குறைக்கப்பட்ட பாடங்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொடுக்கலாமே!


குறைக்கப்பட்ட பாடங்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொடுக்கலாமே!
x
தினத்தந்தி 21 Dec 2020 9:30 PM GMT (Updated: 21 Dec 2020 7:11 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பாதிப்பு எல்லா துறைகளிலும் எதிரொலிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 500 அரசு பள்ளிகள், 8 ஆயிரத்து 360 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 12 ஆயிரத்து 920 தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது ஒரு நல்ல முடிவு. அந்த மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலமும், தொலைக்காட்சி மூலமும், யூ-டியூப் மூலமும் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ‘துன்பத்திலும் இன்பம்’ என்பது போல, பள்ளிக்கூடங்களுக்கு நேரில் வரமுடியாவிட்டாலும், மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை சிறுவகுப்புகளில் இருந்தே கற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற நிகழ்வும் மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த 17-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ‘பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும்?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘கொரோனா வைரஸ் தொற்று குறைகிறபோது, பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று அறிவித்தார். கொரோனா தடுப்பூசி மத்திய அரசாங்கம் தான் கொடுக்கவேண்டும். நமக்கு எப்போது வந்துசேரும் என்று தெரியாது. தமிழக அரசை பொறுத்தவரையில் தடுப்பூசி மருந்து கிடைத்தவுடன் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையிலேயே, 192 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஓரளவு நல்ல விவரம் தெரிந்த இளைஞர்களுக்கே கொரோனா தொற்று வருகிறது என்றால், விவரம் தெரியாத பள்ளிக்கூட குழந்தைகளுக்கு நிச்சயமாக ஒரு பாதுகாப்பற்ற நிலைமை இருக்கும். எனவே கொரோனா பரவல் முற்றிலுமாக குறைந்தபிறகு பள்ளிக்கூடங்களை திறப்பதே நல்லது.

சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிக்கூடங்கள் விரும்பினால், ஆன்-லைன் மூலம் நடத்தி கொள்ளலாம் என்றும் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல் 9-ம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்ற மாநில மாணவர்களுடன் போட்டிப்போட வேண்டும் என்ற அடிப்படையில் 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார்.

டிசம்பர் மாதம் முடியப்போகிறது. மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்கிவிடும். இன்னும் என்னென்ன பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன? என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பல பள்ளிக்கூடங்களில் குறைக்கப்படப்போகும் பாடங்களையே ஏற்கனவே நடத்தியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பாடத்திட்டத்தை தேர்வுக்காக குறைத்தது சரி. ஆனால் அந்த பாடங்கள் மாணவர்களுக்கு தெரிந்திருந்தால்தான், மேல்வகுப்புகளுக்கு செல்லும்போது, அதன் தொடர்ச்சியை படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே விடுமுறை நாட்களில் தேர்வுக்காக இல்லாமல், மாணவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக இவ்வாறு குறைக்கப்பட்ட பாடங்களை நடத்தினால் நல்லது. அதேபோல் ‘நீட்’ தேர்வு எழுதும்போது தமிழக மாணவர்கள் மட்டும் 35 சதவீதம் பாடங்கள் தெரியாமல் எழுதபோவார்கள். அந்த பாடங்களில் இருந்து கேள்வி கேட்டால் அவர்களுக்கு தெரியாது. எனவே ‘நீட்’ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.) தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு 35 சதவீதம் பாடக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது, எனவே அந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்காமல் இருக்க முடியுமா? என்று கோரிக்கை விடுவதையும் பரிசீலிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

Next Story