கொரோனா பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு விளையாட்டு!


கொரோனா பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு விளையாட்டு!
x
தினத்தந்தி 24 Dec 2020 8:27 PM GMT (Updated: 2020-12-25T01:57:03+05:30)

கொரோனா பாதிப்பால் வருகிற பொங்கல்நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எங்கே தமிழகஅரசு அனுமதி கொடுக்காமல் இருந்துவிடுமோ? என்று எல்லோரும் சந்தேகப்பட்டநிலையில், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வில் ஒரு முத்திரை பதிக்கும் வெற்றி என்னவென்றால், அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு போடப்பட்டிருந்த தடைகளை தகர்த்தெறியும் வகையில் அவசரச்சட்டம் கொண்டுவந்ததும், தொடர்ந்து அதற்கு மாற்றாக சட்டம் கொண்டுவந்து பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஒப்புதல் வாங்கியதும்தான்.

தமிழ் சமுதாயத்தின் அடையாளமாக இருக்கும் பொங்கல் பண்டிகையின்போதுதான், வீரமிக்க இளைஞர்கள் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில், சீறிவரும் காளைமாட்டை வீரத்தோடு அடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்கும். 2006-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டதில் இருந்து, இந்த விளையாட்டுக்கு பெரும்சோதனை ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் காளை மாட்டை காட்சியாக, இதுபோல விளையாட்டுக்கு பயன்படுத்த தடை செய்யும் வகையில், வித்தைகாட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைமாட்டையும் சேர்த்துவிட்டது. இதைத்தொடர்ந்து 7.5.2014 அன்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டையும், மராட்டிய மாநிலத்தில் காளைமாட்டு பந்தயத்தையும் தடை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எங்கே ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தமுடியாமல் போய்விடுமோ? என்ற படபடப்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் உலகையே திரும்பி பார்க்கவைத்தது.

அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழகமே கொந்தளித்துள்ளதை டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, ‘மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும்’ என்ற உறுதிமொழியை பெற்றார். தொடர்ந்து ஒரு அவசரச்சட்டம் 21.1.2017 அன்று பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை நீங்கியது. பின்பு இதற்கு ஒரு மாற்றுச்சட்டம் கொண்டு வந்து அதற்கு மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலையும், ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுத்தந்தார். அதில் இருந்து ஜல்லிக்கட்டு தங்குதடையில்லாமல் நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பால் வருகிற பொங்கல்நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எங்கே தமிழகஅரசு அனுமதி கொடுக்காமல் இருந்துவிடுமோ? என்று எல்லோரும் சந்தேகப்பட்டநிலையில், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளவும், எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இதேபோல பார்வையாளர்கள் 50 சதவீதம் அளவுக்குத்தான் வரவேண்டும். மேலும், அவர்கள் முககவசம் அணிய வேண்டும். சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், பார்வையாளர்கள் 50 சதவீதம் பேர் தான் அனுமதிக்கப்பட வேண்டும், மாடுபிடிவீரர்கள் 300 பேர் தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதியென்றால், மீதம் 50 சதவீதம் பேருக்கு ஜல்லிக்கட்டை பார்க்கமுடியாமல் போய்விடுமோ? என்ற ஏக்கம் இருக்கிறது. அதுபோல 300 மாடுபிடி வீரர்களுக்குத்தான் அனுமதி என்பதும், இதில் கலந்துகொள்ள இருக்கும் மற்ற வீரர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையாளர்களை பகிர்வதற்குத்தானே திரையரங்குகளில் பல காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அதுபோல ஜல்லிக்கட்டு விளையாட்டில் பார்வையாளர்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க ஒவ்வொரு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நாட்களை அதிகப்படுத்துவது மிக முக்கியமானது ஆகும். இதன்மூலம் எல்லா பார்வையாளர்களும் ஜல்லிக்கட்டை பார்த்தோம் என்று மகிழ்ச்சி அடையவும் முடியும். எல்லா மாடுபிடி வீரர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது சமூகஇடைவெளியுடன், முககவசம் அணிவதில் சமரசம் வேண்டாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே சாலச்சிறந்தது. எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஒருநாள் நடத்துவதற்கு பதிலாக 2, 3 நாட்கள் என்று நீட்டித்து நடத்தி ஒருநாள் வருகிற பார்வையாளருக்கு, அடுத்தநாள் அனுமதியில்லை என்ற அளவிலும், மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்தால் கொரோனா பயமில்லாமல் ஜல்லிக்கட்டை நடத்திவிடமுடியும்.

Next Story