புதிய நாடாளுமன்ற கட்டிடம்; காலத்தின் கட்டாயம்!


புதிய நாடாளுமன்ற கட்டிடம்; காலத்தின் கட்டாயம்!
x
தினத்தந்தி 25 Dec 2020 9:26 PM GMT (Updated: 25 Dec 2020 9:26 PM GMT)

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் வரும் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்படுகிறது. அந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும்வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு உலகில் கிடைத்துள்ள பெரிய பெருமை, இங்கு தழைத்தோங்கும் ஜனநாயகம்தான். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஜனநாயகம் நிலைத்து நிற்பதை உலகமே வியந்து பார்க்கிறது. ஜனநாயகத்துக்கு மட்டுமல்லாமல், மக்கள் உரிமைக்கும் உத்தரவாதம் கொடுப்பது நமது அரசியல் சட்டம்தான். இந்த அரசியல் சட்டத்தில், மத்தியில் நாடாளுமன்றமும், மாநிலத்தில் சட்டசபைகளும் இயங்கவேண்டும். இந்த அமைப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்தான், புதிய சட்டங்கள் இயற்றுவதையும், அரசின் ஆண்டு பட்ஜெட்டை நிறைவேற்றுவதையும், அந்தந்த துறைகளுக்கான செலவுகளுக்கு மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதையும் தலையாய பணியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், டெல்லியிலுள்ள நாடாளுமன்ற கட்டிடம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. 93 ஆண்டுகள் பழமையானது. இந்த பழமையான கட்டிடத்திற்கு பதிலாக, புதிதாக ஒரு கட்டிடத்தைக்கட்டும் பணிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திரமோடி நாட்டினார். இந்தவிழாவில், 10-ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட, சோழர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாட்டில் இருந்ததை உத்திரமேரூர் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துவதையும், சொத்துகள் சேர்த்ததற்கான ஆதாரங்களை தெரிவிக்காத நபர்களுக்கும், அவர்கள் உறவினர்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதித்தது குறித்து பொறிக்கப்பட்டிருப்பதையும் பற்றிப் பேசியது, ஒவ்வொரு தமிழனையும் நெஞ்சை நிமிர்த்தவைக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கொரோனா நேரத்தில் வீண்செலவு என்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், சிவசேனா, சிரோமணி அகாலிதளம், சமாஜ்வாதி கட்சி ஆகியவை இந்த விழாவை புறக்கணித்தன. மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருக்கும் ஜெயராம் ரமேஷ், “ஆங்கிலேயர் கட்டிய இப்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் மத்திய பிரதேசம் மோர்னாவில் இருக்கும் சவுசாத் யோகினி கோவிலைப்போல இருக்கிறது. ஆனால், சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ், இப்போது மோடி அடிக்கல் நாட்டியிருக்கும் நாடாளுமன்ற கட்டிடம், அமெரிக்காவிலுள்ள ‘பென்டகன்’ கட்டிடம்போல இருக்கிறது” என்று வர்ணித்துள்ளார்.

இப்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் ரூ.83 லட்சம் செலவில் 1921-ம் ஆண்டு கட்டத்தொடங்கி, கட்டுமானப்பணிகள் 1927-ம் ஆண்டு முடிந்தது. 1927-ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி, இந்திய வைஸ்ராயாக இருந்த இர்வின் பிரபு இந்தக் கட்டிடத்தை திறந்துவைத்தார். இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி அமலில் இருப்பதை குறிப்பிடும் வகையில், அடுத்தநாளே மத்திய சட்டமன்றக்கூட்டம் தொடங்கியது. 1952-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தொடங்கியபோது, 489 மக்களவை உறுப்பினர்களும், 216 மாநிலங்களவை உறுப்பினர்களும் இருந்தார்கள். தற்போது, 550 மக்களவை உறுப்பினர்களுக்கும், 245 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இடமளிக்க வேண்டியது இருக்கிறது. கூட்டுக்கூட்டத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள். எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்போகும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் சகல வசதிகளுடன் நிச்சயம் தேவை. இந்தக்கட்டிடத்தை ரூ.861 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் டெண்டர் கோரி கட்டுகிறது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் வரும் 2022-ம் ஆண்டில் கொண்டாடப்படுகிறது. அந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும்வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரம் புதிய கட்டிடத்தின் கிரீடமாக அலங்கரிக்கும். மக்களவையின் உட்புறத்தோற்றம் தேசிய பறவையான மயிலையும், மாநிலங்களவையின் உள்தோற்றம் தேசிய மலரான தாமரையையும், மத்திய மண்டபத்தின் உள்தோற்றம் தேசிய மரமான ஆலமரத்தையும் பறைசாற்றும் வகையில் இருக்கும். 150 ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் தேவைப்படாத அளவில் புதிய கட்டிடம் இருக்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இருக்கும் சூழ்நிலையில், இப்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தையும் பழமை மாறாமல், என்றென்றும் பராமரித்து வரலாறு நிலைத்து நிற்கச் செய்யவேண்டும். புதிய நாடாளுமன்றம் கட்டுவதும், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை பழமைமாறாமல் புதுப்பிப்பதும் காலத்தின் கட்டாயம்.

Next Story