கடினமான தேர்வு; தேவையான கேள்விகள்!


கடினமான தேர்வு; தேவையான கேள்விகள்!
x
தினத்தந்தி 4 Jan 2021 10:58 PM GMT (Updated: 4 Jan 2021 10:58 PM GMT)

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் உச்சத்தேர்வு. அதுபோல தமிழக அரசு பணிகளுக்கான தேர்வில் உச்சம் பெறுவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு.

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் உச்சத்தேர்வு. அதுபோல தமிழக அரசு பணிகளுக்கான தேர்வில் உச்சம் பெறுவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு. பொதுவாக, கலை பட்டதாரிகள் எழுதும் இந்தத்தேர்வை, இப்போது பொறியியல், எம்.பி.பி.எஸ்., வேளாண், கால்நடை, வக்கீல் என அனைத்து பட்டதாரிகளும் எழுதுகிறார்கள். ஏனெனில், குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்றால், சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வுபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு 18 துணை கலெக்டர்கள், 19 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 வணிக வரித்துறை உதவி கமிஷனர்கள், 14 கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளுக்கான மாவட்ட அதிகாரி ஆகிய 66 பதவிகளுக்கு நேற்று முன்தினம் முதல்நிலை எழுத்துத்தேர்வு, தமிழ்நாடு முழுவதிலும் 856 மையங்களில் நடந்தது.

பொதுவாக, குரூப்-1 தேர்வுக்கு ஏறத்தாழ 5 லட்சம் விண்ணப்பங்கள் வருவதுண்டு. இந்தமுறை 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர்தான் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்களும், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர்தான். விண்ணப்பித்தவர்களில் 51 சதவீதம் பேர் மட்டுமே வந்திருந்தனர். முதலில், இதற்கான காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று நடந்த குரூப்-4 தேர்வில் சில முறைகேடுகள் நடந்தன. அதாவது, விடைத்தாள்களை நிரப்பாமல் கொடுத்துவிட்டு, பின்பு வெளியே வைத்து பூர்த்திசெய்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, அது தொடர்பான வழக்குகளும் தற்போது நிலுவையிலுள்ளன. ஆனால், நடந்து முடிந்த குரூப்-1 தேர்வு எந்த முறைகேட்டிற்கும் இடமளிக்காதவகையில் இருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 பதில்களில், சரியானதை தேர்வுசெய்து ஓ.எம்.ஆர். விடைத்தாளில் ‘ஷேடு’ செய்ய 4 கட்டங்களும், விடை தெரியவில்லை என்றால், அதை குறிப்பிட 5-வதாக ஒரு கட்டமும் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்வதுடன், ஏ,பி,சி,டி,இ என கொடுக்கப்பட்ட 5 கட்டங்களில் எத்தனை ‘ஷேடு’ செய்தோம் என்ற எண்ணிக்கையையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால், குரூப்-1 தேர்வு எழுதிய மாணவர்கள், “தேர்வு எதிர்பார்த்ததுபோல இல்லை. கடினமாக இருந்தது” என்று கருத்து தெரிவித்தனர். மொத்தம் 200 கேள்விகளில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் பெரியார், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசன், காமராஜர், அண்ணா, பக்தவச்சலம், முதல் மத்திய கல்வி மந்திரி மவுலானா அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் பற்றி கேட்கப்பட்டிருந்தது. திருக்குறள் பற்றி 8 கேள்விகள் இருந்தன.

மேலும், கொரோனா, தொட்டில் குழந்தைகள் திட்டம், இந்திய மற்றும் தமிழக பொருளாதாரம், சிந்துசமவெளி மற்றும் கீழடி நாகரிகம், விடுதலை போராட்டம் - தமிழ் இலக்கிய வரலாறுகள் போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தந்தை பெரியாரின் ஆதரவுடன் முதல்-அமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார். “தாழ்த்தப்பட்ட சாதி மருத்துவர் தவறாக ஊசிபோட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும், அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் கட்டி தகர்ந்துபோன ஒரு கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும் என்று கூறியவர் யார்?” என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, மறைந்த பெருந்தலைவர் காமராஜர் என்பதுதான் சரியான பதில்.

ஆக, இனி தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டு கலாசாரம், பண்பாடு, வரலாறு, திட்டங்கள் தெரியாமல் யாரும் குரூப்-1 தேர்வில் வெற்றிபெறமுடியாது என்பதற்கு தொடக்கமாக இந்தத்தேர்வு அமைந்துவிட்டது. வெளியே முள்ளாகவும், உள்ளே தேன் சுவை சுளைகளை கொண்டிருக்கும் பலாப்பழம்போல், வெளியே பார்த்தால் இந்த தேர்வு கடினமாகவும், உள்ளே பார்த்தால் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

Next Story