ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார்!


ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார்!
x
தினத்தந்தி 19 Jan 2021 7:54 PM GMT (Updated: 2021-01-20T01:24:08+05:30)

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கும், இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையே நல்ல நட்புறவு நிலவியது. இந்தியா-அமெரிக்கா இடையே ஓரளவு நல்லுறவு தழைத்தது. இடையிடையே சில உரசல்கள் இருந்தாலும், வர்த்தக பரிமாற்றங்களும் நன்றாக இருந்தன. அதெல்லாம் ஜோ பைடனின் ஆட்சியில் நீடிக்குமா?, மேம்படுமா? என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இந்திய அமெரிக்கர் என்று இந்திய நாட்டு மக்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர் என்று ஆப்பிரிக்க நாட்டு மக்களும் பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்பது சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் 13 பெண்கள் உள்பட 20 இந்திய அமெரிக்கர்களை மிக முக்கியமான பொறுப்புகளில் ஜோ பைடன் நியமித்துள்ளார். இதில் 17 பேர் வெள்ளை மாளிகையில் பைடன் நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் இருப்பார்கள்.

78 வயதுடைய பைடன் நிர்வாகத்தில் முதல்முறையாக காஷ்மீர் வம்சாவளியை சேர்ந்த ஆயிஷா ஷா, சமீரா பாசிலி ஆகியோரும் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பைடன் ஆற்றிய உரையில், ‘அமெரிக்காவில் வாழும் இந்திய அமெரிக்கர்கள் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து பொறுப்புகளை கொடுத்திருக்கிறேன். அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்றெல்லாம் பேசி அமெரிக்கா வாழ் இந்தியர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் தேர்தலுக்கு முன்பு சொல்வதை வைத்து எதையுமே முடிவெடுக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க மக்கள்தொகையில் அமெரிக்காவில் வாழும் இந்திய அமெரிக்கர்கள் 1 சதவீதம் தான் என்றாலும், சில மாகாணங்களில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். எனவே தேர்தலுக்கு பிறகு என்ன நிலைப்பாட்டை பைடன் எடுக்கப்போகிறார்? என்பதைத்தான் இந்தியா உற்று நோக்கி கொண்டிருக்கிறது.

பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்றவுடன் ஆற்றும் முதல் உரைதான், மிக மிக முக்கியமானது. அந்த உரையில்தான் அவர் நடந்து செல்லப்போகும் பாதை என்னவென்று உலகுக்கு எடுத்துக்காட்டும் உரையாக இருக்கும். இந்த முறை அவர் உரையில் என்னென்ன இடம்பெறும்? என்பதை அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அலுவலர் தலைவராக நியமிக்கப்பட இருக்கும் ரோன் கிளெய்ன் கூறியிருக்கிறார். இந்த உரையில் முதல் 10 நாட்களில் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் இடம்பெறும். நாட்டுக்கு அவர் ஆற்றும் இந்த உரை கொரோனா தொற்றில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கான நடவடிக்கைகளை குறிப்பிடுவதாக இருக்கும். இந்த உரை நாட்டை முன்னேற்றிச்செல்லும் உரையாக, ஒற்றுமையை ஏற்படுத்தும் உரையாக, எல்லா செயல் திட்டங்களையும் நிறைவேற்றும் உரையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு குடியேற்ற உரிமை வழங்காத டிரம்பின் கட்டுப்பாடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படும். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேருவது தொடர்பான அறிவிப்பு, முககவசம் அணிவதை கட்டாயமாக்கும் அறிவிப்பு, மாணவர்களுக்கு கல்விக்கடன் திரும்ப கட்டுவதை தள்ளிவைக்கும் அறிவிப்பு போன்ற முக்கிய 12 அறிவிப்புகள் அவருடைய உரையில் இடம்பெறும் என்பதையும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இதுதவிர சட்டவிரோதமாக குடியேறி, குடியேற்ற உரிமை இல்லாமல் அமெரிக்காவில் வாழும் ஒரு கோடியே 10 லட்சம் மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வழிகளையும் கோட்டிட்டு காட்டுவார் என்று கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், அமெரிக்க உறவு பைடன் அரசாங்கத்தில் எந்த அளவு மேம்படும்? வர்த்தக உறவு எந்த அளவு வலுப்பெறும்? நட்புறவு ஆழமாகுமா? சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்குமா? என்பதெல்லாம் போக போகத்தான் தெரியும்.

Next Story