகனத்தில் வரும் போலீசாரிடமே தங்களது புகார்களை மிக எளிதாக கொடுத்துவிடுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரிலுள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் 2 சைக்கிள்கள் கொடுக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் என்று 2 பேர் அதில் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த முறையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது என்றாலும், மீண்டும் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படவேண்டும். சென்னையிலுள்ள குறுகலான தெருக்களில் ரோந்து வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், போலீஸ்காரர்கள் மட்டுமல்லாமல், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள் என எல்லோருமே மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நடந்துபோய் ரோந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். நடந்தே ரோந்து வரும் அதிகாரிகளை பார்க்கும்போது, மக்களுக்கும் அவர்கள் மீது ஒரு உயர்ந்த மதிப்பு ஏற்படும். தங்கள் குறைகளை அவர்களிடம் மனம்விட்டு தெரிவிக்கலாம் என்ற உணர்வு வரும்.

இதுபோன்ற முயற்சிகளால் தற்போது, நல்ல பல பணிகள் சென்னை நகர மக்களுக்கு போலீசாரால் மேற்கொள்ளப்படுகிறது. இதே முறையை தமிழ்நாட்டில் குக்கிராமங்களிலுள்ள போலீஸ் நிலையம் முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் தொடங்கவேண்டும் என்பது பரவலான கோரிக்கையாக இருக்கிறது. இப்போதெல்லாம் வாட்ஸ்-அப் குரூப்புகள் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு தகவல்களை தெரிவிக்க முடியும். அந்தவகையில், அந்தந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியில் எந்தெந்த போலீசார் ஈடுபடுகிறார்கள்? அவர்கள் செல்போன் எண்கள் என்ன? என்பதை வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்தால், ஏதாவது அசம்பாவித சம்பவம் நடக்கும்போது தெரிவிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கும். சில குற்ற நிகழ்வுகள் குறித்த தகவல்களை போலீஸ் நிலையத்திற்கு சென்று தெரிவிக்க பொதுமக்கள் தயங்குவார்கள். காரணம் சமூக விரோதிகளால் தங்களுக்கு ஆபத்து வரும் என்று அச்சப்படுவார்கள். ஆனால், போலீசாரே வீதியில் இறங்கி ரோந்து வந்தால், புகார்களை அவர்களிடம் தெரிவிக்க பொதுமக்கள் தயங்கமாட்டார்கள். சமூக விரோதிகளுக்கும் இது சிம்மசொப்பனமாக இருக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் இதை உடனடியாக அமலுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story