தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடலாமே...


தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடலாமே...
x
தினத்தந்தி 9 Jan 2021 12:28 AM GMT (Updated: 2021-01-09T06:38:30+05:30)

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தமிழகம் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவே கொரோனா பாதிப்பில் முடங்கிப்போன நிலையில், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருவது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் அன்றாடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்புவிகிதமும் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்தால்தான் நிலையான மகிழ்ச்சி ஏற்படும். இந்தநிலையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மிகத்தீவிரமாக இருந்தன. இந்தியாவில், இப்போது இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்டிராஜெனிகா மருந்தான கோவிஷீல்டு தயாரிக்கும், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கும், ஐதராபாத்திலுள்ள கோவேக்சின் தடுப்பு மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3-ம்கட்ட பரிசோதனை தொடர்பான செயல்திறன் குறித்த தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்று பெரிய விமர்சனங்கள் கிளம்பியது. ஆனால் இதன் 3-ம்கட்ட பரிசோதனை குறித்த தரவு மார்ச் மாதத்தில் வெளியாகும், இதுவரை நடந்த சோதனையில், நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவதில், அதன் செயல்திறன் நன்றாக இருக்கிறது என்ற வகையில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த சிலநாட்களில் தடுப்பூசி மருந்துகள் முதற்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் போன்ற சுகாதார பணியாளர்களுக்கும், அடுத்தகட்டமாக முன்கள பணியாளர்களுக்கும் என 3 கோடி பேருக்கு போடப்படும். அடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழுள்ள இணை நோயாளிகள் என்றவகையில் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 கோடி பேருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள்ளும், 30 கோடி பேருக்கு ஜூலை மாதத்துக்குள்ளும் தடுப்பூசி போட்டுமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலில், 6 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு இந்த தடுப்பூசிகளை போடுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடித்து தயார்நிலையில் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. 2.5 கோடி மருந்துகளை பத்திரமாக வைத்திருக்கக்கூடிய அளவில் 51 குளிர்சாதன வசதிகள் கொண்ட கிடங்குகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 33 லட்சம் ஊசிகள் தயாராக இருக்கின்றன என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 2 தடுப்பூசி மருந்துகளும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் குளிர்சாதன வசதிகளுடன் இருக்கவேண்டும். அதற்கு தமிழக அரசு சார்பில் நல்ல வசதிகள் இருக்கிறது. கோவிஷீல்டு மருந்தின் விலை அரசுக்கு ரூ.292-ம், வெளிமார்க்கெட்டில் விற்றால், அதைவிட 2 மடங்கு விலை இருக்கும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் கூறியிருக்கிறது. இந்த தடுப்பூசியை 2 முறை போடவேண்டும். இன்னும் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படவில்லை. இதுபோல அதிக செயல்திறன் கொண்ட அமெரிக்க நாட்டை சேர்ந்த பைசர் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்து மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் குளிர்சாதன வசதியில் இருக்கவேண்டும். இதுபோல மாடர்னா தடுப்பூசி மருந்து மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர்சாதன வசதியில் இருக்கவேண்டும்.

எனவே, மத்திய அரசாங்கம், இந்தியாவில் தயாராகும் தடுப்பூசி மருந்துகளையும், அமெரிக்காவில் தயாராகும் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்தும், அதற்குரிய குளிர்சாதன வசதிகள் இருக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் போடுவதற்கு அனுமதித்தால், ஒருபுறம் அரசு தரப்பிலும், மற்றொருபுறம் தனியார் தரப்பிலும் தடுப்பூசி மருந்துகளை போட்டு, அனைவருக்கும் தடுப்பூசிபோடும் பணிகளை விரைவில் முடித்துவிடலாம். தமிழக அரசு அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என்று கூறிய சூழ்நிலையில், வசதி உள்ளவர்கள் பணம் கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் உள்நாட்டு தயாரிப்பு மருந்துகளையும், அமெரிக்க தயாரிப்பு மருந்துகளையும் போட்டுக்கொள்ள வசதி செய்து கொடுத்தால், அரசுக்கும் நிதிச்சுமை குறையும், எல்லோரும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முடியும்.

Next Story