சொன்னது ஒன்று, நடப்பது ஒன்றா?


சொன்னது ஒன்று, நடப்பது ஒன்றா?
x
தினத்தந்தி 5 Feb 2021 7:42 PM GMT (Updated: 2021-02-06T01:12:13+05:30)

முதிர்வயதில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டிய கஷ்டத்தில் இருந்தாவது விடுபட்டோமே என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், ஒரு வங்கிக்கு மேல் பல வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கும் இந்த சலுகை கிடையாது. அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தான் வேண்டும்’ என்ற தகவல் அதிர்ச்சியூட்டுகிறது.

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் வருமான வரியில் பல சலுகைகளை எதிர்பார்த்தனர். நாட்டின் வருவாயில் கணிசமான அளவு பங்களிப்பை தருவது வருமான வரி. ஒரு ரூபாய் அரசு வருவாயில் சரக்குசேவை வரியில் இருந்து 15 காசும், வருமான வரியில் இருந்து 14 காசும், பெருநிறுவன வரியில் இருந்து 13 காசும் கிடைக்கிறது. ஆக அரசின் ஒரு ரூபாய் வருவாயில் 42 காசுகளை தரும் இந்த 3 வரிகளும் பொன் முட்டையிடும் வாத்தாகத்தான் மத்திய அரசாங்கத்தால் கருதப்படவேண்டும். இந்த வாத்துகளுக்கு நல்ல உணவு அளித்து சரியாக பராமரித்தால்தான் பொன் முட்டைகள் ஒழுங்காக கிடைத்து கொண்டிருக்கும். அந்தவகையில் 2014-ம் ஆண்டு 3 கோடியே 31 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நிலையில் 2020-ம் ஆண்டு6 கோடியே 48 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது ஒரு பிரமாண்ட அதிகரிப்பு ஆகும். நேரடி வரிவசூல் மூலம் இந்த ஆண்டு இதுவரை ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஆனால் இந்த நிதியாண்டுக்கான இலக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.

இப்போது அள்ளிக்கொடுக்க வேண்டிய நேரத்தில், கிள்ளிக்கொடுப்பது போல 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு சிறிய சலுகையை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறும்போது, ‘இப்போது நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நடக்கிறது. இந்த நேரத்தில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களின் சுமையை குறைக்கப்போகிறோம். பென்சன் மற்றும் வட்டி வருவாயை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த பணத்தை அவர்களுக்கு வழங்கும் வங்கிகளே வருமான வரியை கழித்துவிடும்’ என்று குறிப்பிட்டார். ஆக மூத்த குடிமக்களுக்கு வரி உண்டு. ஆனால் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்ற அளவில்தான் இந்த அறிவிப்பு இருந்தது.

சரி ஒன்றும் இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததே, இந்த முதிர்வயதில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டிய கஷ்டத்தில் இருந்தாவது விடுபட்டோமே என்று மூத்த குடிமக்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, ‘வருமான வரியில் இருந்து ரீபண்ட் கோருபவர்களுக்கும், ஒரு வங்கிக்கு மேல் பல வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கும் இந்த சலுகை கிடையாது. அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தான் வேண்டும்’ என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். இது கொடுத்த சலுகையை உடனே பறிப்பதுபோல் ஆகிவிட்டது. மூத்த குடிமக்களின் மகிழ்ச்சி ஒரு நாளோடு முடிந்துவிட்டது. பொதுவாக உழைத்து வருவாய் ஈட்டவேண்டிய காலத்தில் தங்கள் சேமிப்புகளை பல சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வார்கள். தபால்அலுவலகங்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்வார்கள். தானாகவே வங்கி கணக்கில் வட்டி வந்துவிடும். அவர்கள் எங்கு பண முதலீடு செய்திருந்தாலும் நிச்சயமாக வருமான வரியை பிடித்தம் செய்துவிடமுடியும். எனவே நிதி மந்திரி பட்ஜெட்டில் அறிவித்ததுபோல, 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் இவர்களுக்கு மட்டும்தான் சலுகை. மற்றவர்களுக்கு சலுகை இல்லை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்குவது நல்லது அல்ல. எல்லோருக்கும் இந்த சலுகையை வழங்கவேண்டும் அல்லது வருமான வரியில் சலுகை கொடுக்க வேண்டிய வயதில் உள்ள 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டாம் என்ற சலுகையையாவது கொடுக்கலாமே!.

Next Story