விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பயிர் கடன் ரத்து!


விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பயிர் கடன் ரத்து!
x
தினத்தந்தி 7 Feb 2021 9:12 PM GMT (Updated: 2021-02-08T02:42:25+05:30)

கடன்பட்டு கலங்கிக் கொண்டிருந்த விவசாயிகளிடம், “நீ கவலைப்படாதே.. உன் கடனை ரத்து செய்கிறேன்” என்று மகிழ்ச்சியடைய வைத்துள்ளார், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிச்சயமான மாத வருமானம் உண்டு. ஆனால், மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலாக உள்ள விவசாயிகளுக்கு மட்டும் நிச்சய வருமானம் கிடையாது. கடும் புயல் அடித்தாலும், கனமழை பெய்தாலும், வறட்சி ஏற்பட்டாலும், பயிர்கள் சேதமடைந்து, செலவழித்த பணம் எல்லாமே வீணாக போய்விட்டதே என்று தலையில் கைவைத்து கதறும் நிலைக்கு தள்ளப்படுபவர் விவசாயி.

இந்தநிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பக்கம் கொரோனா தாக்குதல், அடுத்த பக்கம் அடுத்தடுத்து வந்த நிவர், புரெவி புயல் தாக்குதல், மற்றொரு பக்கம் கனமழையினால் ஏற்பட்ட அழிவு என்று பலமுனை தாக்குதலில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பயிர்கள் எல்லாம் அழிந்து கடும் கஷ்டத்தில் மூழ்கியிருந்த விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்க்காமல், 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.1, 717 கோடியை இடுபொருள் உதவித்தொகையாக வழங்கி, அந்தத்தொகை தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந்தேதி சட்டசபையில், “கீழே விழுந்தவர்களை மேலே தூக்கிவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் மேலும் வலுப்பெற உதவி செய்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில், எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கடன் நிலுவைத்தொகையான ரூ.12, 110 கோடியும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் ஒரு விவசாயி. விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன். வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலை தீர்ப்பதே என் முதல் கடமை. பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல், அரசாணையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வரும் பட்ஜெட்டில் அரசு ஏற்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப் படும்” என்று அறிவித்தது, கடனில் மூழ்கியிருந்த விவசாயிகளை கைதூக்கிவிட்டதுபோல இருக்கிறது.

“கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று ராமாயணத்தில் கம்பர் கூறியதுபோல, கடன்பட்டு கலங்கிக் கொண்டிருந்த விவசாயிகளிடம், “நீ கவலைப்படாதே.. உன் கடனை ரத்து செய்கிறேன்” என்று மகிழ்ச்சியடைய வைத்துள்ளார், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இது குறுகிய காலக் கடன். இதுபோல நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஏற்கனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் பாக்கியிருந்த நிலையில், புதிய கடன்கள் வாங்க முடியாமல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் கடன் வாங்கியுள்ளார்கள். மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, அந்த கடன்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சில விவசாயிகள் கஷ்டப்பட்டேனும் வாங்கிய பயிர் கடனை திருப்பி கட்டி வருகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு கட்டிய விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில், அவர்கள் கட்டிய கடன் தொகையை திருப்பி கொடுத்தால், அவர்களுக்கு கிடைத்த பரிசு என்று எடுத்துக்கொள்ளலாம்.

சில விவசாயிகள் மிக ஆக்கப்பூர்வமான யோசனைகளை கூறியுள்ளனர். கடன் ரத்து என்பது தற்காலிக நிவாரணம். விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு தரவேண்டும் என்றால், குறைந்தபட்ச ஆதார விலையை இன்னும் உயர்த்தி, பயிர் காப்பீட்டு திட்டத்தை அனைத்து விவசாயிகளும் நடைமுறைப்படுத்த செய்து, நல்ல நீர்ப்பாசன திட்டங்களை வகுத்துத்தந்து, குறைந்த விலையில் இடுபொருட்களை தந்தாலே போதும். மொத்தத்தில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை விவசாயிகளுக்கு வராதவகையில் உரிய திட்டங்களை மேற்கொண்டாலே விவசாயம் தழைக்கும், விவசாயிகளின் வாழ்வு செழிக்கும்.

Next Story