கொரோனா தடுப்பூசி போட பயமா?, தயக்கமா?


கொரோனா தடுப்பூசி போட பயமா?, தயக்கமா?
x

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாட்டில் பெரும் பாதிப்பை உருவாக்கிய கொரோனாவுக்கு விடைகொடுக்க தடுப்பூசி இப்போது வந்துவிட்டது என்ற மகிழ்ச்சி நிலவியது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டிலுள்ள கிராமப்பகுதிகளில் அம்மை நோய் தடுப்பூசி போட வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், ஊசி போட பயந்து ஓடி ஒளிவார்கள். அதேபோன்றதொரு நிலைமை இப்போது கொரோனா தடுப்பூசிக்கு, தமிழ்நாட்டில் மருத்துவப் பணியாளர்களிடையே ஏற்பட்டிருப்பதுதான் மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாட்டில் பெரும் பாதிப்பை உருவாக்கிய கொரோனாவுக்கு விடைகொடுக்க தடுப்பூசி இப்போது வந்துவிட்டது என்ற மகிழ்ச்சி நிலவியது. மத்திய அரசாங்கம் முதல்கட்டமாக நாடு முழுவதும் 1 கோடி டாக்டர்கள், நர்சுகள் உள்பட மருத்துவப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2 லட்சத்து 78 ஆயிரத்து 250 மருத்துவப்பணியாளர்களுக்கு ‘2 டோஸ்’ தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசாங்கம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளையும், 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளையும் அனுப்பி வைத்திருந்தது. இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படுகிறது. இது இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்டிரா ஜெனிகா மருத்துவ நிறுவனமும் தயாரித்த தடுப்பூசி மருந்தாகும். இதற்கு 3 கட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்து, சிறந்த செயல்திறன் கொண்டது என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்திலுள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரிக்கும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருந்து 2 கட்ட பரிசோதனை முடிந்து, இப்போது 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. இந்தநிலையில், இதன் 2 கட்ட பரிசோதனையின் செயல்திறனை கொண்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர பயன்பாட்டுக்காக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி, “எனக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துதான் வேண்டும். ‘கோவேக்சின்’ வேண்டாம்’’ என்று சொல்வதற்கோ அல்லது “கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்’’ என்று சொல்வதற்கோ யாருக்கும் விருப்ப தேர்வு கிடையாது. அந்த மையத்தில் என்ன மருந்து இருக்கிறதோ? அதைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும்.

18 வயதுக்குகீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், தடுப்பூசி ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்ள முடியாது. ஆனால் ‘கோவேக்சின்’ மருந்தை போடுவதற்கு முன்பு, அதற்கு ஊசி போட்டுக்கொள்பவர்கள் ஒப்புதல் கடிதம் கொடுக்கவேண்டும். ஏதாவது, விளைவுகள் ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீடுகள், மருத்துவ ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம் என்று ‘கோவேக்சின்’ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கடந்த 16-ந்தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டில் தடுப்பூசி போடத் தொடங்கிய கடந்த 5 நாட்களில் 82 ஆயிரம் பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிபோட எல்லா திறனும் இருந்த நிலையில், 32 ஆயிரத்து 894 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுபோல, 3 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போட தயார் நிலையில் இருந்ததில், 776 பேர் மட்டுமே போட்டுக்கொண்டனர். ஆக, 39.6 சதவீதம் மருத்துவ பணியாளர்கள்தான் தடுப்பூசிபோட முன்வந்துள்ளனர்.

இவர்கள் சாதாரண பொதுமக்கள் அல்ல. டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள். இந்தநிலையில் யாருக்கும் அச்சம் ஏற்பட தேவையில்லை என்ற வகையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எல்லோரும் அச்சப்படும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருந்தை தாமாக முன்வந்து திருச்சியில் போட்டுக்கொண்டார். மருத்துவக்கல்லூரி டீன்கள், பிரபல தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த பிரபல டாக்டர்கள் எல்லோரும் போட்டுக்கொண்டாலும், மருத்துவப்பணியாளர்களே தடுப்பூசி போட முன்வராததை பார்த்தால், இது தயக்கமா? அல்லது பயமா? என்று தெரியவில்லை. எனவே, முதற்கட்டமாக மருத்துவப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என்றெல்லாம் பிரிப்பதை விட்டுவிட்டு யார், யார் இந்த தடுப்பூசியை போட விரும்புகிறார்களோ? அவர்கள் எல்லாம் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிப்பதே சாலச்சிறந்தது ஆகும்.

Next Story