பொருளாதார வளர்ச்சியை மக்கள் உணர வேண்டும்!


பொருளாதார வளர்ச்சியை மக்கள் உணர வேண்டும்!
x
தினத்தந்தி 31 Jan 2021 6:50 PM GMT (Updated: 2021-02-01T00:20:47+05:30)

பொருளாதார வளர்ச்சியை தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் உள்பட சாதாரண பொதுமக்களும் உணரும்போதுதான் அதற்கு உண்மையான பலன் கிடைக்கும்.

நாடாளுமன்றத்தில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2020-2021-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். மத்திய அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியன் தலைமையில் தயாரிக்கப்பட்ட 355 பக்கங்கள் கொண்ட பொருளாதார ஆய்வறிக்கை இது. நடப்பு நிதியாண்டில், நாட்டிலுள்ள பொருளாதார நிலைகுறித்து அலசி ஆராயப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், வருகிற நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்? என்பதையும் ஆலோசனைகளாக கூறியுள்ளார்.

கொரோனா தொடக்க நேரத்தில் மரபு சார்ந்த ஊக்க சலுகைகள் வழங்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், ஒரு வாகனத்தை ஓட்டும்போது, ஒரே சமயத்தில் ஆக்சிலேட்டரிலும், பிரேக்கிலும் கால்வைத்து அழுத்த முடியாது. அப்படி செய்தால், எரிபொருள்தான் வீணாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 7.7 சதவீதம் வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி, ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகும், தடுப்பூசிபோடும் பணிகள் வேகமாக நடப்பதற்கு பிறகும், வீறுகொண்டு எழுந்து, அடுத்த நிதியாண்டில் 11 சதவீத வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி, சமீபத்தில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியோடு ஒப்பிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டைபோல பொருளாதாரத்திலும் நேரம் என்பது மிக முக்கியமானது. கிரிக்கெட் விளையாட்டில், வீசப்பட்ட ஒரு பந்து எப்படி போகிறது? என்று கணிக்க முடியாத வகையில், அதிகமாக சுழலும்போது, ஒரு நிச்சயமற்ற தன்மை மிகுந்திருக்கும். அப்போது மிகுந்த எச்சரிக்கையோடு விளையாடவேண்டும். அந்த நேரங் களில், சரியான பந்துகளை மட்டும் அடித்து விளையாடு வதிலும், விக்கெட்டை தக்கவைத்து க்கொள்வதிலும்தான் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். அடிலெய்டில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு தோற்றுப்போன நிலையில், அடுத்து நடந்த போட்டியில் சிலிர்த்து எழுந்து ஆஸ்திரேலியாவை தோற்கடித்து மகத்தான வெற்றியை பெற்றது. பந்து நிச்சயமற்ற தன்மையில் சுவிங்காகும்போது நீங்கள் புஜாரா போல், தற்காப்பு ஆட்டம் ஆடவேண்டும். பந்தின் சுவிங் நின்றுபோன பிறகு ரிஷாப் பண்ட் போல அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கவேண்டும். அதே போலத்தான் இந்திய பொருளாதார நிலையும், கொரோனா நேரத்தில் தற்காப்பு ஆட்டத்தை ஆடியது. இப்போது மீண்டும் நிதிநிலையை மேம்படுத்த ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆட இது சரியான தருணம் என்று கூறியுள்ளது.

எனவே, வரும் ஆண்டில் ரிஷாப் பண்ட்டின் ஆட்டம்போல, மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அதிரடியாக இருந்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் ஒளிவிளக்கை பட்ஜெட் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளால் ஒரு லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்குமுள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு 2 சதவீதம் உபரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. நிதி பற்றாக்குறையை பற்றி கவலைப்படாமல், வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது.

வேளாண் சட்டங்கள், இந்திய விவசாயம் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளுக்கு தீர்வே தவிர, சிலர் கூறுவதுபோல சிக்கல் அல்ல என்று தெரிவித்திருப்பது சற்று விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் விலையை உயர்த்தவேண்டும், மானியங்களுக்காக வழங்கப்படும் செலவை கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறியிருப்பது இந்த சூழ்நிலையில் ஏற்புடையதல்ல. கொரோனா நேரத்தில் 12 கோடி பேருக்கு மேல் வேலையிழந்தது பற்றியோ, தனியார் முதலீடுகள் குறித்தோ, வரி குறைப்பு குறித்தோ எந்த கருத்தும் கூறாதது ஏமாற்றமளிக்கிறது.

மொத்தத்தில் நம்பிக்கையூட்டும் வழிகளும் தெரிகிறது. சிலவற்றில் ஏமாற்றமும் தெரிகிறது. ஆனால், ஆய்வறிக்கையில்கூறும் பொருளாதார வளர்ச்சியை தொழில் நிறுவனங்கள், வணிகர்கள் உள்பட சாதாரண பொதுமக்களும் உணரும்போதுதான் அதற்கு உண்மையான பலன் கிடைக்கும்.

Next Story