நடைபோடத் தொடங்கியது, தமிழகப் பொருளாதாரம்!


நடைபோடத் தொடங்கியது, தமிழகப் பொருளாதாரம்!
x
தினத்தந்தி 15 Dec 2020 7:36 PM GMT (Updated: 2020-12-16T01:06:21+05:30)

தமிழ்நாட்டில் வீழ்ந்து கிடந்த பொருளாதாரம் இப்போது நடைபோடத் தொடங்கிவிட்டது.

கொரோனா பாதிப்பினால் இந்தியப் பொருளாதாரம், குறிப்பாக தமிழகப் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்திருந்தது. தமிழ்நாட்டில் வீழ்ந்து கிடந்த பொருளாதாரம் கண்விழித்துப் பார்த்து, எழுந்து உட்கார்ந்து இப்போது நடைபோடத் தொடங்கிவிட்டது. அரசுக்குப் பெரும் வருவாய் ஈட்டித்தரும் இனங்களில் ஒன்றான பதிவுத்துறையில் வருமானம் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.23 கோடியே 61 லட்சம் அளவுக்குத்தான் முத்திரைத்தாள் கட்டணத்தின் மூலமாகவும், பதிவுக்கட்டணம் மூலமாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்திருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ஆயிரத்து 76 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். 2 லட்சத்து 63 ஆயிரத்து 922 சொத்துப்பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 21 ஆயிரத்து 341 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு ரூ.110 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆக, ரியல் எஸ்டேட் துறை புத்துணர்வு அடையத் துவங்கிவிட்டது. மக்கள் சொத்துகள் வாங்க, விற்கத் தொடங்கிவிட்டனர்.

புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச்செயலாளர் க.சண்முகம் தலைமையில் தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், சிறப்புச்செயலாளர் அருண் ராய் ஆகியோர் கொண்ட ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழு இந்திய அளவிலும், சர்வதேச அளவிலுமுள்ள பெரிய நிறுவனங்களோடு தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறது. நேற்று முன்தினம் மட்டும் ரூ.19 ஆயிரத்து 995 கோடி மதிப்பீட்டில், 26 ஆயிரத்து 509 பேர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் 18 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு, தொடர்ந்து ரூ.4 ஆயிரத்து 456 கோடி மதிப்பிலான 5 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மற்றொரு திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இதன்மூலம் மொத்தம் 54 ஆயிரத்து 218 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு மட்டும் ரூ.60 ஆயிரத்து 674 கோடி மதிப்பீட்டில், ஒரு லட்சத்து 721 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

வழக்கமாக சென்னையைச்சுற்றியே தொழில் தொடங்கும் நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய தொழில்கள் உருவாகப்போகின்றன என்பது மிகவும் வரவேற்புக்குரியது. இந்தப் புதிய தொழில்களினால் ஒரு லட்சத்து 721 பேர்களுக்குத்தான் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாலும், அதன்மூலம் உருவாகும் துணை தொழில்களினாலும், வர்த்தக நிறுவனங்களினாலும், போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்பு வசதி மூலமும் ஏராளமானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அந்தப்பகுதிகளும் வளர்ச்சிபெறும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏட்டளவில் நின்றுவிடாமல், உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் குழு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் தொழிலும் - விவசாயமும், ஒன்றுபோல் வளரவேண்டும் என்பதுதான் உண்மையான வளர்ச்சிக்கு அடையாளமாகும். தமிழக அரசு தற்போது புதிய தொழில் கொள்கையை உருவாக்கிவருகிறது. விரைவில் அந்த தொழில் கொள்கையை வெளியிட அதிகாரிகள் மிகவும் தீவிரமாக உள்ளனர். இந்த தொழில் கொள்கையில், தொழிலில் பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கு என தனியாக ஊக்கச்சலுகை அளிக்கவேண்டும் என்பது, தொழில் நிறுவனங்களின் கோரிக்கை மட்டுமல்லாமல், அந்த மாவட்ட மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

பனிகாலத்தில் துருவ பிரதேசங்கள் உறைந்துகிடக்கும். கோடைவந்ததும் மெல்ல.. மெல்ல.. உருகத்தொடங்கும். முதலில் ஓடையைப்போல உற்பத்தியாகி, நதியாக வளர்ந்து, கட்டுக்கடங்காத காட்டாறாய் பெருக்கெடுக்கும். அதுபோல, கொரோனாவால் உறைந்துகிடந்த பொருளாதாரம் உருகத் தொடங்கிவிட்டது. வெகுவிரைவில் வெள்ளம்போல, பொருளாதார வளர்ச்சி பெருகவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Next Story