‘மனதின் குரல்’ தந்த மறக்க முடியாத பாடம்!


‘மனதின் குரல்’ தந்த மறக்க முடியாத பாடம்!
x
தினத்தந்தி 1 Jan 2021 9:30 PM GMT (Updated: 1 Jan 2021 6:17 PM GMT)

பெரும்பாலான உரைகளில் தமிழ்மொழி இலக்கியங்களை கோடிட்டு காட்டுவதும், சாதனை புரிந்த தமிழர்களை பாராட்டுவதும் தமிழர்களுக்கு எல்லாம் பெருமையாக இருக்கிறது.

2014-ம் ஆண்டில் முதல் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘மன்கிபாத்’ என்று கூறப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம், அகில இந்திய வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

அந்தவகையில் அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆண்டின் இறுதி உரையாக நாட்டு மக்களிடையே பல கருத்துகளை பகிர்ந்துகொண்டார். இது அவரது 72-வது உரையாகும். ஒவ்வொரு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் அவர் கூறும் கருத்துகள் நாட்டு மக்களின் மனதைத்தொட்டு தட்டி எழுப்பும் குரலாக இருக்கிறது. பெரும்பாலான உரைகளில் தமிழ்மொழி இலக்கியங்களை கோடிட்டு காட்டுவதும், சாதனை புரிந்த தமிழர்களை பாராட்டுவதும் தமிழர்களுக்கு எல்லாம் பெருமையாக இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஆற்றிய உரையில், விழுப்புரத்தை சேர்ந்த என்.கே.ஹேமலதா என்ற ஆசிரியையின் தன்னிகரற்ற சேவையை பாராட்டினார். அவரைப் பற்றி குறிப்பிடத் தொடங்கும்போதே, உலகின் தொன்மையான தமிழ்மொழியை பயிற்றுவிக்கிறார் என்று கூறினார். உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை பிரதமரே பறைசாற்றிவிட்டதால், இனி தேன் தமிழுக்கு உரிய முக்கியத்துவத்தை மத்திய அரசின் அனைத்துத்துறைகளும் வழங்கவேண்டும் என்பதுதான் தமிழர்களின் கோரிக்கை ஆகும்.

ஆசிரியை என்.கே.ஹேமலதா, இந்த கொரோனா காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாத, தன் மாணவர்களுக்காக கற்பிக்க வேண்டிய பாடங்களை ‘அனிமேஷன்’ வீடியோக்களாக உருவாக்கி, அதை ‘பென்டிரைவ்’வில் ஏற்றி, வழங்கியதையும் பாராட்டி இருக்கிறார். இதேபோல கோவையை சேர்ந்த காயத்ரி என்ற பெண், விபத்தில் அடிபட்டு ஊனமுற்ற நாய்க்காக, சக்கர நாற்காலியை வடிவமைத்து இருப்பதையும், 92 வயதிலும் ‘கம்ப்யூட்டர்’ மூலம் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த டி.சீனிவாச ஆச்சாரியார் பற்றியும் கூறி பாராட்டி இருக்கிறார். ஒரு பக்கம் இவர்களை பாராட்டும் மொழியாக எடுத்துக்கொண்டாலும், மறுபக்கம் நாட்டுமக்கள் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் என்ற அறிவுரையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த புத்தாண்டு தீர்மானமாக, ‘நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களையே வாங்கவேண்டும். இந்தியாவில் இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், வெளிநாட்டு பொருட்களின் தரத்துக்கு நிகராக தங்களது பொருட்களின் தரத்தையும் உயர்த்தவேண்டும்’ என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே, அனைத்து இந்தியர்களும் தாங்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் பட்டியலை தயாரித்து, அதில் வெளிநாட்டு பொருட்கள் இருந்தால், அதற்கு பதிலாக இந்திய பொருட்களை தேடி வாங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்ததையும் இப்போது பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார். ‘இந்தியாவில் தயாராகும் பொருட்கள் இந்திய மக்களின் கடின உழைப்பாலும், வியர்வையினாலும் தயாரிக்கப்படுபவை ஆகும். எனவே இந்த ஆண்டு எல்லோருமே, இந்திய பொருட்களையே வாங்குவோம் என்று உறுதி எடுத்து கொள்ளவேண்டும்’ என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு அடுத்தாற்போல், ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் முதல் உறுதிப்பாடான, ‘எங்கும் குப்பையை கொட்ட மாட்டோம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்’ என்ற உறுதிமொழியையும் பிரதமர் கூறியிருக்கிறார். மொத்தத்தில் அவர், 2021-ம் ஆண்டில் எல்லோருமே எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிப்பாட்டை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

பிரதமரின் ‘மனதின் குரல்’ உரை முழுவதுமே, மக்களுக்கும், அரசாங்கத்துக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மிகச்சிறந்த பாடத்தை தெரிவித்து இருக்கிறது. ‘புவிசார் குறியீடு’ பெற்ற காஷ்மீர் குங்குமப்பூ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு பெற்றுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல், தமிழ்நாட்டில் ‘புவிசார் குறியீடு’ பெற்றுள்ள பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரதமர் உதவவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story