பொங்கலுக்கு பிறகு பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டுமா?


பொங்கலுக்கு பிறகு பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டுமா?
x
தினத்தந்தி 7 Jan 2021 11:30 PM GMT (Updated: 2021-01-08T05:00:48+05:30)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 300 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடங்களை, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதப்போகும் மாணவர்களுக்காக பொங்கலுக்கு பிறகு திறக்கலாமா? என்று தமிழக அரசு மிகத்தீவிரமாக பரிசீலித்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 300 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடங்களை, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதப்போகும் மாணவர்களுக்காக பொங்கலுக்கு பிறகு திறக்கலாமா? என்று தமிழக அரசு மிகத்தீவிரமாக பரிசீலித்து கொண்டு இருக்கிறது. அண்டை மாநிலங்களில் எல்லாம், ஏற்கனவே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வை எழுத வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு நாளும் ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், ஆசிரியர்களால் ‘ஆன்லைன்’ மூலம் எல்லா பாடங்களையும் கற்றுக்கொடுத்து, மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யமுடியாது என்பது பள்ளிக்கூட கல்வித்துறையின் எண்ணம்.

அடுத்த சில மாதங்களுக்குள் தமிழ்நாட்டிலுள்ள 5,796 அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஏறத்தாழ 9.5 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும், 7,809 மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும், ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வையும் எழுதவேண்டியநிலை இருப்பதால் பொங்கலுக்கு பிறகு இந்த இரு வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளிக்கூடங்களை திறக்கலாமா? வேண்டாமா? என்பதை, அனைத்து பள்ளிக்கூடங்களும், அந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தவேண்டும் என்ற கல்வித்துறையின் உத்தரவின்பேரில், கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பள்ளிக்கூடங்களை கொரோனா முற்றிலும் ஒழியாத நிலையில் திறக்க வேண்டாம் என்று ஒரு சாராரும், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி திறக்கலாம் என்று மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை. ஆன்லைன் மூலமே படிக்கும் ஆற்றலை பெற்றுவிட்டார்கள். இன்னமும் கொரோனா ஒழியாத சூழ்நிலையில், மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு மாணவருக்கு கொரோனா வந்தால் மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அவர்கள் வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போதுதான் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக்கூடங்களை திறந்து மீண்டும் பரவலை அதிகரித்துவிடக்கூடாது. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கே செமஸ்டர் தேர்வை ரத்துசெய்ய முன்வந்த அரசு, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சியை வழங்குவதற்கான வழிமுறைகள் இருக்கிறதா? என்பதை பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டும். அப்படியே தேர்வு நடத்தவேண்டும் என்றால், ஆன்லைன் மூலமே தேர்வுகளை நடத்தலாம். கொரோனா இருக்கும் இந்த ஆண்டில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதே சாலச்சிறந்தது என்பது பெரும்பாலான பெற்றோரின் கருத்தாக இருக்கிறது. இதைமீறி பள்ளிக்கூடங்களை திறந்துதான் ஆகவேண்டும், நேரடியாக பாடங்களை நடத்தினால்தான் மாணவர்களை தேர்வு எழுத தயார்ப்படுத்த முடியும், தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்று கல்வித்துறை முடிவு எடுத்தால், பெற்றோரில் ஒரு சாரார் கேட்பதுபோல அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடத்திலும், வெளியேயும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கிராமப்புற பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் முககவசம் விலைக்கு வாங்கிக்கொண்டு, அணிந்துவருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, பள்ளிக்கூட கல்வித்துறையே அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றும் வகையில், ஒரே வகுப்பை காலை, மாலை என இரண்டாக பிரித்து நடத்தவேண்டும். ஆகையால், ஒருவார காலத்துக்குள் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் தேவையான அளவு தெர்மல் ஸ்கேனர்கள், ஆக்சி மீட்டர்கள், சானிடைசர்கள் என அனைத்தையும் பள்ளிக்கல்வி துறையும், சுகாதாரத்துறையும் வழங்கவேண்டும். மொத்தத்தில் பள்ளிக்கூடங்களை திறக்காமல் இருப்பது நல்லது. அப்படியே திறந்தால் கொரோனா பரவாமல் தடுத்துவிட முடியும் என்ற உறுதிப்பாடும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்த முடியும் என்ற அசைக்க முடியாத உறுதியும் அரசுக்கு இருக்கவேண்டும்.

Next Story