தமிழ்நாட்டுக்கும் தேவை விவசாயிகள் ரெயில்!


தமிழ்நாட்டுக்கும் தேவை விவசாயிகள் ரெயில்!
x
தினத்தந்தி 6 Jan 2021 11:06 PM GMT (Updated: 2021-01-07T04:36:47+05:30)

நாளெல்லாம் பாடுபட்டு, தன் நிலத்தில் விதைத்து, பயிரிட்டு விளைச்சலை காணும் விவசாயிகளுக்கு, தன் விளைபொருட்களுக்கு நல்ல விலை இருந்தால்தான், அவர்களின் வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக ஓடும்.

நாளெல்லாம் பாடுபட்டு, தன் நிலத்தில் விதைத்து, பயிரிட்டு விளைச்சலை காணும் விவசாயிகளுக்கு, தன் விளைபொருட்களுக்கு நல்ல விலை இருந்தால்தான், அவர்களின் வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக ஓடும். ஆனால் பொதுவாகவே விவசாயிக்கு ‘விளைச்சல் இருந்தால் விலை இல்லை, விலை இருந்தால் விளைச்சல் இல்லை’ என்ற நிலைதான் இருக்கிறது.

குளிர்சாதன வசதிகள் இல்லாமல் விவசாயி தன்னுடைய விளைச்சலை எல்லாம் கேட்டவிலைக்கு விற்கவேண்டிய துர்பாக்கியமான நிலைமை அன்றாடம் சந்திக்கும் ஒன்றாகும். வழக்கமாக விளையும் இடத்தில் விலை இல்லாவிட்டாலும், அதுபோன்ற பயிர்கள் விளையாத அல்லது சரிவர கிடைக்காத தொலைதூரங்களில் அதன் விலை பலமடங்காக இருக்கும். இந்த லாபத்தை சிறுவிவசாயிகளால் அடையமுடியாது. இதுபோன்ற சிறுவிவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் கடந்த பட்ஜெட்டின்போது ‘கிசான்’ ரெயில்சேவை அதாவது விவசாயிகள் ரெயில்சேவை மற்றும் விவசாயிகள் விமான சேவைத்திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்தது. இந்த இரண்டையுமே இப்போது மத்திய அரசாங்கம் தொடங்கிவிட்டது.

கடந்த ஆகஸ்டு மாதம் மராட்டிய மாநிலம், தியோலியில் இருந்து பீகார் மாநிலம், தனப்பூர் வரை செல்லும் விவசாயிகள் ரெயிலை மத்திய அரசாங்கம் தொடங்கியது. இந்த ரெயில் 1,519 கிலோ மீட்டர் தூரத்தை, 31 மணி 45 நிமிடங்களில் கடக்கிறது. வழியில் நிறைய ரெயில் நிலையங்களில் நின்று விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றிச்செல்கிறது. இதில் பழங்கள், காய்கறிகளுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையும் அளிக்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கிறது. குறைந்தபட்சம் இவ்வளவு சரக்குதான் அனுப்பமுடியும் என்று எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஒரு விவசாயி 3 கிலோ மாதுளம்பழத்தை அனுப்பியிருக்கிறார். கோழி வளர்க்கும் மற்றொரு விவசாயி 204 முட்டைகளை (17 டஜன்) அனுப்பியுள்ளார். இதுபோல விலை இருக்கும் இடத்தை இப்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்து எந்த விவசாயியாலும் அனுப்பமுடியும்.

இந்த விவசாயிகள் ரெயிலுக்கு விவசாயிகளிடம் இருந்த வரவேற்பை கருத்தில்கொண்டு பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன்பு 100-வது ரெயிலை தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மராட்டியத்தில் உள்ள சோலாபூர் மாவட்டத்தில் இருக்கும் சங்கோலாவில் இருந்து மேற்குவங்காளம் ஷாலிமாருக்கு செல்கிறது. இந்த ரெயிலில் விவசாயிகள் காலிபிளவர், மிளகாய், வெங்காயம், முட்டைக்கோஸ், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும், வாழைப்பழம், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழவகைகளையும் ஏற்றிச்சென்று விற்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. தற்போது 9 வழித்தடங்களில், 9 விவசாயிகள் ரெயில் ஆந்திரா, மராட்டியம், பீகார், நாக்பூர் போன்ற மாநிலங்களை இணைத்துக்கொண்டு ஓடுகிறது. இதுபோல வடகிழக்கு மாநிலங்களுக்கு கொல்கத்தாவில் இருந்து விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அயிசாலுக்கு விமானம் மூலம் ஏற்றிச்சென்றுவிட்டு, அங்கிருந்து வரும்போது கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு, எலுமிச்சை, வாழைப்பழம், இஞ்சி, அன்னாசி போன்றவை ஏற்றிக்கொண்டு வரப்படுகின்றன.

இதுபோல் தமிழக விவசாயிகளுக்கும் பலனளிக்கும் வகையில் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வழியாக எவ்வளவு தூரத்துக்கு விவசாயிகள் ரெயில் விடமுடியும்? என்பதை மத்திய அரசாங்கம் பரிசீலித்து, விவசாய ரெயிலை விடவேண்டும். விவசாயிகளுக்கு விமானசேவையும் தொடங்க வேண்டும். அவர்களுக்கு உள்ளூரில் விலை கிடைக்கவில்லை என்ற கவலை இல்லாமல் பொருட்களுக்கு ஏற்றவிலை இந்த ஊரில் கிடைக்கிறது. இந்த வியாபாரியோடு தொடர்புகொள்ளலாம் என்பதை தெரிவிக்கும் வகையில், அனைத்து உதவிகளையும் வேளாண்துறை செய்ய வேண்டும். பிரதமர் கொண்டு வந்த வேளாண் சட்டங்களிலேயே, எந்த ஊரிலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க வகைசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறுமனே சட்டங்களில் வகைசெய்வதோடு மட்டுமில்லாமல், அதற்கு வசதி ஏற்படுத்த தமிழக விவசாயிகளுக்கு இதுபோன்ற திட்டங்களை தொடங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக கேரள அரசோடு இணைந்து விவசாயிகள் ரெயில் சேவையை மத்திய அரசாங்கம் தொடங்குவதற்குரிய முயற்சிகளை, கோரிக்கைகளை விடவேண்டும் என்பதே விவசாயிகளின் விருப்பமாக இருக்கிறது.

Next Story