கருப்பு இடங்களை காணாமல் செய்வோம்!


கருப்பு இடங்களை காணாமல் செய்வோம்!
x
தினத்தந்தி 11 Dec 2020 6:30 PM GMT (Updated: 2020-12-11T23:08:23+05:30)

தமிழ்நாட்டில் 563 ‘கருப்பு இடங்கள்’ இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறையென பல துறைகளில் முன்னணியில் இருக்கிறது. அதுபோல, கொரோனா ஒழிப்பிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. ஆனால் எதில் முன்னணியில் இருக்கக்கூடாதோ, அதிலும் முன்னணியில் இருப்பதுதான் ஏற்புடையதாக இல்லை. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 57,228 சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இதில் 10,525 பேர் உயிரிழந்துள்ளனர். 62,261 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டும் நாடு முழுவதும் உள்ள கணக்கை எடுத்துக்கொண்டால், ஊரடங்கு தீவிரமாக அமலில் இருந்த கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

ஆனால், அதற்குப்பிறகு உள்ள காலக்கட்டங்களில் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும், காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. பொதுவாக விபத்துகள், ‘கருப்பு இடங்கள்’ என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள இடங்களில்தான் அதிகமாக நடக்கின்றன. எந்தவொரு 500 மீட்டர் தூரத்தில் ஒரு ஆண்டில் 5 உயிரிழப்புகளுக்குமேல் ஏற்படுகிறதோ, அந்த இடம்தான் கருப்பு இடம் என்று வகைப்படுத்தப்படும். அந்த வகையில், தமிழ்நாட்டில் 563 ‘கருப்பு இடங்கள்’ இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்படுத்திய ‘கருப்பு இடங்கள்’ தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கின்றன. சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அம்பத்தூர் எக்சேஞ்ச் அருகிலுள்ள இடத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 755 விபத்துகள் ஏற்பட்டு, 166 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த போக்குவரத்து சிக்னலில் 70 விதிமீறல்கள் நடக்கின்றன. அடுத்த இடம் தாம்பரம்-பைபாஸ் சாலையிலுள்ள போரூர் சுங்கச்சாவடி அருகிலும், அதற்கு அடுத்து சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பூந்தமல்லியிலுள்ள நசரத்பேட்டை சந்திப்பிலும் அதிக எண்ணிக்கையில் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்திருக்கின்றன. இந்த 2 இடங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் 943 விபத்துகளும், 192 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. 563 கருப்பு இடங்களில் இதுபோல அடிக்கடி விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த இடங்களில் ஆண்டுக்கு குறைந்தது 5 உயிரிழப்புகளாவது நடக்கின்றன. இந்த விபத்துகளுக்கான காரணங்களை பொறியாளர்கள் குழு ஆராய்ந்து அறிக்கை தருகிறது. ஆனால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இதுவரை 23 கருப்பு இடங்களைத்தான் சீர்செய்திருக்கிறது. எல்லோருக்கும் நன்றாகத்தெரிகிறது. இந்த இடங்களில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன என்று. அதற்கேற்றாற்போல், சாலை அமைப்புகளை மாற்றியமைத்தல், வேகத்தடை அமைத்தல், கூடுதல் போக்குவரத்து சிக்னல்கள் அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் மற்றும் கோபுர விளக்குகள் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்தால் நிச்சயமாக விபத்துகளை குறைக்கமுடியும். தேவையான அளவு போக்குவரத்து போலீஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தவேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எல்லா இடங்களிலும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் சாலைகள் பராமரிப்பு நடக்கவில்லை என்பதுதான் பெரிய குறையாக இருக்கிறது. பெரும்பாலான விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்தான் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. அதிலும் தீவிர கவனம் செலுத்தப்படவேண்டும். மேலும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு இல்லாதவகையில், சிகிச்சையளிக்க அருகில் மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தவேண்டும். மொத்தத்தில், கருப்பு இடங்களை சரிசெய்வதற்கான தீர்வுகள் என்ன? என்பதை உடனடியாக ஆராய்ந்து அதை சரிசெய்துவிட்டால், விபத்துகளின் எண்ணிக்கை நிச்சயமாக பெருமளவில் குறையும். விபத்துகள் அதிகம் ஏற்படும் தமிழ்நாடு, உயிரிழப்புகள் அதிகம் ஏற்படும் தமிழ்நாடு என்பதிலிருந்து, விபத்துகள் குறைந்த தமிழ்நாடு, உயிரிழப்புகள் குறைந்த தமிழ்நாடு என்ற பெயரை விரைவில் பெறவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை போக்குவரத்துத்துறை, போலீஸ்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரவாரியம் போன்ற அரசின் அங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டும்.

Next Story