பஸ்களில் சமூகப் பரவல் கிடையாதா?


பஸ்களில் சமூகப் பரவல் கிடையாதா?
x
தினத்தந்தி 13 Dec 2020 6:30 PM GMT (Updated: 13 Dec 2020 5:13 PM GMT)

100 சதவீதம் இருக்கைகளில் பஸ்சில் பயணம் செய்யலாம் என்றால் சமூகஇடைவெளிக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே இது மேலும், மேலும் பரவாமல் இருக்கவேண்டும் என்றால், அதன் பரவல் சங்கிலியை துண்டிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான மருத்துவ கருத்தாக இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அடுத்தபக்கம் அவர்களால் மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்கவேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

கொரோனா... கொரோனா... என்று சொல்லி, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தால் சகஜவாழ்க்கைக்கு எப்போது திரும்புவது? என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிக்கூடம், கல்லூரிகள் இயங்கவில்லை. வணிகங்கள் வீழ்ச்சி அடைந்தன. தொழிற்சாலைகள் முதலில் சிலமாதங்கள் மூடப்பட்டு இருந்தன. பிறகு உற்பத்தி தொடங்கினாலும் முழுமையாக இல்லை. இவையெல்லாவற்றின் காரணமாக நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்த நிலையில் மத்திய - மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்தன.

பள்ளிக்கூடங்களை பொறுத்தவரையில் இன்னும் திறக்கப்படவில்லை. மருத்துவக்கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட்டுவிட்டன. நிலையான வழிகாட்டுநெறிகளைப் பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டு, தற்போது அந்த வகுப்புகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

மாணவர்கள் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும். சமூக இடைவெளியை வளாகங்களில் முறையாக பின்பற்றவேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 50 சதவீதம் மாணவர்கள்தான் இருக்கவேண்டும். அதற்கேற்றவகையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம். இதேபோல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உள் அரங்கங்களில்கூட 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் சமூகஇடைவெளியை பின்பற்றுவது என்று கண்டிப்பாக வலியுறுத்திய நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும், இதைத்தான் மிக கண்டிப்பாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் பஸ்களில் மட்டும் 100 சதவீத இருக்கைகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு பஸ்சிலும் அனுமதிக்கப்பட்ட அளவு பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே கடந்த 31.5.2020 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் 60 சதவீத இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. 7.9.2020 முதல் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. தற்போது தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் ஊழியர்களின் கூட்டம் பஸ்களில் அதிகமாகி கொண்டிருக்கும் நேரத்தில், கல்லூரிகள் திறக்கப்பட்டதன் காரணமாக, பஸ்களில் பெரும்கூட்டமாக பயணம்செய்ய நிறையபேர் வருவார்கள். அனைத்து பஸ்களிலும் அது தனியார் பஸ்களாக இருந்தாலும் சரி, அரசு போக்குவரத்துக்கழகப் பஸ்கள் என்றாலும் சரி, தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் பஸ்கள் என்றாலும் சரி, மாணவர்களை அழைத்துச் செல்லும் கல்லூரி பஸ்கள் என்றாலும் சரி 100 சதவீதம் இருக்கைகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல இப்போது அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் இப்போது அனைத்து பஸ்களிலும் பயணிகள் ஒட்டி உரசிக்கொண்டு உட்கார்ந்து பயணம் செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை பொறுத்தமட்டில் அறிகுறிஇல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், பலருக்கு கொரோனா பரவலை ஏற்படுத்திவிடமுடியும். ஏற்கனவே சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு பயணியால் பஸ்சில் பயணம் செய்த பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 100 சதவீதம் இருக்கைகளில் பஸ்சில் பயணம் செய்யலாம் என்றால் சமூகஇடைவெளிக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஒருபக்கம் சமூகஇடைவெளியை பின்பற்றுங்கள், பின்பற்றுங்கள் என்று அரசே சொல்லிவிட்டு, மறுபக்கம் சமூகஇடைவெளியே இல்லாமல் பஸ்சில் பயணம் செய்யலாம் என்று சொல்வது நிச்சயமாக ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது. இதை மேலும், மேலும் குறைக்கவேண்டும் என்றால் முககவசம் அணிவதையும், சமூகஇடைவெளியைப் பின்பற்றுவதையும் எல்லோரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறும் அறிவுரை பஸ் பயணத்திற்கும் பொருந்தும். எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யமுடியுமா? என்று அரசு பரிசீலிக்கவேண்டும்.

Next Story