சென்செக்சின் உச்சம் தொழில் வளர்ச்சியின் அறிகுறியா?


சென்செக்சின் உச்சம் தொழில் வளர்ச்சியின் அறிகுறியா?
x
தினத்தந்தி 24 Jan 2021 9:30 PM GMT (Updated: 24 Jan 2021 6:07 PM GMT)

அமெரிக்க நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற முதலீட்டாளரான வர்த்தகமன்னர் வாரன் பபட்டின் பொன்மொழி.

‘‘நீ எவ்வளவு கொடுத்து வாங்குகிறாயோ? அதுதான் விலை; நீ அதிலிருந்து எவ்வளவு திரும்ப பெறுகிறாயோ? அதுதான் மதிப்பு’’ என்பது அமெரிக்க நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற முதலீட்டாளரான வர்த்தகமன்னர் வாரன் பபட்டின் பொன்மொழி. இதுதான் பங்குசந்தையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கான சிறந்த தத்துவமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தொழில் நிறுவனத்துக்கும் பங்குகள் உண்டு. தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை பெருக்குவதற்கு பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, அவர்களை வாங்கவைத்து, நிதி திரட்டுவது வழக்கம். இந்த பங்குகளை பொதுமக்கள் வாங்கி விற்கும் வர்த்தகத்தைத்தான் பங்கு சந்தைகள் நிர்வகிக்கின்றன. அந்தவகையில், இந்திய பங்கு சந்தைகளின் குறியீடுகள்தான் சென்செக்ஸ் என்றும், நிப்டி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1986-ம் ஆண்டுதான் சென்செக்ஸ் என்ற பெயரில் குறியீடு தொடங்கப்பட்டது. சென்சிட்டிவ் மற்றும் இன்டக்ஸ் என்ற 2 ஆங்கில வார்த்தைகளின் கலவை தான் இந்த சென்செக்ஸ். சென்செக்ஸ் இந்தியாவின் பல்வேறு துறைகளில் உள்ள அதிக வர்த்தகம் நடக்கும் 30 பெரிய நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இந்த 30 நிறுவனங்களும் நிலையாக அதில் இருக்காது. ஏதாவது ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்போ, பங்கு மதிப்போ குறைந்துவிட்டால், அதை நீக்கிவிட்டு மற்றொரு அதிக வர்த்தகம் நடக்கும் நிறுவனம் அதில் சேர்க்கப்பட்டுவிடும். இதுபோல நிப்டி என்றால் இந்தியாவில் உள்ள 23 துறைகளிலிருந்து 50 லாபகரமான நிறுவனங்கள் இடம்பெற்று அதன் குறியீடுகளை வகுப்பதாகும். இப்போது சென்செக்ஸ் குறியீடு இதுவரை இல்லாத அளவு 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது.

இதனால் இந்த 30 முக்கிய நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தில் 1986-ம் ஆண்டு ரூ.10 ஆயிரத்தை பங்குகளில் முதலீடு செய்திருக்கும் ஒருவர், இப்போது ரூ.91 லட்சத்தை பெறமுடியும். அதிலும் குறிப்பாக 1990-ம் ஆண்டில் ஆயிரம் என்ற புள்ளியில் இருந்த சென்செக்ஸ், தற்போது 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் மிகவும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால், கொரோனா நேரத்தில் அதாவது கடந்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி 25 ஆயிரத்து 981 புள்ளிகளில் நிலைகொண்டிருந்த சென்செக்ஸ், கடந்த 21-ந்தேதி 50 ஆயிரத்து 127 புள்ளிகளாக இருந்தது. இது உலகையே இந்தியா பக்கம் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 30 நிறுவனங்களின் லாபகரமான பங்குகளை வைத்து சென்செக்ஸ் நிர்ணயிக்கப்பட்டாலும் இந்த புள்ளி உச்சத்துக்கான காரணம், தகவல்தொழில்நுட்பம், மருந்துத்தொழில், நிதி மற்றும் வங்கிபங்குகளின் விலை உயர்வுதான். ஆக இந்த 3 துறைகளின் வளர்ச்சியை வைத்துத்தான் சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறது என்பது நிபுணர்களின் கணிப்பு.

சென்செக்ஸ் உயர்ந்ததினாலேயே நாட்டில் தொழில்வளர்ச்சி அதிகரித்துவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. சென்செக்ஸ் பொதுவாக தொழில்வளர்ச்சியின் எதிர்காலத்தை கணிப்பது என்பது பங்குசந்தை நிபுணர் நாகப்பன் கருத்து. இந்தியாவில் தொழில்வளர்ச்சி ஏற்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளது. உலகநாடுகள் இந்தியாவில் தகவல்தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படத்தக்க தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளது என்று கருதுகிறார்கள். அமெரிக்காவில் ரிசர்வ் வங்கி பூஜ்ஜியம் வட்டி என்று கூறும் வகையில் மிகக்குறைந்த வட்டிக்கு பணம் கொடுக்கிறது. அந்த பணத்தை எடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இந்த குறிப்பிட்ட 3 தொழில்துறைகளில் முதலீடு செய்கிறார்கள். அதன் காரணமாகத்தான் சென்செக்ஸ் இந்த அளவு உயர்ந்துள்ளது. இது நிலையாக இருக்கவேண்டும் அல்லது இன்னும் வளரவேண்டும், குறைந்துவிடக்கூடாது, இதன் வளர்ச்சி புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்கவேண்டும் என்றால், நாட்டில் தொழில்வளர்ச்சி எல்லா துறைகளிலும் உயர்ந்தால்தான் முடியும். இது இல்லையென்றால் சென்செக்சின் இந்த உச்சம் நீர்க்குமிழிதான். ஆனால் உடனே உடைந்துவிடாது என்பது நிபுணர்களின் கருத்து.

Next Story