உடனடியாக முடிவெடுக்க வேண்டிய “ஒரே நாடு-ஒரே தேர்தல்”!


உடனடியாக முடிவெடுக்க வேண்டிய “ஒரே நாடு-ஒரே தேர்தல்”!
x
தினத்தந்தி 8 Dec 2020 6:30 PM GMT (Updated: 8 Dec 2020 5:44 PM GMT)

பிரதமர் கூறியதுபோல, “ஒரே நாடு-ஒரே தேர்தல்”! திட்டத்தை பேசி பேசியே, விவாதம் நடத்தி, காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்பதே மக்களின் கருத்தாகும்.

கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றும் ஜனநாயக நாடு, இந்தியா. விதவிதமான கலாசாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள் கொண்ட பல மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நாடு இந்தியா. நேபாள நாட்டு தலைமை நீதிபதியாகவும், பிரதமராகவும் இருந்த கில் ராஜ் ரெஜ்மி கூட்டாட்சி பற்றி கூறும்போது, “கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். அதேநேரத்தில், மாநிலங்களின் குரல்களையும், இனகுழுக்களின் குரல்களையும் புறக்கணிப்பதாக அமைந்துவிடக்கூடாது” என்ற அருமையான தத்துவத்தை கூறினார். இதைத்தான் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்று முழக்கமிட்டு வந்தார். அந்த வகையில், எல்லா மாநிலங்களுக்கிடையேயும், ஒருமித்தநிலை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றபிறகு, “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு”, “ஒரே நாடு-ஒரே வரிவிதிப்புமுறை”, “ஒரே நாடு-ஒரே நுழைவுத்தேர்வு” என்பதுபோன்ற ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தக்கூடிய ஒரேமுறைகளை பல திட்டங்களில் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அந்த வரிசையில், “இப்போது ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்பது நாட்டில் விவாதத்துக்குரியது மட்டுமல்ல, முக்கியமான தேவையாகும். எனவே, வீண்பொருட்செலவையும், காலவிரயத்தையும் தவிர்க்க, நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மாநிலங்கள் துணைபுரிய வேண்டும்” என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கருத்தை அவர் மிகவும் பொருத்தமான இடத்தில் அதாவது, சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், அனைத்து மாநில சபாநாயகர்களும் கலந்துகொண்ட அரசியல் சட்டதினத்தில் பேசியிருக்கிறார். “நாடு முழுவதும் ஓட்டுப்போட தகுதியுள்ள வயது 18 என்று இருக்கிறது. இந்தநிலையில், ஒரேநேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்துவது குறித்து சபாநாயகர்கள் இதற்காக முயற்சி எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் 4 தேர்தல்களும் 1951, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் இரு தேர்தல்களுமே ஒன்றாகத்தான் நடந்தது. அதன்பிறகு 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் சில சட்டசபைகள் கலைக்கப்பட்டதாலும், 1970-ம் ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதாலும், அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தனியே தேர்தல் நடத்த வேண்டியநிலை ஏற்பட்டது. 1983-ம் ஆண்டு தேர்தல் கமிஷனின் வருடாந்திர அறிக்கையிலும், 1999-ம் ஆண்டு சட்ட ஆணையத்தின் அறிக்கையிலும் இதை செயல்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி இந்த கருத்தை கூறியபிறகு, நிதி ஆயோக் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு செயல் அறிக்கையை தயாரித்தது. 2017-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று இதே கருத்தை வலியுறுத்தி அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். தொடர்ந்து இந்த கருத்துகள் கூறப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திரமோடி இதற்காக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.

நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்துவதால், மக்களின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடவேண்டிய அரசு எந்திரம், தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலையில், தற்போது இவ்வாறு தனித்தனியாக தேர்தல் நடத்துவது நிச்சயமாக பெரும்செலவை அரசுக்கு ஏற்படுத்தும். மேலும் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரித்தால் போதுமானது. ஆனால், பல மாநில சட்டசபைகளின் பதவிகாலம், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியோ அல்லது அதற்கு பிறகோ முடியும் சூழ்நிலையில், நிச்சயமாக ஒருசில மாநிலங்கள் சில தியாகங்களை செய்யவேண்டியது இருக்கும். எனவே, ஒட்டுமொத்த நன்மைக்காக அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றாக கலந்து ஆலோசித்து, விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டும். பிரதமர் கூறியதுபோல, இன்னும் இதுபற்றி பேசி பேசியே, விவாதம் நடத்தி, காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்பதே மக்களின் கருத்தாகும். அடுத்த ஆண்டு தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்தவேண்டிய சூழ்நிலையில், இதுகுறித்த முடிவுகளை உடனடியாக எடுப்பதே சாலச்சிறந்ததாகும்.

Next Story