கைதூக்கி விடுமா மத்திய பட்ஜெட்?


கைதூக்கி விடுமா மத்திய பட்ஜெட்?
x
தினத்தந்தி 17 Jan 2021 9:34 PM GMT (Updated: 17 Jan 2021 9:34 PM GMT)

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொரோனாவால் பாதிப்படைந்த எல்லா துறைகளையும் சரிசெய்து கைதூக்கி விடும் பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பல பழுதுகள், சேதங்களைக் கொண்ட ஒரு மோட்டார் வாகனத்தை மிகத் திறமையாக பழுதுநீக்கி புத்தம்புது வாகனம் போலாக்கி, பளபளவென தோற்றத்துடன் வேகமாக சாலையில் ஓடவைக்கும் ஒரு மெக்கானிக் போல, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொரோனாவால் பாதிப்படைந்த எல்லா துறைகளையும் சரிசெய்து கைதூக்கி விடும் பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் 2021-2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்கிறார். இது பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் 8-வது பட்ஜெட் ஆகும். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் 3-வது பட்ஜெட்.

வழக்கமான சூழ்நிலையில் தாக்கல் செய்யும் பட்ஜெட் அல்ல இது. மக்களும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வந்த எந்த அரசாங்கங்களும், இதுவரை அனுபவிக்காத சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்த நிதி ஆண்டின் இறுதிக்கட்டத்தில் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட்டாகும். கொேரானா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழில்கள் முடக்கம், விற்பனை வீழ்ச்சி, வேலையிழப்பு, வருமானம் சரிவு என அடுத்தடுத்த தாக்குதல்களால் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய-மாநில அரசுகளும் வருவாய் வீழ்ச்சியால் திக்குமுக்காடிப்போய்விட்டன. பெட்ரோல், டீசல் மீது மிக அதிகளவில் விதிக்கப்பட்ட கலால் வரியைத்தவிர, நிறுவன வரி, சுங்க வரி, வருமான வரி, சரக்கு சேவை வரி பெரும் வீழ்ச்சியையே கண்டது. 2020-2021-ம் நிதியாண்டில், முதல் காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.), அதாவது பொருளாதார வளர்ச்சி மைனஸ் 25 சதவீதம் என்ற படுபாதாளத்தில் தள்ளப்பட்ட சூழ்நிலையில், மெல்ல.. மெல்ல.. எழுந்துவருகிறது. 2021-2022-ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7 சதவீத அளவுக்கு குறையும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள முன்கூட்டிய கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட், ‘‘இதுவரையில் இல்லாத வகையிலான பட்ஜெட்டாக இருக்கும்’’ என்றார், நிர்மலா சீதாராமன். முதலில் அதை நிரூபிக்கும் வகையில், இந்த ஆண்டு வழக்கம்போல காகிதத்தில் அச்சடிக்கப்படும் பட்ஜெட்டாக இல்லாமல், மின்னணு பிரதிகளாக வழங்கப்பட இருக்கிறது. மக்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி தவித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், புது வரிகள் போட்டால் யாராலும் தாங்கிக்கொள்ளமுடியாது. அந்த சுமை மீண்டும் படுக்கவைத்துவிடும். உண்மையான நிலை என்னவென்றால், வரி குறைப்புத்தான்வேண்டும். அது முடியவில்லை என்றால், வரியில்லா பட்ஜெட்டை தாக்கல்செய்யவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. வரி உயர்வு இல்லையென்றால், அரசின் வருவாய்க்கு என்னவழி? என்று கேட்கக்கூடும். அதற்கு பொருளாதார நிபுணர்கள் நல்லதொரு வழியை காட்டியுள்ளனர். தற்போது ரூ.4.05 லட்சம் கோடி அளவிலான நிறுவன வரி, ரூ.3.97 லட்சம் கோடி அளவிலான வருமான வரி, ரூ.1.54 லட்சம் கோடி அளவிலான சரக்கு சேவைவரி வழக்குகள் தாவாவில் இருக்கிறது. வருமான வரி தொடர்பான முறையீடுகளில் இருக்கும் வழக்குகளை தாமாகவே திரும்பப்பெற்றால் 100 சதவீத வரியுடன் மேற்கொண்டு அபராதம் எதுவும் விதிக்காமல் தீர்வுகாணும் வகையில், வருமான வரித்துறை ‘விவாத் சே விஸ்வாஸ்’, அதாவது ‘‘சர்ச்சையில் இருந்து சமாதானத்துக்கு’’ என்ற திட்டத்தை இந்தமாத இறுதிவரை நிறைவேற்றுகிறது. அதுபோல, இந்த ரூ.9.56 லட்சம் கோடி அளவிலான தாவாக்களுக்கும் தீர்வுகாணும் வகையில், மேலும் பல சமாதான் திட்டங்களை இன்னும் பல சலுகைகளோடு கொண்டுவந்தால், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். பொருளாதார சிக்கலுக்கும், தீர்வுகாண வழிகிடைக்கும். மேலும், 50 சதவீதத்திற்கு மேல் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் சேவைத்துறை மீண்டெழ வேண்டுமானால், மக்கள் அனைவரும் கொேரானா தடுப்பூசி போட்டு சகஜமாக வெளிவரவேண்டும். அந்த நிலையை அரசும் விரைவில் உருவாக்கவேண்டும். அதற்கான வழியையும் இந்த பட்ஜெட் காட்டவேண்டும்


Next Story