வீடு தேடி வருகிறது, பழனி கோவில் பிரசாதம்!


வீடு தேடி வருகிறது, பழனி கோவில் பிரசாதம்!
x
தினத்தந்தி 8 Feb 2021 10:29 PM GMT (Updated: 2021-02-09T05:19:30+05:30)

தமிழ்நாடு இறை பக்தி மிகுந்த மாநிலமாகும். பண்டைய காலத்தில் இருந்தே, “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்ற பழமொழிகள் மக்களின் நெஞ்சில் பதிந்திருக்கிறது. கோவிலை சுற்றியுள்ள தெருக்களுக்கு சன்னதி தெரு என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் பல கோவில்கள் உண்டு. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் மட்டும் 44 ஆயிரத்து 121 திருக்கோவில்கள், மடங்கள் இருக்கின்றன. இதைத்தவிர, லட்சக்கணக்கில் சிறு, சிறு கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலி லும் சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பும் பக்தர்களுக்கு விபூதி அல்லது குங்குமத்துடன் ஒவ்வொரு வகையான பிரசாதமும் வழங்கப்படுகிறது. இறைவனின் அருட்பார்வை யுடன் தயாராகும் விபூதியும், பிரசாதங்களும் பெரிய ஆசிர்வாதம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவை அனைத்தும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

பொதுவாக, கோவில்களில் சாமிக்கு நைவேத்தியமான உணவு வகைகள், அந்தந்த கோவிலுக்கு என உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரிக்கப்பட்டு, தெய்வங்களுக்கு படைக்கப்படுகின்றன. தெய்வங்களால் ஏற்றுக்கொள்ளப் பட்ட பிரசாதங்களை பக்தர்களுக்கும் வழங்குகிறார்கள். திருப்பதி கோவிலில் லட்டு, பழனி கோவிலில் பஞ்சாமிர்தம், மதுரை அழகர் கோவிலில் சம்பா தோசை என்று வித்தியாசமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோன்று, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ரெங்கநாதருக்கு தேங்காய் துருவலும், துலுக்க நாச்சி யாருக்கு ரொட்டி, வெண்ணை, கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணைப் பிரசாதமும் உண்டு. திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

தமிழ்நாட்டில், முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆன்மிக தலங் களுக்கு, தமிழ்நாடு முழுவதில் இருந்தும், ஏன் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு, அங்கு வழங்கப்படும் விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, வீட்டிற்கும் கொண்டுவந்து, தினமும் பூசிக்கொள்வார்கள். கொரோனா ஏற்பட்டுள்ள சூழ்நிலை யில், பக்தர்களால் அந்தந்த கோவில்களுக்கு சென்று வழி பட முடியவில்லையே? என்ற ஒரு மனக்குறை இருக்கிறது.

ஆனால், பழனி தண்டாயுதபாணி கோவிலில் இந்தக் குறையை போக்க ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி, ரூ.250 கட்டணம் செலுத்தும் பக்தர்களுக்கு கோவிலில் இயற்கையாக தயாரிக்கப்படும் 10 கிராம் விபூதி, பிரசித்திபெற்ற பிரசாதமான அரை கிலோ பஞ்சாமிர்தம், 6x4 அங்குல அளவில் தண்டாயுதபாணி சாமியின் ராஜ அலங்கார படம் ஆகியவை அனுப்பிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை பார்சல் செய்து அனுப்பி வைக்கும் பணிகளை தபால் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. கோவில் நிர்வாகம் பஞ்சாமிர்தம், விபூதி, படத்தை நன்றாக ‘சீல்’ செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளது.

பழனி கோவிலை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்க முடியும். பிரசாதம் பெறுவதற்கான பணத்தை இணையதளம் மூலம் கட்டுவதற்கு, விரைவில் தபால் துறை அறிவிப்பு வெளியிடும். ஆனால், பணம் கட்டும் முறையை இன்னும் எளிதாக்கும் வகையில், வீட்டிற்கு வந்து பிரசாதத்தை கொடுக்கும் போது தபால் துறை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு. கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை இருந்தாலும், கோவில் பிரசாதங்களை வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளலாம் என்ற முறையில் பழனி கோவில் அறிவித்துள்ள இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.

இதுபோல, மற்ற அறுபடை வீடுகளிலும், புகழ்பெற்ற அம்மன் கோவில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதத்தை அவர்கள் வீட்டிற்கே அனுப்பும் திட்டங்களை செயல் படுத்தினால், கோவிலுக்கு போக முடியவில்லையே என்ற மனக்குறையுடன் இருக்கும் பக்தர்களின் கவலை யெல்லாம் நீங்கும். பழனி முருகன் வழிகாட்டிவிட்டார். இனி மற்ற கோவில்களும் இந்த நல்லமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story