பொருட்கள் வாங்குபவர்களை கண்கொத்தி பாம்பாக பார்ப்பதா?


பொருட்கள் வாங்குபவர்களை கண்கொத்தி பாம்பாக பார்ப்பதா?
x
தினத்தந்தி 9 Dec 2020 9:45 PM GMT (Updated: 9 Dec 2020 9:26 PM GMT)

ஒருபக்கம் பொருட்களை வாங்குங்கள், வாங்குங்கள் என்று ஊக்கம் அளித்துவிட்டு, மறுபக்கம் ரசீது எங்கே? ரசீது எங்கே? என்று நெருக்கடி கொடுப்பது கிராமப்புற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில், எப்போதுமே பழமொழிகளுக்கு பஞ்சமே இருக்காது. இப்போதும் வயதானவர்கள் கிராமப்புறங்களில் எந்தவொரு கருத்தையும் சொல்ல விரும்பினால், அதற்கு ஒரு பழமொழியை சொல்லிவிட்டுத்தான் சொல்வார்கள். அப்படி சொல்லப்படும் ஒரு பழமொழி, ‘தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளிவிடுவதா?‘ என்பதாகும். அதைத்தான் இப்போது மத்திய அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது. நாட்டில் கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மிகவும் மந்தநிலைக்கு சென்றுவிட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மக்கள் அதிகம் பொருட்களை வாங்கினால்தான் உற்பத்தி பெருகும், மத்திய-மாநில அரசுகளுக்கும் வருவாய் கிடைக்கும். இந்த சங்கிலித்தொடர் எளிதாக இருந்தால்தான் மக்கள் பொருட்கள் வாங்குவதிலிருந்து அரசுக்கு வருமானம் கிடைப்பதுவரை தங்குதடையில்லாமல் இருக்கும்.

இந்த நோக்கில்தான் மத்திய அரசாங்கம்கூட, சமீபத்தில் அரசு பணியாளர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை பயண சலுகைக்கட்டணத்தில் 3 மடங்கு தொகையை வைத்து 12 சதவீதம் அல்லது அதற்குமேல் சரக்கு சேவைவரிக்கு உட்படும் பொருட்களை வாங்கினால் வருமானவரிச்சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தது. கடந்த 3 மாதங்களாகவே மக்கள் கடைகளில் போய் பொருட்கள் வாங்கத்தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் கடந்த மாத சரக்கு சேவைவரி வசூல் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடியாக இருந்தது. மத்திய-மாநில அரசுகளை இது நிம்மதி பெருமூச்சுவிடவைத்தது. கடந்த மாதம் 14-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை கையில் எடுத்துக்கொண்டு போய் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கினர். சில தனியார் நிறுவனங்களில் தங்களுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் பொருட்படுத்தாமல், தங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் போனஸ் வழங்கினர். ஆக, கடைகளில் வியாபாரம் சூடுபிடித்தது, மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். கடந்த 7 மாதங்களாக சம்பளம் வாங்கி செலவழிக்காமல், கையில் ரொக்கமாக வைத்திருந்த பணத்தையும், போனஸ் பணத்தையும் வைத்துக்கொண்டு மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். எல்லோருடைய கையிலும் ரொக்கப்பணம் இருந்தது. அதைவைத்துக்கொண்டு பொருட்களை வாங்கினர். கடந்த 7 மாதங்களாக இல்லாத வியாபாரம், இப்போது இருக்கிறதே என்று வியாபாரிகளும் பெருமூச்சுவிட்டனர். வீட்டுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை அதிகரித்தன. இதனால் வேலையிழந்து இருந்த பலருக்கு புதிதாக வேலைவாய்ப்பும் கிடைத்தது.

இப்படி எல்லா தரப்பிலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது வருமானவரித்துறை திடீரென ரூ.50 ஆயிரத்திற்குமேல் ரொக்கம் கொடுத்து பொருட்கள் வாங்கியவர்களின் பட்டியலை சேகரிக்கிறது என்ற தகவல் வந்துள்ளது. தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்குமேல் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கியவர்களுக்கு எல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, அப்படி பொருட்கள் வாங்கியவர்கள் எல்லாம் அதற்கான ரசீதையும், ஆவணங்களையும் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு மூத்த வருமானவரித்துறை அதிகாரி கூறியிருக்கிறார். எல்லோரும் ரசீதை பத்திரமாக வைத்திருப்பார்கள் என்று யாரும் கூறமுடியாது. இதை முதலிலேயே கூறாமல், இப்போது திடீரென கூறுவது நிச்சயமாக பெரிய இன்னல்களை உருவாக்கும். ஒருபக்கம் பொருட்களை வாங்குங்கள், வாங்குங்கள் என்று ஊக்கம் அளித்துவிட்டு, மறுபக்கம் ரசீது எங்கே? ரசீது எங்கே? என்று நெருக்கடி கொடுப்பது கிராமப்புற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது என்றார், தீபாவளிக்கு தாராளமாக பொருட்கள் வாங்கிய ஒருவர். மத்திய அரசாங்கத்தின் இந்த தேவையற்ற நடவடிக்கை மக்களை மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களையும் பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கும். இப்போதுள்ள சூழ்நிலையில், மக்களையும், வணிக நிறுவனங்களையும் ஊக்குவிக்கும்வகையில் அரசின் நடவடிக்கை இருக்கவேண்டுமேதவிர, தேவையற்ற மனஉளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது. மொத்தத்தில், ரொக்கமாக கொடுத்து பொருட்கள் வாங்கும் மக்களுக்கு, மத்திய அரசாங்கமோ, வருமானவரித்துறையோ எந்தவொரு தொந்தரவும் கொடுக்கக்கூடாது.

Next Story