விரைவில் விற்பனைக்கு வரவேண்டும் தடுப்பூசி!


விரைவில் விற்பனைக்கு வரவேண்டும் தடுப்பூசி!
x
தினத்தந்தி 12 Jan 2021 11:25 PM GMT (Updated: 2021-01-13T04:55:35+05:30)

சீறிவரும் காளைகளை வீறுகொண்ட இளைஞர்கள் அடக்கும் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. 16-ந்தேதி அலங்காநல்லூரில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைக்கிறார்கள்.

சீறிவரும் காளைகளை வீறுகொண்ட இளைஞர்கள் அடக்கும் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. 16-ந்தேதி அலங்காநல்லூரில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைக்கிறார்கள். துள்ளிவரும் ஜல்லிக்கட்டு காளையைப்போல, கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சீறிப்பாய்ந்து மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனாவை அடக்குவதற்கான தடுப்பூசி மருந்துபோடும் திட்டத்தை, அதே நாளில் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திரமோடியும், தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையிலும் தொடங்கிவைக்கிறார்கள்.

இப்போது 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை வாங்க மத்திய அரசாங்கம் ஆர்டர் கொடுத்து, கொள்முதலும் செய்யப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பும் பணிகள் தொடங்கிவிட்டன. ஒரு தடுப்பூசி மருந்தின் விலை, சரக்கு சேவைவரி உள்பட ரூ.210 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று புனேயில் இருந்து விமானங்கள் மூலம் டெல்லி, சென்னை உள்பட 13 நகரங்களுக்கு இவை அனுப்பப்பட்டன. தமிழ்நாட்டுக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் நேற்று சென்னை விமான நிலையம் வந்தது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் குளிரூட்டப்பட்ட வேன்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் என நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கும், அடுத்தகட்டமாக 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இந்த 3 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவை மத்திய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், 50 வயதுக்கு குறைவான இணைநோய் உள்ளவர்களுக்கும் என 27 கோடி பேருக்கு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசிபோட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 50 நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து, பொதுமக்களுக்கு போடத்தொடங்கிய நிலையில், கடந்த 3, 4 வாரங்களில் 2½ கோடி பேருக்குத்தான் போடப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் போட்டுமுடிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். சில மாநிலங்களில் அரசியல்வாதிகள், குறிப்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்களை முன்னுரிமை பட்டியலில் கொண்டுவந்து, முதல்கட்டமாகவே தடுப்பூசி போடப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பிரதமர், அப்படி யாருக்கும் சலுகை கிடையாது. எல்லோருமே மற்றவர்களைப்போல, அவரவர்களுக்கு உரிய நேரத்திலேயே போட்டுக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழக அரசை பொறுத்தமட்டில், எல்லோருக்குமே இலவசமாக போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், ஜூன் மாதத்தில் வெளிச்சந்தையில் தடுப்பூசி மருந்து விற்பனைக்கு வந்துவிடும். இப்போது அரசு ரூ.200-க்கு வாங்கும் நிலையில், வெளிமார்க்கெட்டில் ரூ.1,000-க்கு விற்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ஏன் ஜூன் வரை காத்திருக்கவேண்டும்?, உடனடியாக விற்பனைக்கு கொண்டுவந்துவிடலாம். சில பொருட்களுக்கு மேல்வரி விதிப்பதுபோல, வெளிமார்க்கெட்டில் விற்பனையாகும் தடுப்பூசி மருந்துக்கும் ரூ.1,000-க்கு 10 சதவீதமோ, 12 சதவீதமோ மேல்வரி விதிக்கலாம். ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்பார்கள். அதுபோல, அரசும் இலவசமாக தடுப்பூசியைபோடும் அதேநேரத்தில், தங்களால் பணம்கொடுத்து போடக்கூடிய நிலையில் உள்ள பொதுமக்களும் ரூ.1,000, ரூ.1,500 கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில், ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். ‘எழுமின், விழிமின், குறிசாரும் வரை நில்லாது செல்மின்’ என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரைக்கு ஏற்ப, ஒரு பக்கம் அரசின் இலவச தடுப்பூசியும், மறுபக்கம் விலைகொடுத்து வாங்கும் தடுப்பூசியும் சேர்ந்து கொரோனாவை ஒழிக்கும் இலக்கை விரைவில் அடைய வேண்டும்.

Next Story