கொரோனா அரக்கன் மீண்டும் தலையெடுத்துவிடக்கூடாது


கொரோனா அரக்கன் மீண்டும் தலையெடுத்துவிடக்கூடாது
x
தினத்தந்தி 14 Dec 2020 9:30 PM GMT (Updated: 14 Dec 2020 6:37 PM GMT)

2020-ம் ஆண்டு, கொரோனாவால் பெரும் வீழ்ச்சியை கண்டது. மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று, முதல் ஊரடங்கு தொடங்கி, தற்போது 11-வது ஊரடங்கு அமலில் இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட ஊரடங்குகள், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய, குறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த மாதம் 14-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேரத்தில், கடைவீதிகளில், வழிபாட்டு தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்ற நேரத்தில், எங்கே 2-வது அலை உருவாகிவிடுமோ? என்ற அச்சம் எல்லோருக்கும் ஏற்பட்டது. ஆனால், இப்போது ஒரு மாதத்திற்கு பிறகு, “அப்பாடா... கொரோனா பரவல் இல்லை, இனி கட்டுப்படுத்திவிடலாம். மாநிலம் முழுவதும் 100 பேருக்கு பரிசோதனை செய்தால், 1.77 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா இருக்கிறது. சென்னை நகரில் மட்டும் 3.03 சதவீதம் இருக்கிறது” என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாக சென்னை ஐ.ஐ.டி.யில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தது. நேற்று இதன் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துவிட்டது. இதில், 87 மாணவர்களும், அங்கு பணியாற்றும் ஒருவரும், 16 மெஸ் பணியாளர்களும் அடங்குவார்கள்.

டிசம்பர் 1-ந்தேதி 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 10-ந்தேதிக்குள் மேலும் 14 பேருக்கும், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்னும் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் 32 பேர் பாதிக்கப்பட்டனர். அதுபோல, நேற்று மட்டும் 33 பேர் பாதிக்கப்பட்டனர். ஐ.ஐ.டி. வளாகத்தில், தற்போது 774 ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 9 மாணவர் விடுதிகள் இருந்தாலும், 2 விடுதிகளில் உள்ள மாணவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே சாப்பாட்டு அறையில், அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதுதான், இவ்வளவு பேருக்கு கொரோனா பரவ காரணமாகிவிட்டது என்று ஐ.ஐ.டி. மாணவர்கள் கூறுகிறார்கள். இப்போது, ஐ.ஐ.டி.யின் அனைத்து துறைகள், மையங்கள், நூலகம் எல்லாமே மூடப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள மாணவர்களுக்கு அறைகளுக்கே உணவு எடுத்துச்சென்று வழங்கப்படுகிறது. எல்லோருமே அறைகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கல்லூரிகள், விடுதிகளை கண்காணிக்குமாறும், மாணவர்கள் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடாமல் அறைகளுக்கு உணவை எடுத்துச்சென்று சாப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என்றநிலை வரும்வரை, எல்லோரும் மிக கவனமாக இருக்கவேண்டும் என்பதை ஐ.ஐ.டி. சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த 7-ந்தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. மருத்துவ கல்லூரிகளும் இயங்குகிறது. கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், எல்லா கல்லூரிகளிலும், விடுதிகளில் மாணவர்கள் ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிடுவதை தடை செய்ய வேண்டும். ஏனெனில், அங்கு உட்கார்ந்து சாப்பிடும்போதுதான் முககவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியும் இருக்காது.

எனவே, சுகாதாரத்துறை செயலாளர் கூறியதுபோல, எல்லா கல்லூரி விடுதிகளிலும், மாணவர்கள் முககவசம் அணிந்துவந்து உணவை எடுத்துக்கொண்டு, தங்கள் அறையில் போய் சாப்பிடும் நடைமுறையை தொடங்க வேண்டும். அல்லது அறைகளுக்கே கொண்டு சென்று உணவை வழங்க வேண்டும். சமூக இடைவெளி எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதை கடுமையாக நடைமுறைப்படுத்தினால்தான், கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முடியும். வகுப்பறைகளில், சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தும் கல்லூரிகள், விடுதிகளில் சாப்பிடும் அறைகளிலும் மாணவர்கள் ஒன்றாக கூடாமல், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

Next Story