கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே தீர்வு!


கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே தீர்வு!
x
தினத்தந்தி 22 Jan 2021 7:44 PM GMT (Updated: 22 Jan 2021 7:44 PM GMT)

நித்தம் நித்தம் செத்துப்பிழைக்கும் தொழில்தான் மீன்பிடித்தொழில். கடலில் மீன்பிடிக்கச்சென்றால் கடும் புயல்வீசுமோ?, கனமழை பெய்யுமோ? என்றெல்லாம் இயற்கைக்கு மட்டும் பயந்த காலம்போய், இப்போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எப்போது வந்து தாக்குதல் நடத்துவார்களோ? என்ற அச்சம் வெகுவாக இருக்கிறது.

நித்தம் நித்தம் செத்துப்பிழைக்கும் தொழில்தான் மீன்பிடித்தொழில். கடலில் மீன்பிடிக்கச்சென்றால் கடும் புயல்வீசுமோ?, கனமழை பெய்யுமோ? என்றெல்லாம் இயற்கைக்கு மட்டும் பயந்த காலம்போய், இப்போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எப்போது வந்து தாக்குதல் நடத்துவார்களோ? என்ற அச்சம் வெகுவாக இருக்கிறது. அதேபோன்ற ஒரு நிலைமைதான், இப்போது புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு நடந்துள்ளது. மெசியான், செந்தில்குமார், சாம்சன், நாகராஜ் ஆகிய 4 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் படகு மீது இரவில் ரோந்துவந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியதால், படகு கடலில் மூழ்கியது. மீனவர்கள் வாக்கி-டாக்கி மூலம் அருகில் இருந்த மீனவர்களை தொடர்புகொண்டு தங்களை காப்பாற்றும்படி அழைத்தபோதுகூட இலங்கை கடற்படை கப்பல் அங்கேயே இருந்ததால், மற்ற மீனவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. கடலில் மிதந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.

கடல் எல்லை தெரியாமல் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தால் அவர்களை கைதுசெய்து, படகுகளை கைப்பற்றுவதுதான் முறையான நடவடிக்கை. துடிதுடிக்க சாகவைத்தது நிச்சயமாக மனிதாபிமானமற்ற செயல். பொதுவாக கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போதுதான் இத்தகைய துயரச்சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு, கச்சத்தீவை மீட்பதுதான். கச்சத்தீவு சரித்திரகாலம் தொட்டு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான தீவாக இருந்தது. இந்தத்தீவு தமிழக எல்லையில் இருந்து, அதாவது ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 18 மைல் தூரத்திலும் இருக்கிறது என்பது சரித்திர சான்றுகளில் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலங்களில் பச்சைத்தீவு என்று அழைக்கப்பட்ட இந்தத்தீவு, பிறகு பெயர்மருவி கச்சத்தீவானது. கச்சத்தீவில் இருப்பது தமிழர் அடையாளம். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சேர்ந்த மீனவர் சீனிகுப்பன், 1905-ம் ஆண்டு அங்கு அந்தோணியார் கோவிலை கட்டிய வரலாறு அசைக்க முடியாதநிலையில் இருக்கிறது என்று கூறுகிறார்கள், கச்சத்தீவு ஆய்வாளர்கள். கடலில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் அங்குபோய் வலைகளை உலர்த்துவதையும், அங்கு வழிபட்டு வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். 1974-ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இருநாட்டு மீனவர்களும் அங்குசென்று வலைகளை உலர்த்திக்கொள்ள தடையில்லை, தாராளமாக போய்வரலாம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து 1976-ம் ஆண்டு நெருக்கடிநிலையின்போது, மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்று ரத்து செய்யக்கோரி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. நமது மீனவர்களின் புகலிடமாகவும், வாழ்விடமாகவும் அமைந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்தே இலங்கை கடற்படையின் அட்டகாசம் தொடங்கியது. 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான போர் ஒரு முடிவுக்கு வந்தபிறகு, தமிழக மீனவர்களின் கைது படலம் மிக அதிகமாகியதோடு, படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இப்போது கோட்டைப்பட்டினம் மீனவர்களுக்கு நடந்த சம்பவத்தை பார்த்தால், மீன்களைவிட மீனவர்கள் உயிர் எங்களுக்கு பெரிதல்ல என்ற நிலைப்பாட்டையே இலங்கை ராணுவம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது நன்றாக தெரிகிறது. நமது மீனவர்களை காப்பாற்றுவதற்கு ஒரே வழி, உடனடியாக தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், ஏன் தமிழக மக்களும் ஒன்று சேர்ந்து கச்சத்தீவை மீட்டுத்தாருங்கள் என்று மத்திய அரசாங்கத்துக்கு குரல்கொடுப்பதுதான். இது நமக்கு சொந்தமான தீவு. இழந்துவிட்ட சொத்தை மீட்டுத்தர கோருவது தமிழர்களின் பொறுப்பு. அதனை மீட்டுத்தர வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை. இதற்கிடையில் கடலில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களுக்கு கடல் எல்லைகளை தீர்மானித்துக் கொடுக்கவேண்டும். அதை நம் மீனவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

Next Story