முககவசம் அணியவில்லையா? அடுத்தவர் அடிப்படை உரிமையை பறிக்கிறீர்கள் !


முககவசம் அணியவில்லையா? அடுத்தவர் அடிப்படை உரிமையை பறிக்கிறீர்கள் !
x
தினத்தந்தி 17 Dec 2020 9:30 PM GMT (Updated: 17 Dec 2020 6:20 PM GMT)

கொரோனா பரவல் தொடங்கியகாலத்தில் இருந்து மருத்துவ ரீதியாக கொடுக்கப்படும் ஆலோசனை முககவசம் அணியாமல் வெளியே செல்லவேண்டாம் என்பதுதான்.

எல்லோருமே, அது ஆண்கள் என்றாலும் சரி, பெண்கள் என்றாலும் சரி, குழந்தைகள் என்றாலும் சரி, ஆடைகள் அணிவது என்பது எவ்வளவு கட்டாயமோ, முக்கியமோ அதுபோல கொரோனா அரக்கனிடம் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரு பெரிய ஆயுதம் முககவசம் அணிதல்தான்.

கொரோனா பரவல் தொடங்கியகாலத்தில் இருந்து மருத்துவ ரீதியாக கொடுக்கப்படும் ஆலோசனை முககவசம் அணியாமல் வெளியே செல்லவேண்டாம் என்பதுதான். பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பகாலத்தில் இருந்தே முககவசம் அணியுங்கள், சமூகஇடைவெளியை பின்பற்றுங்கள், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள் என்பதை ஒவ்வொருவரும் பொன்விதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று திரும்பத்திரும்ப கூறி வருகிறார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஒவ்வொருமுறை ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்புகளை வெளியிடும்போது, இதை தவறாமல் குறிப்பிட்டு வருகிறார். கடந்த மாதம் 30-ந்தேதி 11-வது ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பில்கூட, இறுதியாக முடிக்கும்போது, “பொதுமக்கள் வெளியே செல்லும்போது, பொது இடங்களில் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகழுவியும், சமூகஇடைவெளியை தவறாமல் கடைப்பிடித்தும், அவசிய தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்” என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனால், தமிழ்நாட்டில் பொதுமக்கள் இப்போது முககவசம் அணிவதை வெகு அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது. தலைமைச்செயலாளர் க.சண்முகம் கூட மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் பொதுமக்களிடையே ஒழுங்கின்மை தெரிகிறது. சில ஆய்வுகள் 30 சதவீதத்துக்கு குறைவான மக்களே முககவசம் அணிகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. மார்க்கெட்டுகள், வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், சமூக மற்றும் மதக்கூட்டங்களில் பெரும்பான்மையான மக்கள் முககவசம் அணியாமல் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர்கள் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முககவசம் அணியாமல், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்கள், தானாகவே கொரோனா நோய்த்தொற்றுக்கு சிவப்புகம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறார்கள். ஏற்கனவே குஜராத் ஐகோர்ட்டில் முககவசம் அணியாதவர்களை கொரோனா சிகிச்சை மையங்களில் சமூகசேவையாற்ற அனுப்ப வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, “முககவசம் அணியாத, சமூகஇடைவெளியை பின்பற்றாத பொதுமக்கள் மற்றவர்களுக்குள்ள அடிப்படை உரிமையை மீறுகிறார்கள் என்ற கடுங்குரலை பதிவு செய்துள்ளது. பல காய்கறி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளிவிட்டு நிற்கவேண்டும் என்ற முறையை பின்பற்றாமல் இருக்கிறார்கள். நாடு முழுவதும் இந்தநிலை இருக்கிறது. அங்குதான் சமூகப்பரவல் தொடங்குகிறது. ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு அடிப்படை உரிமை உண்டு. இவ்வாறு முககவசம் அணியாதவர்களால், சமூகஇடைவெளியை பின்பற்றாதவர்களால் அந்த வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது. “சரியான முறையில் இவ்வாறு முககவசம் அணியாதவர்கள், சமூகஇடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? சரியான நடவடிக்கை இல்லாததும், அதிகாரிகள் இடையே இதுகுறித்து ஒருங்கிணைப்பு இல்லாததாலும் தான் இத்தகைய விதிமீறல்கள் நடக்கின்றன” என்றும் கூறியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் அரசுகளும் தெரிவிக்கின்றன. நீதிமன்றங்களும் தெரிவிக்கின்றன. இருந்தாலும் முககவசம் அணியாமல் இருந்தால், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருந்தால் தங்கள் உயிருக்கும் ஆபத்து, மற்றவர்களுக்கும் கொரோனா பரவல் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கிவிடும் என்பதை இவ்வளவு நாள் ஆகியும் மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய மனக்குறையாக இருக்கிறது. “சொல்லிப்பார்த்தோம் கேட்கவில்லை. இனி தீவிர நடவடிக்கை மூலம்தான் மக்களை முககவசம் அணிய வைக்கவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வைக்க வேண்டும்” என்பதை இன்னும் பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் விளம்பரப்படுத்தி, அதற்கு பிறகும் கேட்கவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் கரும்புக்கரம் நீளட்டும். அதன்பின் இரும்புக்கரம் நீளட்டும்.

Next Story