புதிய கொரோனா வைரசை புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்!


புதிய கொரோனா வைரசை புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்!
x
தினத்தந்தி 22 Dec 2020 9:52 PM GMT (Updated: 22 Dec 2020 9:52 PM GMT)

“தலைவலி போய் திருகுவலி வந்துவிட்டது” என்பார்கள். அந்த நிலைமை இப்போது வந்துவிடுமோ? என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டுவிட்டது. நேற்றுமுன்தினம் பங்குச்சந்தை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை அடைந்தது.

சென்செக்ஸ் 1,407 புள்ளிகளும், நிப்டி 432 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தநிலையில், முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் கோடி இழப்பு மும்பை பங்கு மார்க்கெட்டில் மட்டும் ஏற்பட்டது. ரூபாய் மதிப்பும் குறைந்துவிட்டது. இந்தநிலைக்கு என்ன காரணம்? என்று தேடும்போது, இங்கிலாந்தில் கொரோனா வைரசின் மரபணு மாற்றமாகி, புதியவகை வைரஸ் பரவுவதுதான் காரணம் என்று அறியப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க எல்லா நாடுகளும் முயற்சி எடுத்து தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி கொண்டிருக்கும்நிலையில், இந்த புதிய வைரஸ் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவைவிட 70 சதவீதம் அதிகமான வேகத்தில், இந்த வைரஸ் பரவும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இங்கிலாந்தில் மட்டுமல்லாமல், டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தன் கால்தடத்தை பதித்துள்ளது. உலகநாடுகள் அனைத்துமே இப்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்த புதிய வைரஸ் நுழைந்துவிடக்கூடாது என்பதில் அதிக விழிப்புடன் இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், போலந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன், ரஷியா, ஜோர்டான், ஹாங்காங் மற்றும் பல நாடுகள் இங்கிலாந்தோடு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது.

சவுதிஅரேபியா, குவைத், ஓமன் போன்ற நாடுகள், அனைத்து வெளிநாடுகளில் இருந்துவரும் விமான சேவைகளையும் ரத்து செய்துவிட்டது. இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், ‘இப்போது இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ், கொரோனாவைவிட வேகமாக பரவும். எனவே மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதும், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். இதுமட்டும் அல்லாமல், இங்கிலாந்தில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் நுழைந்து விடாதவகையில் அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மும்பையில் நேற்றுமுதல் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 11 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நல்லவேளையாக தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடற்கரைகள், சாலைகள், ஓட்டல்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து இந்த புதிய வைரசையும் தடுக்கும் ஆற்றல் பெற்றது என்று நிபுணர்கள் கூறினாலும், அதை நினைத்து குழப்பம் அடைய தேவையில்லை. அலட்சியப்படுத்தவும் கூடாது என்றும் கருத்துகள் கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா தொற்று இந்தியாவில் உருவாகவில்லை. முதலில் சீனாவின் உகான் நகரில் இருந்து வந்தவரால்தான் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் மஸ்கட்டில் இருந்து வந்த பொறியாளருக்குதான் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. எப்போதும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி கொண்டிருந்தாலே, இந்த புதிய கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துகொள்ள முடியும் என்று உலக சுகாதார தொற்றுநோய் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தற்போதுதான் கொரோனா பரவலை பெருமளவில் கட்டுப்படுத்தி, தடுப்பூசி வந்தபிறகு முழுமையாக ஒழித்துவிடலாம் என்று நினைத்துகொண்டிருந்தநேரத்தில், இந்த புதிய தொற்றை தமிழ்நாட்டில் நுழைய விடாதவகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்தவேண்டும். மொத்தத்தில் எவ்வளவு வேகமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைகிறதோ, அவ்வளவு விரைவில் கொரோனாவை ஒழிக்கமுடியும். இந்த புதிய கொரோனா வைரசையும் நுழைந்துவிடாமல் புறமுதுகிட்டு ஓட வைக்க முடியும்.

Next Story