மக்களின் குறையை தீர்க்க தனி துறை!


மக்களின் குறையை தீர்க்க தனி துறை!
x
தினத்தந்தி 25 Jan 2021 9:30 PM GMT (Updated: 2021-01-26T01:12:32+05:30)

மே மாதத்திற்குள் 16-வது சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து வருகிறது.

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். பிரசார கூட்டங்களில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி கூறுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா-விடியும் வா’, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு’, ‘மக்கள் கிராம சபை கூட்டம்’ என்ற பெயர்களில் தீவிர பிரசாரங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார். இதில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘மக்கள் கிராமசபை கூட்டங்கள்’ இதுவரை 21 ஆயிரம் இடங்களுக்கு மேல் நடந்துவிட்டது. இனி அடுத்தவகையிலான புதிய பிரசாரம் என்ன? என்பதை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு நேற்று பத்திரிகை நிருபர்களிடம் அறிவித்தார்.

அப்போது, ‘தமிழக மக்கள் பிரச்சினைகளை தி.மு.க.வால்தான் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் எல்லா கூட்டங்களிலும் கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு’ என்று கூறினார்.

இந்த உறுதி மொழியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வருகிற 29-ந்தேதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற சந்திப்பை 30 நாட்களில் 234 சட்டசபை தொகுதிகளிலும் நடத்த இருக்கிறார். இந்த கூட்டங்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க படிவங்கள் வழங்கப்பட்டு ஒப்புகை சீட்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ, www.stalinani.com என்ற இணையதளம் வாயிலாகவோ 9171091710 என்ற எண்ணிலோ தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்து இருக்கிறார்.

100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கு தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு, அது என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும், உங்கள் குறைகளை சொல்லுங்கள் நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு நிச்சயமாக வரவேற்கக்கூடியது.

மக்களுக்கு இலவசங்களை தருவதை விட அவர்களின் குறைகளை தீர்ப்பது என்ற மு.க.ஸ்டாலின் உறுதி பாராட்டத்தகுந்தது. இது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி என்று ஒரு பக்கம் எடுத்துக்கொண்டாலும், தமிழக அரசின் அனைத்து துறைகளும், அனைத்து அதிகாரிகளும், பின்பற்ற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அவர்களின் அன்றாட வாழ்வில் தீர்க்கப்பட வேண்டிய குறைகள் இருக்கும் நிலையில், வெறும் இலவசங்களை தந்து பலன் இல்லை. ஆனால் பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளன?, 100 நாட்கள் கழித்த பிறகு அதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டன?, எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன?, எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன?, எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன? என்பதையெல்லாம் வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுவதற்கும், ஒரு வரைமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அப்படி தெரிவிக்கும் பட்சத்தில்தான் மக்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, ஒரு தெளிவான புள்ளிவிவரம் கிடைக்கும் வகையில் இருக்கும். அப்போது தான் மக்களுக்கும் நாம் கோரிக்கை மனு கொடுத்தால் நிச்சயமாக தீர்வு காணப்படும், அது குறித்த பதில் நமக்கு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும்.

Next Story