நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!


நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!
x
தினத்தந்தி 29 Jan 2021 7:06 PM GMT (Updated: 29 Jan 2021 7:06 PM GMT)

‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்பதற்கு இணங்க, அரசாங்கம் விரைவில் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் 72-வது குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகரம் டெல்லியில் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய உரையும், அதைத்தொடர்ந்து நடந்த கண்கவர் அணிவகுப்பும், ஒவ்வொரு இந்தியனையும் நெஞ்சைநிமிர்த்தி பெருமைப்படச்செய்தது. ஆனால், அதே டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு அங்கமாக நடந்த டிராக்டர் பேரணியில் நடந்த அமளியில், டெல்லி செங்கோட்டையில் ஒருசில விவசாயிகள் அத்துமீறி நுழைந்து, தேசியக்கொடி பறந்துகொண்டிருந்த கம்பத்தின் அருகில், மற்றொரு கம்பத்தில் சீக்கியர்களின் மதக்கொடியான நிஷான் ஷாகிப்பையும், விவசாய சங்கத்தின் கொடிகளையும் ஏற்றிவைத்து, தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்ததாக கூறப்படும் சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

செங்கோட்டையில் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தால், ஆர்ப்பாட்டக்காரர்களை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தியிருக்கலாம். டெல்லி எல்லையில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும்குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இப்படி ஒரு அமைதிவழி போராட்டத்தை நடத்தமுடியுமா? என்று உலகமே அதிசயத்தக்க வகையில் போராட்டங்களை நடத்திவந்தனர். அரசாங்கத்தோடு 10 சுற்று பேச்சுவார்த்தை நடந்தபிறகும், இன்னும் வெற்றிகிடைக்காத நிலையில், குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று, போராட்டம் நடத்தும் விவசாயசங்கத்தினர் அறிவித்தனர்.

காலையில் ராஜபாதையில் குடியரசு தினவிழா நடக்கும்நேரத்தில், டிராக்டர் பேரணியை நடத்தவேண்டாம் என்றும், பிற்பகல் 12 மணியிலிருந்து 5 மணிவரை டிராக்டர் பேரணி நடத்தலாம், 3 வழியாக மட்டும் செல்லவேண்டும் என்று 37 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் வகையில், அந்த 3 வழியில் மட்டும் அனுமதித்து, மற்றவழிகளில் யாரும் நுழையாத வகையில், கடும் போலீஸ் பாதுகாப்பு, துணை ராணுவப்படை மற்றும் ராணுவத்தை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும்.

போலீசார் விதித்த நிபந்தனைகளை எல்லாம் விவசாயிகள் சங்கத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில், போராட்டக்காரர்களில் சிலர் நிபந்தனைகளை மீறி, தங்கள் டிராக்டர்களை எடுத்துக்கொண்டு காலையிலேயே நுழைந்ததும், சில டிராக்டர்கள் பாதை தெரியாமலும், எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை வழிகாட்ட யாரும் இல்லாத நிலையிலும் பல வழிகளில் டெல்லிக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நேரத்தில் வன்முறை வெடித்தது. வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போனவுடன் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, மாலையில் டிராக்டர் பேரணியை முடித்து போராட்டம் நடந்த எல்லைப்பகுதிகளுக்கு விவசாயிகள் திரும்ப வரவேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்ற அறிவிப்பு கைவிடப்பட்டது. இதற்கு பதிலாக இன்றைய தினம் காந்தி இறந்தநாளில் நாடு முழுவதும் குடியரசு தினத்தன்று நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

2 மாத காலமாக டெல்லி எல்லையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எந்த முடிவும் காணப்படவில்லையே என்ற சலிப்பு, விரக்தி, கோபம், ஆத்திரத்தில் இளைஞர்கள் இந்த சம்பவங்களை அரங்கேற்றி இருக்கலாம். எத்தனை நாட்கள்தான் விவசாயிகள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு இப்படி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவது?. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறுவது போல், ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்பதற்கு இணங்க, அரசாங்கம் விரைவில் விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஒரு நல்ல முடிவை எடுத்து, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பணிகளை செய்ய செல்வதற்கான வழிகளை உருவாக்குவதே சாலச்சிறந்தது.

Next Story