புத்தாண்டை வரவேற்போம்; புதிய மகிழ்ச்சிகளை எதிர்பார்ப்போம்!


புத்தாண்டை வரவேற்போம்; புதிய மகிழ்ச்சிகளை எதிர்பார்ப்போம்!
x
தினத்தந்தி 31 Dec 2020 9:30 PM GMT (Updated: 31 Dec 2020 7:09 PM GMT)

ஒவ்வொரு ஆண்டும் பழைய ஆண்டு முடிந்தவுடன் புதிய ஆண்டு பிறக்கும்போது புத்தாண்டை மகிழ்ச்சியோடு மக்கள் வரவேற்பது வழக்கம்.

தமிழ்நாட்டில் எப்போதுமே, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வழக்கு மொழி உண்டு. அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் பழைய ஆண்டு முடிந்தவுடன் புதிய ஆண்டு பிறக்கும்போது புத்தாண்டை மகிழ்ச்சியோடு மக்கள் வரவேற்பது வழக்கம். அதேபோல் பழைய ஆண்டுகளில் நடந்த சில பயனளிக்கும் நிகழ்வுகள் புத்தாண்டிலும் தொடரவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் 2020-ம் ஆண்டை பொறுத்தமட்டில், உலகையே கலங்கடித்த கொரோனாவை நினைக்கும்போது, இது அந்த ஆண்டோடு போகட்டும், இந்த ஆண்டு தொடரக்கூடாது என்ற உணர்வே எல்லோருக்கும் இருக்கிறது.

2019-ம் ஆண்டு இறுதி நேரத்தில் சீனாவில் உள்ள உகான் நகரில் தலையெடுத்த கொரோனா எனும் கொடிய அரக்கன், இந்தியாவில் ஜனவரியிலும், தமிழ்நாட்டில் மார்ச் மாதத்திலும் கால் பதித்தது. முதலில் மஸ்கட்டில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு என்று தொடங்கி, அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலேயே 2-வது இடத்துக்கு உயரும் அளவுக்கு தமிழ்நாட்டில் பரவல் மிக அதிகமாக இருந்தது. ஜூலை 27-ந்தேதி தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மராட்டியத்துக்கு அடுத்தாற்போல் தமிழ்நாடு மிக அபாயகரமான கட்டத்தில் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், இப்போது தொற்று ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிட்டது. இதுவரையில் 12 ஆயிரத்து 122 பேர் உயிரிழந்துள்ளனர். இனி கொஞ்சம், கொஞ்சமாக தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தநிலையில், இங்கிலாந்தில் தோன்றிய மரபணு மாறிய புதியவகை கொரோனாவால் லண்டனிலிருந்து வந்த ஒரு மாணவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவல் தொடங்கியவுடன் மார்ச் 25-ந்தேதி, முதல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலால் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வணிகம் வீழ்ச்சியடைந்தது. வேலையிழப்பு அதிகரித்தது. தனிநபர் வருமானமும் பெரும் சரிவை கண்டது. அரசின் வருவாய் அதலபாதாளத்துக்கு போய், மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலையை அடைந்தது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை தொடர்ந்து மூடும் நிலை ஏற்பட்டது. இந்த இன்னல்களை எல்லாம் கடந்த ஆண்டு ஏற்படுத்திவிட்டது.

இன்று புத்தாண்டு பிறக்கிறது!. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனாவுக்கு தடுப்பூசி வந்துவிடும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தபடி, எல்லோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுவிடும், சில மாதங்களுக்குள் கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிட்டு, தமிழகம் தன் வளர்ச்சி பாதையில் மீண்டும் வேகமாக செல்லத்தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

கொரோனா மீண்டும் தலையெடுக்காது, நசுக்கி ஒழித்துவிட்டோம் என்ற உறுதிப்பாடு மருத்துவரீதியாக வரும் வரையில் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதையும் மக்கள் தலையாய கடமையாக கொள்ளவேண்டும் என்பது 12-வது ஊரடங்கை தொடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவரீதியான அறிவுரையாக இருக்கிறது.

2021-ம் ஆண்டு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் திறக்கப்படும் நன்னாள் விரைவில் வந்துவிடும் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். மே மாதத்துக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடந்து, அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்? என்பதற்கும் விடை கிடைத்துவிடும். எப்படி 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உலகம் மறக்காதோ? அதுபோல் 2021-ம் ஆண்டையும் கொரோனாவுக்கு விடைகொடுத்த ஆண்டாகவும், மீண்டும் வளர்ச்சி பாதையில் தமிழகம் பீடுநடை போடும் ஆண்டாகவும் தமிழகம் காண வேண்டும். அந்தவகையில் ‘2020-ம் ஆண்டே போ..., போ.., திரும்பி வராதே..., 2021-ம் ஆண்டே வா..., வா..., வளங்களை கொண்டு வா...’ என்பதே தமிழக மக்களின் புத்தாண்டு முழக்கமாக இருக்கிறது.

Next Story