விரும்புகிறவர்களுக்கெல்லாம் தடுப்பூசி


விரும்புகிறவர்களுக்கெல்லாம் தடுப்பூசி
x
தினத்தந்தி 1 Feb 2021 9:33 PM GMT (Updated: 2021-02-02T03:03:11+05:30)

கொடிய கொரோனாவின் ஆட்டம் இன்னும் முடியவில்லை. கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க வேண்டு மென்றால், தடுப்பூசி ஒன்றுதான் சரியான தீர்வு என்ற வகையில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது.

தற்போது புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில், இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிக்கப்பட்டு ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ என்ற தடுப்புமருந்தும் 3-ம் கட்ட பரிசோதனை முடியாத நிலையிருந்தும், அதனால் கிடைக்கும் பலன் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இப்போது சீரம் இன்ஸ்டிடியூட் சார்பில் ‘கோவோவேக்ஸ்’ என்ற பெயரில் மற்றொரு தடுப்பூசி மருந்து, ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது அமெரிக்காவில் உள்ள ‘நோவோவேக்ஸ்’ என்ற தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து தயாரிக்கும் மருந்தாகும். தமிழ்நாட்டில் முதல்கட்டமாக அரசு-தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்த ஊசிபோடும் பணி கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. 6 லட்சம் பேருக்கு ஊசி போடுவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 5 லட்சத்து 19 ஆயிரம் பேர் தடுப்பூசி போட ‘கோவின்’ செயலியில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் 17 நாட்களாகியும் மருத்துவபணியாளர்களே அதிகளவில் இந்த ஊசியை போடுவதற்கு முன்வரவில்லை. முதல் 15 நாட்களில், 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு போடுவதற்கு தடுப்பூசிகள் தயாராக இருந்தநிலையில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 543 பேர் மட்டுமே போட்டிருக்கிறார்கள். பலருக்கு ‘கோவேக்சின்’ மருந்தை போட தயக்கமிருக்கிறது. ஏனெனில் ‘‘எங்களுக்கு ‘கோவிஷீல்டு’ மருந்துதான் வேண்டும், ‘கோவேக்சின்’ மருந்து வேண்டாம்” என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. அந்தந்த மருத்துவமனைகளில் என்ன தடுப்பூசி இருக்கிறதோ, அதைத்தான் போட்டுக்கொள்ள முடியும். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

யாருக்கு எந்த தடுப்பூசி வேண்டுமோ, அதைக்கேட்டு போட்டுக்கொள்ள உரிமை வேண்டும். மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே போட்டுக்கொண்டிருக்காமல், போலீசார், வருவாய்த்துறை, பத்திரிகைத்துறை போன்ற முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி இப்போது தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருந்துகள் தயாராக உள்ளன. சீரம் இன்ஸ்டிடியூட் 5 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகளை கடந்த டிசம்பர் மாத இறுதியிலேயே தயாரித்து விட்டது. மேலும் தினமும் 24 லட்சம் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் உற்பத்தித் திறன் அந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. தடுப்பூசியை பொறுத்தமட்டில் ஒரு பாட்டிலை திறந்தால் 10 பேருக்கு ஊசி போட முடியும். 4 மணி நேரத்துக்குள் போட்டுவிட வேண்டும். இல்லையென்றால் மருந்து கெட்டுவிடும். குளிர்சாதன வசதிகளோடு இந்த தடுப்பூசியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும், 6 மாத காலத்துக்குள் இந்த தடுப்பூசியை போட்டுவிட வேண்டும். அதன் காலக்கெடு அவ்வளவுதான். 6 மாதத்துக்கு பிறகு காலாவதியாகி விடும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்தாண்டு இறுதிக்குள் மொத்த மக்கள்தொகையில் 20 சதவீதமான, 1 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியிருக் கிறார். அந்தவகையில் இப்போது போடப்படும் வேகம் நிச்சயமாக போதாது. மருத்துவ பணியாளர்களுக்கு மட்டும் அல்லது முன்கள பணியாளர்களுக்கு மட்டும் என்று வகைப்படுத்தாமல், விருப்பப்படும் எல்லோருக்கும் தடுப்பூசி போட வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு முன்கள மற்றும் மருத்துவ பணியாளர்களுடன், மூத்த குடிமக்களையும் தடுப்பூசி போட அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே தடுப்பூசி போடும் வேகம் இன்னும் அதிகமாக வேண்டுமென்றால், இந்த ஆண்டுக்குள் 20 சதவீத மக்களுக்கு போட்டு முடிக்க வேண்டும் என்றால், எல்லோருக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதே சாலச்சிறந்ததாகும்.

Next Story