விவசாயத்தில் மறுமலர்ச்சி!


விவசாயத்தில் மறுமலர்ச்சி!
x
தினத்தந்தி 28 Jan 2021 8:15 PM GMT (Updated: 28 Jan 2021 8:15 PM GMT)

அரசாங்கங்களால் தொழிலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விவசாயத்துக்கு அளிக்கப்படவில்லை என்பது விவசாயிகளுக்கு எப்போதும் ஒரு குறையாகவே இருக்கிறது.

விவசாயமும், தொழிலும் ஒரு நாட்டின் இரண்டு கண்கள். இவை இரண்டும் ஒன்றாக வளர்ந்தால்தான் நாட்டின் முன்னேற்றம் வியக்கத்தக்க அளவில் இருக்கும் என்பது நியதி. ஆனால் அரசாங்கங்களால் தொழிலுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், விவசாயத்துக்கு அளிக்கப்படவில்லை என்பது விவசாயிகளுக்கு எப்போதும் ஒரு குறையாகவே இருக்கிறது. 50 சதவீதம் மக்களுக்கு மேல் வாழ்வு அளிப்பது விவசாயம்.

அதுமட்டுமல்லாமல் எல்லா மக்களுக்கும் உணவு அளிப்பதும் அதுதான். இந்தநிலையில் தங்கள் குறைகளை வெளியே சொல்ல தெரியாத, வாய் இல்லாத பூச்சிகள் விவசாயிகள் என்பது யதார்த்த நிலை.

தற்போது பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 மாதங்களுக்கு மேலாக 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைதான் வலுவாக இருக்கிறதே தவிர, அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற குரல் வலிமை இல்லாமல் நீர்த்து போய் இருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வடமாநில விவசாயிகள் போல வேளாண் சட்டங்களை பற்றி சரியான புரிதல் இல்லையோ? என்பதும் சந்தேகமாக இருக்கிறது.

தமிழக விவசாயிகளின் நிலை என்னவென்றால் மிகவும் கஷ்டப்பட்டு, நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு நல்ல விளைச்சல் இருந்தால் ஆஹா! நாம் பாடுபட்டதற்கு பயன் கிடைத்துள்ளது. நம் கஷ்டமெல்லாம் தீரும் என்று அவர்கள் நினைத்தால், அந்த விளை பொருட்களுக்கு விலை இல்லாத நிலை, அது அவர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.

அதேபோல், சரியான விளைச்சல் இல்லாத நேரத்தில், விலை அதிகமாக இருக்கும்போது இவ்வளவு விலை இருக்கிறதே? நமக்கு மட்டும் நன்றாக விளைச்சல் இருந்திருந்தால், நல்ல வருவாய் ஈட்டி இருக்கலாமே என்றும் ஏங்க வைக்கிறது.

இப்படி பயிர் விளைந்தாலும் சரி, விளையாவிட்டாலும் சரி நஷ்டத்தையே சந்திக்கும் விவசாயியை காப்பாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசாங்கம் இப்போது 22 விளைபொருட்களுக்கு மட்டும் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து பொருட்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.

இந்த குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதோடு அரசாங்கத்தின் பணி முடிந்துவிடவில்லை. எல்லா ஊர்களிலும், எல்லா விவசாயிகளிடமும் இருந்து அவர்கள் விளைவித்த பொருட்களை அந்த குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் அரசு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் வேளாண்துறையும், தோட்டக்கலைத்துறையும் நல்ல கட்டமைப்பு வசதிகளோடு இருக்கிறது. அனேகமாக எல்லா பெரிய ஊர்களிலும் இந்த துறைகளுக்கான அலுவலகங்கள் இருக்கின்றன. இதுதவிர வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அதிகளவில் இருக்கிறது.

எனவே குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கும் நேரத்தில், அந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை வாங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் தனியார் அந்த விளைபொருட்களை வாங்கும்போது, குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு குறையாமல் வாங்கவேண்டும். கூடுதல் விலைக்கு வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம் என்ற அளவில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் விவசாயிகளை பாதுகாக்க பல உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவில் சந்தை விலைக்கு அதிகமான விலையில் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லா பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டால், மக்கள் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை மட்டுமே பயிரிடும் ஒரு எண்ணத்தில் இருந்து லாபம் தரும் மற்ற எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், பழ வகைகள், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களை விளைவிக்கும் சுழல் உற்பத்தி முறைக்கும் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் எல்லா பொருட்களையும் விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கும் அது வித்திடுவதாக அமையும்.

Next Story