புதியதோர் தமிழ்நாடு செய்வோம்!


புதியதோர் தமிழ்நாடு செய்வோம்!
x
தினத்தந்தி 3 Jan 2021 9:30 PM GMT (Updated: 2021-01-04T01:22:51+05:30)

உலகம் குறிப்பாக, தமிழ்நாடு எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போர் கொடிய கொரோனாவுடன்தான். எந்தவொரு போரிலும் இறுதியாக வெற்றி என்பது உண்டு.

புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் பல பாடல்களை படைத்துள்ளார். அதில் ஒன்றான, ‘புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்பது ஆகும். இப்போது உலகம் குறிப்பாக, தமிழ்நாடு எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போர் கொடிய கொரோனாவுடன்தான். எந்தவொரு போரிலும் இறுதியாக வெற்றி என்பது உண்டு. அதுபோல, கொரோனாவுக்கு எதிரான போரிலும் முழு வெற்றி இப்போது கண்ணுக்கு தெரிகிறது. இருண்ட குகையில் நடந்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு குகையின் மறுமுனையில் தெரியும் வெளிச்சம் எப்படி நம்பிக்கை கொடுக்கிறதோ, அதுபோல, அடுத்த சில மாதங்களில் கொரோனாவை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது தமிழ்நாட்டில் தெரிகிறது.

இந்தநிலையில், கொரோனா மருந்தை தயாரிக்கும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா’ நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துவிட்டது. இந்தியாவில் புனேயில் உள்ள ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ இந்த மருந்தை ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரிக்கிறது. இதற்கும் ஐதராபாத்தில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி மருந்துக்கும் நேற்று இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த தடுப்பூசி முதல்கட்டமாக இந்தியா முழுவதும் 3 கோடி மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் அறிவித்துவிட்டார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஒரு சில வாரங்களுக்குள் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும். இது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தற்போது ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம் 5 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாராக வைத்திருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் குஜராத்தில் உள்ள ‘கெடிலா’ நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தும் விரைவில் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுவிடும். ஆக, இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல், இந்த 3 நிறுவனங்களும் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்காக தமிழ்நாட்டில் கடந்த வாரம் சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 17 வித்தியாசமான இடங்களில் ஒத்திகை நடந்தது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக இடங்களில் ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இனி எந்தநேரத்திலும், கொரோனா தடுப்பூசி மருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசியை போடுவதற்காக 47 ஆயிரத்து 200 மையங்களை தமிழக அரசு கண்டறிந்து, முதலில் 21 ஆயிரத்து 170 சுகாதாரப்பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 6 லட்சம் டாக்டர்கள், நர்சுகள் போன்ற மருத்துவப்பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசியைப்போட திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்போது முதற்கட்டமாக 3 கோடி மருத்துவ மற்றும் முன்களப்பணியாளர்களுக்கும், அடுத்து முன்னுரிமை பட்டியலில் உள்ள, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய்கள் உள்ள 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வரையில் 27 கோடி மக்களுக்கும் ஜூலை மாதத்துக்குள் தடுப்பூசிப்போட மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அடுத்தடுத்த கட்டங்களாக யார்-யாருக்கு தடுப்பூசி போடுவது? என்ற பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறது. பயனாளிகள் யார்-யார்? என்ற பட்டியலையும் விரைவில் தயாரிக்கவேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி மருந்து போடுவதற்கான அனைத்து கட்டமைப்பு, பணியாளர் வசதிகள் இருப்பதால் மத்திய அரசாங்கத்திடம் அதிக ஒதுக்கீட்டை பெற்று விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டும். கொரோனாவை போரில் வென்று, ‘கொரோனா இல்லாத புதியதோர் தமிழ்நாட்டை விரைவில் படைப்போம்’!.

Next Story