பழுதடைந்த சாலைக்கு சுங்கக் கட்டணம் எதற்கு?


பழுதடைந்த சாலைக்கு சுங்கக் கட்டணம் எதற்கு?
x
தினத்தந்தி 18 Dec 2020 9:30 PM GMT (Updated: 18 Dec 2020 6:13 PM GMT)

பாதுகாப்பான சாலை பயணம், பயமில்லாத பயணம், மகிழ்ச்சியான பயணம் என்றால், எல்லாவற்றுக்கும் மேலாக விபத்து இல்லாத பயணமாக இருக்கவேண்டும் என்றால், சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

குண்டும், குழியுமாக செப்பனிடப்படாமல் இருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட வழிவகுத்துவிடும். அதைப்போன்ற ஒரு பரிதாப சம்பவம்தான், சமீபத்தில் சென்னையில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் தனது 20 வயது மகள் இவாலினுடன் சென்று கொண்டிருந்த 50 வயது பெண் டாக்டர் கரோலின் பிரிசில்லா, வண்டி தடுமாறியதால் அருகில் திறந்துவைக்கப்பட்டிருந்த மழைநீர் கால்வாயில் விழுந்து இருவருமே உயிரிழந்ததால் ஏற்பட்டது.

இது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பிலுள்ள நெடுஞ்சாலை. 2018-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், நெடுஞ்சாலை ஓரமுள்ள திறந்த மழைநீர் வடிகால்களை எல்லாம் மூடவேண்டும் என்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு சுங்கக்கட்டணம் வசூலித்து, அதை நாங்கள் பராமரிப்புக்கு செலவிடுவோம் என்று கூறுகிறார்கள்.

இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.சத்தியநாராயணன், சென்னை மதுரவாயலுக்கும், வாலாஜாபாத்துக்கும் இடையே ஏறத்தாழ 96 கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியில், சாலைகள் மிகமோசமாக பராமரிக்கப்பட்டுள்ளது, இவ்வளவுக்கும் அங்கு 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் மூலம் தலைமை நீதிபதிக்கு தெரிவித்தார். ஐகோர்ட்டு இந்த வழக்கை தானாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று தெரிந்தபிறகும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த பகுதியை சீர்செய்யவில்லை. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து, இனியாவது சாலை பராமரிப்பில் எடுக்கப்படவேண்டிய அக்கறையை தங்கள் தீர்ப்பின் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.

“இதுபோன்ற சாலைகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். மதுரவாயல் - வாலாஜாபாத் இடையேயுள்ள அந்த குறிப்பிட்ட சாலைப்பகுதி ஒரு மோசமான சாலைக்கு நினைவுச் சின்னம்போல இருக்கிறது” என்று சாடியுள்ளனர். “சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு நம்மால் சிறந்த சாலைகளை போடமுடியாத நிலையில், விண்ணில் ராக்கெட்டுகளை விட்டு என்னபயன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், இந்த சாலையில் உள்ள குறைபாடுகளை 2 வாரங்களுக்குள் சரிசெய்து விடுவோம் என்று தெரிவித்தனர். ஆனால் நீதிபதிகள் அடுத்த 15 நாட்களுக்கு இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் 50 சதவீத கட்டணமே வசூலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்றென்றும் நினைவில் வைக்கத்தக்க தீர்ப்பாகும்.

மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த பெண் டாக்டர் குடும்பத்துக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுவொரு வரவேற்கத் தகுந்த தீர்ப்பு. என்ன காரணத்துக்காக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அந்தக் காரணமான சாலைகள் பராமரிப்பை முறையாக பின்பற்றவில்லை என்றால் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையே நிறுத்திவிடலாமே?. சாலைகளில் விளக்கு வசதி, ஒளிரும் பட்டைகள், சாலைக்கு நடுவே தடுப்பு சுவரில் செடிகள், மரங்கள் வளர்த்து எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் கண்ணை கூசாத அளவு இருக்க செய்யவேண்டும் என்று விதிகள் இருக்கிறது.

பொதுமக்களை பொறுத்தமட்டில், சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டால், அவர்களுக்கு தேவையான வசதிகள் அளிக்கப்பட்டால், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதை பொருட்படுத்தமாட்டார்கள். இனியாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விழித்தெழுந்து சாலைகள் பராமரிப்பிலும், சாலைகளில் செல்லும் வாகனங்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு வசதிகளை வழிநெடுக ஏற்படுத்துவதிலும், தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்பதே இந்த தீர்ப்பு தரும் பாடமாகும்.

Next Story