மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது


மாணவர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது
x
தினத்தந்தி 18 Jan 2021 9:30 PM GMT (Updated: 2021-01-19T02:27:16+05:30)

கொரோனா பரவல் தொடங்கியவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

ஏறத்தாழ 10 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக வகுப்பறை கதவுகள் இன்று திறக்கப்பட போகின்றன. கொரோனா பரவல் தொடங்கியவுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 9-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இந்த கல்வியாண்டு தொடங்கியவுடன், தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. ஆனால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறும் அளவு வசதியில்லாதவர்களாக இருந்ததால், அவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும், செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் யூ-டியூப் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் இதில் எந்த அளவுக்கு மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்தார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்தநிலையில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பள்ளிக்கூடங்களை திறக்க கடந்த நவம்பர் மாதம் அரசு முடிவு செய்தது. ஆனால் பெற்றோர், ‘‘எங்கள் பிள்ளைகளுக்கு ஓராண்டு படிப்பு வீணானாலும் பரவாயில்லை. கொரோனாவை கொண்டுவந்து விடக்கூடாது’’ என்ற அச்சத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அந்த திட்டமும் கைவிடப்பட்டது. இப்போது 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதவேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு கண்டிப்பாக வகுப்புகள் நடத்தினால்தான் பாடங்களை நடத்தி முடிக்க முடியும் என்ற எண்ணத்தில், அரசு பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்திவிட்டு, இன்று முதல் பள்ளிகளை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் முககவசம் அணிந்துகொண்டுதான் வரவேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. வகுப்புகளுக்கு வராமல் ஆன்லைன் மூலமே கற்றுக்கொள்கிறோம் என்று கூறும் மாணவர்களுக்கு, அதற்கான வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை வாங்கிவர வேண்டும். காலையில் பிரார்த்தனை கூட்டமோ, ஒன்றாக மாணவர்களை சேர்க்கும் கூட்டங்களோ கண்டிப்பாக நடத்தக்கூடாது என்பது போன்றவை வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல், பள்ளிக்கூடங்கள் திறக்கப்போகும் இந்த நேரத்தில்தான் பாடத்திட்டங்கள் 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல பாடங்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுவிட்டன. தற்போது, குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களில், எளிதாக மதிப்பெண்கள் பெறக்கூடிய பாடங்கள் இருக்கிறது என்பது ஆசிரியர்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆசிரியர்கள் 100 நாட்கள் வகுப்புகள் நடத்தினால்தான், அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுக்க முடியும். அதற்கேற்றவகையில் தேர்வுகளை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. இடையில் சட்டமன்ற தேர்தல் வருவதால், பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டுவிடும். அதற்கு பல நாட்கள் பள்ளிக்கூடங்களை மூடவேண்டியது இருக்கும். மீண்டும் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்றால், பல நாட்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி னால்தான் முடியும். இப்படி பல இடர்பாடுகள் இருக்கிறது.

இதுமட்டுமில்லாமல் ஏழை குடும்பங்களை சேர்ந்த பல மாணவர்கள் இந்த 10 மாதங்களில் வேலைகளுக்கு போகத் தொடங்கிவிட்டார்கள். அதில் எத்தனை பேர் மீண்டும் படிப்பதற்கு வருவார்கள் என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. வகுப்புகளில் ஒரு மாணவருக்கு கொரோனா வந்தால் மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அவர்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது. இவ்வளவு இடர்பாடுகளை தாண்டி பள்ளிக்கூடங்களை நடத்தும்போது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவல் வராமல் பாதுகாப்பது என்பது நிச்சயமாக பெரிய சவாலான காரியம் ஆகும்.

Next Story