எல்லோருக்கும் தடுப்பூசி போடவேண்டும்!


எல்லோருக்கும் தடுப்பூசி போடவேண்டும்!
x
தினத்தந்தி 6 Dec 2020 9:30 PM GMT (Updated: 2020-12-07T00:21:55+05:30)

உலகை உலுக்கிய கொரோனா தொற்றுப்பரவலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால், எல்லோருக்குமே தடுப்பூசி போட்டால்தான் முடியும்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்துபோனாலும், 2020-ம் ஆண்டில் உலகை உலுக்கிய கொரோனா தொற்றுப்பரவலை சரித்திரம் மறக்காது. இந்த கொடிய கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால், எல்லோருக்குமே தடுப்பூசி போட்டால்தான் முடியும். இல்லையென்றால் வெட்ட, வெட்ட முளைக்கும் களைபோல, தொற்று பரவிக்கொண்டே இருக்கும். இங்கிலாந்து நாட்டில் 2 கோடி மக்களுக்கும், ரஷியாவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிபோடும் பணிகள் இந்தவாரம் தொடங்கிவிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எப்போது தடுப்பூசி போடப்படும்? என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் கொரோனா தொடர்பாக காணொலி மூலம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ‘அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். விஞ்ஞானிகள் பச்சைக்கொடி காட்டியவுடன் தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கிவிடும். மக்களின் பொதுசுகாதார நலனை மனதில்கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, தடுப்பூசி விலை நிர்ணயிக்கப்படும். முதல்கட்டமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், இணைநோய்கள் உள்ள மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் அமெரிக்க நிறுவனமான ‘நோவா வாக்’ நிறுவனத்திடம் இருந்து 100 கோடி தடுப்பூசி மருந்தையும், இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் இருந்து 50 கோடி ‘ஆஸ்ட்ரா ஜெனிக்கா’ தடுப்பு மருந்தையும், ரஷிய நாட்டிடம் இருந்து 10 கோடி ‘ஸ்புட்னிக்’ தடுப்புமருந்தையும் வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் எல்லோருக்கும் தடுப்பூசி போடவேண்டுமென்றால், ஆளுக்கு இரு டோஸ் என்ற முறையில் 260 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவை. இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், ‘நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று ஒருபோதும் சொல்லவில்லை’ என்றார். “எங்களுடைய நோக்கமெல்லாம், தொற்றுப்பரவல் சங்கிலியை துண்டிப்பதுதான். மிகவும் அதிக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தடுப்பூசிபோட்டு, பரவலை துண்டித்துவிட்டால், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிபோட அவசியமிருக்காது” என்றார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல். இதுமட்டுமல்லாமல், அவர்கள் இருவருமே, “ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமானவர்களுக்கு தடுப்பூசிபோடவேண்டிய அவசியம் இருக்குமா? என்று இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தபிறகு, மத்திய அரசாங்கம் சார்பில் எல்லோருக்கும் தடுப்பூசி போடவேண்டிய அவசியமில்லை என்று கூறுவது, நிச்சயமாக ஏற்புடையதல்ல. பல நாடுகள் எல்லோருக்கும் தடுப்பூசிபோடும் முயற்சியில் ஈடுபடும்போது, இந்தியாவில் மட்டும் அனைவருக்கும் போடவேண்டிய அவசியமில்லை என்று சொல்வது சரியல்ல. உடனடியாக ஒட்டுமொத்த மக்களும் பயனடையும் வகையில் மத்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசி மருந்தை வாங்கவேண்டும். நாங்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி, தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம் என்று சொல்கிறவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கவேண்டும். மற்றபடி ஏழை-எளியவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடவேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் பிரதமர் கூறுவதை பார்த்தால், மாநில அரசுகளுக்கு இலவசமாக தடுப்பூசி கொடுக்கப்போவதில்லை என்பது தெரிகிறது. மாநில அரசுகள் கொரோனா பரவல் ஏற்பட்டபிறகு கடுமையான நிதிச்சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நிச்சயமாக விலை கொடுத்து மத்திய அரசிடம் இருந்து வாங்க முடியாது. எனவே மத்திய அரசாங்கமே, இந்தச் செலவை ஏற்க முடியுமா? என்பதை பரிசீலிக்கவேண்டும்.

இந்த தடுப்பூசி மருந்துகள் நல்ல குளிர்சாதன தொடர் வசதிகளோடு மக்களுக்கு போடும்வரை இருக்கவேண்டும். இதற்காக ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கிலுள்ள நிறுவனத்தோடு கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. எனவே தமிழக அரசு தடுப்பூசி மருந்துகள் போடுவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, யார்-யார்? கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட தயாராக இருக்கிறார்கள் என்ற பட்டிலை தயாரிக்கவேண்டும்.

Next Story