நம்பிக்கை ஒளி தெரிகிறது!


நம்பிக்கை ஒளி தெரிகிறது!
x
தினத்தந்தி 21 Jan 2021 9:30 PM GMT (Updated: 2021-01-21T23:48:27+05:30)

‘‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’’ இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவர் விவசாயிகள் மேன்மை பற்றி எழுதிய திருக்குறள் ஆகும்.

இந்த திருக்குறளின் விளக்கமாக மு.வரதராசனார், ‘‘உழவருடைய கைகள், தொழில் செய்யாமல் மடங்கி இருக்குமானால், விரும்புகின்ற எந்தப்பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை’’ என்று கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், இந்த உன்னதமான தொழிலை செய்யும் விவசாயிகள் தங்களுக்கு பாதகம் என்று எதிர்த்து வரும் 3 வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியது. மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லி எல்லையில் கடந்த 58 நாட்களாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தங்கள் குடும்பங்களோடு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் மற்ற கோரிக்கைகள், ‘‘அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய வகை செய்யும் மின்சார சட்டத்தை திரும்பபெற வேண்டும். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அறுவடைக்கு பிறகு கழிவுகளை தீயிட்டு கொளுத்துவோருக்கு அபராதமும், ஜெயில் தண்டனையும் விதிப்பதை கைவிட வேண்டும்’’ என்பதுதான்.

இதுவரையில் அரசாங்கத்தோடு 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இடையில், மின்சார சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும், கழிவுகளை எரிப்பவர்களுக்கு அபராதம், ஜெயில் தண்டனை விதிப்பதையும் நிறுத்திவிடுவதாக கூறிய மத்திய அரசாங்கம், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்தது. ஆனால், இதுதான் எங்கள் முக்கிய தேவை, இதைத்தவிர வேறு முக்கிய கோரிக்கை எங்களுக்கு இல்லை என்பது விவசாயிகளின் நிலைப்பாடு. மத்திய அரசாங்கமோ, இதைத்தவிர வேறு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அதை பரிசீலிப்பதாக இதுவரை சொல்லி வந்தது.

இந்த பிரச்சினையை சுப்ரீம்கோர்ட்டின் முடிவுக்கு விட்டுவிடுவோம், சுப்ரீம்கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ, அதை பின்பற்ற தயாராக இருப்பதாக மத்திய அரசாங்கம் கூறியது. ‘‘இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு குறித்த பிரச்சினை. நாங்கள் கோர்ட்டுக்கு போக தயாராக இல்லை. எனவே, இதை அரசுதான் தீர்க்கவேண்டும்’’ என்று விவசாயிகள் கூறிவிட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 12-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு வந்தபோது விவசாயிகளுக்கு பாதி வெற்றி கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டது. அதேநேரம் பேச்சுவார்த்தை நடத்த 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது. ஆனால் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர். அதன்பிறகு கடந்த புதன்கிழமை நடந்த 10-வது சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய அரசாங்கம், ‘இந்த 3 வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தாமல் நிறுத்திவைத்துவிடுகிறோம். இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டிலும் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்துவிடுகிறோம். மற்ற பிரச்சினைகளை ஆராய இருதரப்பும் சேர்ந்து நியமிக்கும் ஒரு குழுவை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்’ என்று கூறியது.

விவசாயிகள் இதுகுறித்து தங்களுக்குள் பேசி இன்று நடக்கும் கூட்டத்தில் பதில் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள். இவ்வளவு நாளும் இந்த பிரச்சினையில் உறுதியாக இருந்த மத்திய அரசாங்கம், இப்போது சற்று இறங்கி வந்திருப்பது நிச்சயமாக ஒரு நம்பிக்கை ஒளியை காட்டுகிறது. ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்கிறோம் என்று கூறும் மத்திய அரசாங்கம் நிரந்தரமாக நிறுத்தி வைக்கலாமே என்பது பொதுவான மன ஓட்டம். இனியும் இந்த பிரச்சினையை இழுத்தடிக்காமல் இன்றோ அல்லது அடுத்த ஒருசில நாட்களுக்குள்ளோ ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் விவசாயிகள் மட்டுமல்லாமல், நாட்டுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. இதேபோல் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டு, சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்கு மத்திய அரசாங்கம் முன்வரவேண்டும்.Next Story