இதுவரை கிடைக்கவில்லை; இப்போது தரவேண்டும் !


இதுவரை கிடைக்கவில்லை; இப்போது தரவேண்டும் !
x
தினத்தந்தி 16 Dec 2020 9:30 PM GMT (Updated: 16 Dec 2020 5:29 PM GMT)

வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது.

2020-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு சோதனையான ஆண்டு. காலில் வலியோடு கஷ்டப்பட்டு நடந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு, திடீரென மேலும் ஒரு காயம் ஏற்பட்டால் எப்படி வலி அதிகரிக்குமோ, அதுபோல ஏற்கனவே கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டுக்கு, சமீபத்தில் வீசிய ‘நிவர்’ புயலாலும், ‘புரெவி’ புயலாலும் ஏற்பட்ட சேதம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 41 ஆயிரத்து 262 ஏக்கர் (16,698 ஹெக்டேர்) நிலத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற பல மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது. இதுதவிர, வீடுகள், கால்நடைகள், சாலைகள், மின்சார கம்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. ‘நிவர்’ புயல் நேரத்தின்போது, 2 லட்சத்து 27 ஆயிரத்து 447 பேர் 3,040 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ‘புரெவி’ புயல் நேரத்தில், 2 லட்சத்து 7 ஆயிரத்து 461 பேர் தங்கவைக்கப்பட்டனர். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசாங்கத்துக்கு புயல் சேத விவரங்களை தெரிவித்து, மத்திய அரசாங்கமும் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்ட இடங்களில் 2 குழுக்களாக சென்று பார்வையிட்டு, தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறது. தமிழக அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.3,758 கோடி உதவியாக கேட்டிருக்கிறது.

பொதுவாக, மாநில பேரிடர் மீட்பு நிதி, மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பாக 75:25 என்ற விகிதத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அந்த நிதியில் இருந்து தற்போது ரூ.1,898 கோடி கொரோனாவுக்காக செலவழிக்கப்பட்டு, இப்போது ரூ.538 கோடி பற்றாக்குறையாக இருக்கிறது. எனவே, இனி மாநில பேரிடர் மீட்பு நிதியில் பணம் இல்லை. ஏற்கனவே, கொரோனா பரவலால் அரசுக்கு வரி வசூல் பெருமளவு சரிந்துள்ள நிலையில், அரசு கஜானாவிலும் பணமில்லை. எனவே, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்துதான் பணம் வரவேண்டும். இதுவரை உள்ள மதிப்பீடுகளை பார்த்தால், மாநில அரசு கேட்கும் தொகைக்கும், மத்திய அரசு வழங்கிய தொகைக்கும் ஏணிவைத்தால்கூட எட்டாது. 2011-2012-ம் ஆண்டில் ‘தானே’ புயல் சேதத்திற்காக, மத்திய அரசாங்கத்திடம் கேட்டது ரூ.5,249 கோடி. ஆனால், மத்திய அரசாங்கம் வழங்கியது ரூ.500 கோடி. 2016-2017-ல் ‘வர்தா’ புயல் சேதத்திற்கு கேட்டது ரூ.22,573 கோடி. ஆனால், மத்திய அரசாங்கம் தந்தது ரூ.266 கோடி. 2017-2018-ல் ‘ஒகி’ புயல் சேதத்திற்கு கேட்டது ரூ.9,302 கோடி. மத்திய அரசாங்கம் தந்தது ரூ.133 கோடி. 2018-2019-ல் ‘கஜா’ புயல் சேதத்திற்கு கேட்டது ரூ.17,899 கோடி. மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,146 கோடிதான்.

தற்போது, இந்த 2 புயல்களுக்கும் இதுவரை கேட்காத அளவு, குறைவான தொகையையே மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு கேட்டுள்ளது. உடனடி நிவாரணம் மற்றும் சீரமைப்புக்கு நிதி மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கம் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும். மாநில அரசு ரூ.3,758 கோடி கேட்டது, மக்களுக்கு தெரிகிறது. மாநில அரசுக்கு, மத்திய அரசாங்கம் எவ்வளவு கொடுக்கிறது? என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக அரசும், எம்.பி.க்களும், அரசியல் கட்சிகளும், நாம் கேட்ட ரூ.3,758 கோடியை முழுமையாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு இதுவரை கேட்டது கிடைக்கவில்லை, மத்திய அரசு இப்போதாவது தரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.

Next Story