தலையங்கம்: சுமை இல்லாத கல்வி!


தலையங்கம்: சுமை இல்லாத கல்வி!
x
தினத்தந்தி 27 Dec 2020 8:00 PM GMT (Updated: 2020-12-28T00:30:34+05:30)

மத்திய கல்வி அமைச்சகம், “பள்ளிக்கூடபை 2020” என்ற ஒரு புதுக் கொள்கையை வகுத்து, சில பரிந்துரைகளை செய்துள்ளது.

தமிழ்நாட்டைப்போல் சீனாவிலும் பழமொழிகளுக்கு பஞ்சமே கிடையாது. கல்வி பற்றி சீனாவில், “ஒரு ஆண்டுக்கு நீ திட்டமிட்டால், நெல் பயிரிடு; 10 ஆண்டுகளுக்கு திட்டமிட்டால் மரக்கன்றுகளை நடு; வாழ்க்கை முழுவதற்கும் திட்டமிட்டால் மக்களுக்கு கல்வி புகட்டு” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை நிறைவேற்ற மிகத்தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. நாட்டு மக்களின் எதிர்காலம் வளமையாக, செழுமையாக, அறிவாற்றல் மிக்கதாக இருக்கவேண்டும் என்றால், அதன் வாசல் கல்விதான். கல்வி கற்க மாணவர்களுக்கு தணியாத ஆர்வத்தை சிறுவயதில் இருந்தே ஏற்படுத்தவேண்டும். கல்வி என்பது கற்கண்டாய் இனிக்கவேண்டுமே தவிர, சுமையாக நினைக்கும்நிலை வரக்கூடாது. பள்ளிக்கு செல்வதை மாணவர்கள் நந்தவனத்துக்குள் செல்வதைப்போல உணரவேண்டுமே தவிர, ஏதோ பட்டறைக்கு செல்வதைப்போல பயந்துகொண்டு செல்லக்கூடாது. பள்ளிக்கூடங்களும், படிப்பு என்ற பெயரில் ஏராளமான புத்தகங்களைக்கொண்ட பையை சுமக்கவைத்து, மூட்டை தூக்கும் குழந்தை தொழிலாளர்களாக உருவாக்கக்கூடாது.

இப்போதெல்லாம் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது, பெரிய புத்தகப்பையை முதுகில் சுமக்கமுடியாமல் சுமந்துகொண்டு, நிமிர்ந்த நடையில்லாமல், குனிந்த நடையோடு முதுகை வளைத்துக்கொண்டு செல்வதை பார்க்கமுடிகிறது. இந்தநிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? என்று ஆலோசிக்க மத்திய கல்வி அமைச்சகம், “பள்ளிக்கூட பை 2020” என்ற ஒரு புதுக் கொள்கையை வகுத்து, சில பரிந்துரைகளை செய்துள்ளது. பள்ளிக்கூடப் பைகள் எளிதாக இருக்க வேண்டும். அதன் அடியில் சக்கரங்கள் இருக்கக்கூடாது. புத்தகங்களின் எடையும் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும், அது எவ்வளவு எடை இருக்கிறது? என்பது குறிப்பிடப்பட வேண்டும். மொத்தத்தில், ஒரு மாணவரின் மொத்த உடல் எடையில் 10 சதவீதம்தான் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோகும் புத்தகப் பையின் எடையாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 352 பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்துதான் இந்த பரிந்துரையை அந்த புதிய கொள்கை வகுத்துள்ளது. 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே, உலகளாவிய நடைமுறையான அவர்களது மொத்த எடையில் 10 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்பதை மீறி, 2 முதல் 3 கிலோ கூடுதல் எடையோடு புத்தகப்பைகளை தூக்கிக்கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில், மாணவர்களின் புத்தகங்கள் 500 கிராம் முதல் 3.5 கிலோ வரையிலும், நோட்டு புத்தகங்கள் 200 கிராம் முதல் 2.5 கிலோ வரையிலும், சாப்பாட்டு பாத்திரம் 200 கிராம் முதல் ஒரு கிலோ வரையிலும், தண்ணீர் பாட்டில்கள் 200 கிராம் முதல் ஒரு கிலோ எடையும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. காலிப்பை மட்டும் 150 கிராமில் இருந்து ஒரு கிலோ வரை எடை இருக்கிறது. இந்தக் கொள்கை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களிலேயே உணவும், சுத்தமான தண்ணீரும் வழங்கினால், மாணவர்கள் உணவு, தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த எடையும் குறையும் என்று கூறியுள்ளது. இதுபோல, 2-ம் வகுப்பு வரை ‘ஹோம் ஒர்க்’ என்று கூறப்படும் வீட்டுப்பாடம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தகுந்த பரிந்துரையாகும். தகவல் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துள்ள நிலையில், மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிறுவயதிலேயே கற்றுக்கொண்டுள்ள நிலையில், பெரிய சுமையை தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத வகையில் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். “எளிதான புத்தகப்பை, மகிழ்ச்சியான கல்வி” என்ற நிலையை மாணவர்களுக்கு உருவாக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்பதையே பெற்றோரும், மாணவர்களும், ஏன் ஆசிரியர் சமுதாயமும் எதிர்பார்க்கிறது.

Next Story