எடுத்துக்காட்டாக விளங்கிய ‘பாரத் பந்த்’!


எடுத்துக்காட்டாக விளங்கிய ‘பாரத் பந்த்’!
x
தினத்தந்தி 11 Dec 2020 1:28 AM GMT (Updated: 11 Dec 2020 1:28 AM GMT)

தினம்.. தினம்.. வானத்தை அவ்வப்போது அண்ணாந்து பார்த்து கொண்டும், பூமியை குனிந்து பார்த்துக்கொண்டும், விண்ணையும்.. மண்ணையும்.. நம்பி வாழ்க்கை நடத்துபவன்தான் விவசாயி.

தினம்.. தினம்.. வானத்தை அவ்வப்போது அண்ணாந்து பார்த்து கொண்டும், பூமியை குனிந்து பார்த்துக்கொண்டும், விண்ணையும்.. மண்ணையும்.. நம்பி வாழ்க்கை நடத்துபவன்தான் விவசாயி. மழை வருமா? என்ற எதிர்பார்ப்புடனும், பெருமழை பெய்துவிடுமோ? என்ற கவலையுடனும் விண்ணைப் பார்ப்பதும், பயிர்களெல்லாம் நன்றாக விளைந்திருக்கிறதா?, களை வளர்ந்திருக்கிறதா?, பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா?, மகசூல் எப்படி இருக்கும்? என்ற ஏக்கத்தோடு மண்ணை பார்ப்பதும்தான் அவனது வாடிக்கை. விவசாயிக்கு மாத வருமானம் கிடையாது. விளைந்தால் வருமானம், அதுவும் விலை இருந்தால்தான் வருமானம். இரண்டும் இல்லை என்றால், நஷ்டம்தான் என்பது விவசாயிகளுக்கு ஏற்படும் கஷ்டமான நிலை.

இத்தகைய சூழ்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறோம் என்ற சூளுரையுடன், மத்திய அரசாங்கம் 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்து அவசரமாக நிறைவேற்றியது. நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல், அவசர அவசரமாக நிறைவேற்றியதில்தான் பிரச்சினை வெடித்தது. இந்த 3 வேளாண் சட்டங்களும் தங்களுக்கு வேண்டாம், திரும்பப்பெற வேண்டும் என்று கூறி, பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி - அரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக சாலையில் அமர்ந்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்திவருகிறார்கள். நாடு முழுவதும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வலுக்கிறது.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 24 கட்சிகள் சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல்காந்தி தலைமையில் 5 கட்சி தலைவர்கள் சந்தித்து, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவேண்டும் என்று கூறி மனு கொடுத்துள்ளனர். கடந்த 8-ந்தேதி ‘பாரத் பந்த்’ தொடங்கும் முன்பே போராட்டக்குழு சார்பில், “எந்த அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்படக்கூடாது. யாரையும் கடையை அடைக்கவோ, நிறுவனங்களை மூடச்சொல்லியோ, கட்டாயப்படுத்தக்கூடாது” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் போராட்டத்தில் அமைதிதான் இருக்கும் என்றவகையில், ‘பாரத் பந்த்’ மிக அமைதியாக, மற்ற போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

இந்தநிலையில், மத்திய அரசாங்கத்தோடு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படாததை தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது. நாளை டெல்லியில் இருந்து ஆக்ரா, ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதேநாளில், நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, தாங்கள் சில திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாகக்கூறி, அதற்கான உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது. அதாவது, “குறைந்தபட்ச ஆதாரவிலை திட்டம் தொடரும். வேளாண் சந்தைகள் தொடர்ந்து செயல்படும்” என்பவை உள்பட அந்த உறுதிமொழிகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால், விவசாயிகளோ இந்த உறுதிமொழிகளை ஏற்கவில்லை. “ஏற்கனவே பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்ட கருத்துகளுக்கு புதுவடிவம் கொடுத்து இந்த உறுதிமொழிகளை தந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு ஒரு புதிய சட்ட வடிவில் உறுதி தரப்படவேண்டும். அந்த விலைக்கு குறைவாக விளை பொருட்களை வாங்கமுடியாது என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும்” என்பது போன்ற கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

விவசாயிகளின் ஒரே கோரிக்கை 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதுதான். இந்த பிரச்சினை இப்போது பல நாடுகளில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது. ஐ.நா. சபை பொதுச்செயலாளர்கூட ஆதரவு தெரிவித்துவிட்டார். அரசாங்கம் இதில் பிடிவாதம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. விவசாயிகளின் நலனுக்காகத்தான் 3 வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறோம் என்று மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அந்த விவசாயிகளே எங்களுக்கு இந்த சட்டம் வேண்டாம் என்று சொல்லும்போது, அதை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு என்ன தயக்கம்?. இதை செய்தால்தான் எங்களின் நன்மதிப்பை பெறமுடியும், நல்லுறவு தழைக்கும் என்பது விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது.



Next Story