களைகட்டியது தமிழக தேர்தல்!


களைகட்டியது தமிழக தேர்தல்!
x
தினத்தந்தி 23 Dec 2020 6:55 PM GMT (Updated: 23 Dec 2020 6:55 PM GMT)

கூட்டணி முடிவாவதற்கு முன்பே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

2021-ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவொரு வித்தியாசமான தேர்தல். 1967-ம் ஆண்டு வரை, காங்கிரஸ் ஆட்சி செய்த தமிழ்நாட்டில், அண்ணா தலைமையில் தி.மு.க. முதன்முறையாக வென்று ஆட்சியமைத்தது. அதன்பிறகு, 1971-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வே ஆட்சியை தக்கவைத்து கொண்டது. தொடர்ந்து 1977, 1980, 1984-ல் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு 1989-ல் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வந்தன. 2011, 2016-ம் ஆண்டு தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இப்போது, தி.மு.க. தலைவரான கருணாநிதியும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதாவும் இயற்கை எய்திய நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும், ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தில் மோதப்போகும் முதல் தேர்தல் இது.

சசிகலாவும் ஜனவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். அவர் வந்தபிறகு, என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்? என்ற ஒரு எதிர்பார்ப்பும் அரசியல் அரங்கில் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் புதுவரவாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் இப்போதே தன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு ‘டார்ச் லைட்‘ சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த முறை அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ‘டார்ச் லைட்‘ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீர் திருப்பமாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன், “எங்கள் கட்சிக்கு ‘டார்ச் லைட்‘ சின்னம் வேண்டாம். ரோஜா, தொப்பி, ரிக்‌ஷா, படகு, டிராக்டர் சின்னங்களில் ஒன்றை தாருங்கள்“ என்று தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். எனவே, கமல்ஹாசனுக்கு மீண்டும் ‘டார்ச் லைட்‘ சின்னம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்து ரஜினிகாந்த் 31-ந்தேதி தன் கட்சிப்பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுகிறார். ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயர் அந்த கட்சிக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்புள்ள சூழ்நிலையில், அந்த கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்‌ஷா’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து ‘முத்ரா‘ சின்னம் வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சென்னையில் அமித்ஷா கலந்துகொண்ட ஒரு அரசு விழாவிலேயே, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். ஆனால், கடந்த வாரம் சனிக்கிழமை அரியலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், நிருபர்களிடம் பேசும்போது, பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டணி குறித்தும், முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்தும் கட்சியின் தேசிய தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் என்று சொன்னது, குழப்பங்களை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தபிறகு, எல்.முருகன் இவ்வாறு சொல்லியதை பார்த்தால், இந்த கூட்டணி நீடிக்குமா? என்பதும் சந்தேகமாக இருந்தது. ஆனால் பிறகு எல்.முருகன் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அதேநாளில், சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏற்கனவே மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். இனி மக்களுக்கு தெரியவேண்டியது, எந்தெந்த கட்சி, யாருடைய கூட்டணியில் இருக்கும் என்பதுதான். ஆக, கூட்டணி முடிவாவதற்கு முன்பே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இனி பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது.

Next Story