சாதிக்கட்டும் இளைஞர் படை!


சாதிக்கட்டும் இளைஞர் படை!
x
தினத்தந்தி 30 Dec 2020 9:30 PM GMT (Updated: 2020-12-31T01:15:40+05:30)

“சக்திவாய்ந்த 100 இளைஞர்களை தாருங்கள். நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன்” என்று சொன்னது, இளைஞர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது.

“எழுமின்! விழுமின்! இலக்கை அடையும் வரை நிற்காதே!” என்று சொன்ன, சுவாமி விவேகானந்தரின் 138-வது பிறந்தநாள் விழாவை நாடு வருகிற ஜனவரி 12-ந்தேதி கொண்டாட இருக்கிறது. அவர் கூறிய பொன்மொழிகளில், “சக்திவாய்ந்த 100 இளைஞர்களை தாருங்கள். நான் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன்” என்று சொன்னது, இளைஞர் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கூட, இளைஞர் சமுதாயத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்கு வலியுறுத்தினார். அந்தவகையில், சமீபத்தில் கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 21 வயது ஆர்யா ராஜேந்திரன் கேரளாவின் தலைநகரமாம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகி விட்டார். இதில் பெரிய சிறப்பு என்னவென்றால், இப்போதுதான் முதல் முறையாக ஓட்டுபோட்டு இருக்கிறார். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று இருக்கிறார். கல்லூரி மாணவியாக மேயராகிறார். தற்போது, நாட்டிலேயே உள்ள அனைத்து மேயர்களிலும் இளையவர் இவர்தான். இப்படி பல சிறப்புகளை ஆர்யா ராஜேந்திரன் பெற்றிருக்கிறார். ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன் பெற்றோரை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, சமுதாய சேவைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்குகிறார், ஆர்யா ராஜேந்திரன். “மக்களின் நலனுக்காக பாடுபடுவேன், அதே நேரத்தில் தன் படிப்பையும் தொடருவேன்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் 2009-ம் ஆண்டு சுமன்கோலி என்பவர் 21 வயதில் மேயர் ஆகி இருக்கிறார். நவிமும்பையில் 1995-ம் ஆண்டு சஞ்சீவ் நாயக் என்பவர் 23 வயதில் மேயர் ஆகி இருக்கிறார். இந்த பெரிய பொறுப்புக்கு இளம் வயதிலேயே ஆர்யா ராஜேந்திரன் வந்திருப்பது, வரப்போகும் பல மாநில சட்டசபை தேர்தல்களில் இதுபோல பல இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு வழிகாட்டியுள்ளது.

இந்திய அரசியலில் நிறைய பெண்கள் ஜொலித்து இருக்கிறார்கள். பிரதமராக இந்திராகாந்தி பொறுப்பேற்று பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தார். பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டிலும் இருந்துள்ளார். தமிழக அரசியலில் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தேர்தல், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்தது. தொடர்ந்து 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டங்களை ஜெயலலிதா 2016-ல் தன் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

அ.தி.மு.க.வில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இருக்கிறது. தி.மு.க.வில் இளைஞரணி வேகமாக செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் நல்ல பதவிக்கு வருவது என்பது திறமைக்கு கிடைத்த பரிசுதான். ஆனால் சாதிப்பதற்கு அந்த பதவிகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதுபோன்ற இளைஞர்கள் சாதிப்பதற்கு, இவர்கள் பொறுப்புக்கு வந்துவிட்டார்களே என்று எரிச்சல் அடையாமல் மூத்தவர்கள், இவர்களுக்கு வழிகாட்டவேண்டும். நல்ல சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி, அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தும் வாய்ப்பையும் தரவேண்டும்.

இளமை எப்போதும், பரபரப்பை காட்டும். அனுபவமிக்க மூத்தவர்கள் அவர்களுக்கு பக்குவத்தை கற்றுக்கொடுக்கவேண்டும். இளமையின் துடிப்பும், அனுபவத்தின் அறிவும் கலந்து இதுபோன்ற பொறுப்புகளுக்கு வரும் இளம் வயதினர், இமாலய சாதனை படைக்கவேண்டும். பெண் கல்வியும், பெண் உரிமையும் தமிழ்நாட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. அரசியலில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இளைஞர்களிடமும், இளம் பெண்களிடமும் அதிகமாக இருக்கிறது. எனவே தமிழ்நாட்டிலும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அதிகமான வாய்ப்புகளும், அதிகமான பொறுப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21 வயது கல்லூரி பெண்ணுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வழங்கிய இந்த பதவி வழிகாட்டியுள்ளது.


Next Story