வருது.. வருது.. தடுப்பூசி வருது..


வருது.. வருது.. தடுப்பூசி வருது..
x
தினத்தந்தி 10 Jan 2021 11:18 PM GMT (Updated: 2021-01-11T04:48:10+05:30)

குடுகுடுப்பைக்காரர்கள் வரும்போது, ‘‘நல்ல காலம் பிறக்குது.. நல்ல காலம் பிறக்குது..’’ என்று மனதுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கூறுவது வழக்கம். கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி வந்தால்தான் முடியும் என்றநிலையில், எப்போது இந்த தடுப்பூசி வரும்? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

குடுகுடுப்பைக்காரர்கள் வரும்போது, ‘‘நல்ல காலம் பிறக்குது.. நல்ல காலம் பிறக்குது..’’ என்று மனதுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கூறுவது வழக்கம். கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி வந்தால்தான் முடியும் என்றநிலையில், எப்போது இந்த தடுப்பூசி வரும்? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நல்ல செய்தியை, நல்ல காலம் வருது.. நல்ல காலம் வருது.. என்ற வகையில் வருகிற 16-ந்தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துவிட்டார். இதுவொரு முக்கியமான திருப்புமுனை என்று பிரதமர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்ற வகையில், மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

நம்பிக்கை ஒளி தோன்றும் விதமாக கடந்த வாரம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கும், கோவேக்சின் தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும், இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் தற்போது 5 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாராக வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் மாதம் 5 கோடி முதல் 6 கோடி வரை தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் உற்பத்தி திறன் கொண்டது.

வழக்கமாக விமானங்களில் உலர்ந்த ஐஸ்கட்டி துகள்களை பயணிகள் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது. இது அபாயகரமான பொருட்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டுவருவதற்கு வசதியாக, மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வரை, சீதோஷ்ணநிலையை உருவாக்கும் வகையில், உலர்ந்த ஐஸ்கட்டி துகள்களோடு விமானத்தில் ஏற்றிக்கொண்டுவர சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அனுமதி அளித்துள்ளார். புனே விமான நிலையத்திலிருந்து தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு, அரியானா மாநிலத்திலுள்ள கர்னல், மும்பை, சென்னை, கொல்கத்தா நகரங்களிலுள்ள 4 பெரிய டெப்போக்களுக்கு அனுப்ப விமானங்கள் தயாராக இருக்கிறது. இங்கிருந்து 37 மாநில தடுப்பூசி டெப்போக்களுக்கு அனுப்பவும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது.

அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை முதலில் 3 மாநிலங்களிலும், தொடர்ந்து கடந்த 2-ந்தேதி, 8-ந்தேதிகளில் அனைத்து மாநிலங்களிலுள்ள மாவட்டங்களிலும் நடந்துமுடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் நடந்த ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் பார்த்து, அனைத்து ஏற்பாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்துவிட்டார். ஆக, எல்லாம் தயாராக இருக்கிறது. 16-ந்தேதி தடுப்பூசி மருந்து போடப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புபடி, தமிழ்நாட்டில் எந்த வகையில் இந்தப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதற்கட்டமாக நாடு முழுவதிலும் துணிச்சலுடன் கொரோனா ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் போன்ற மருத்துவ பணியாளர்களுக்கும், அடுத்தக்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு குறைவான இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசிபோட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதம் பேருக்குத்தான், அதாவது 1 கோடியே 60 லட்சம் பேருக்குத்தான் கொரோனா தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரிய மனக்குறையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனவே, 20 சதவீதம் அல்ல, வசதிகள் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசிபோட அனுமதிகொடுத்து, மாநிலத்திலுள்ள அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யவேண்டும். இன்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பேசும் பிரதமர் நரேந்திரமோடி, கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மேலும் என்ன முக்கிய செய்திகளை சொல்லப்போகிறார்? என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story