பசுமை வரி ஒரு கசப்பான மருந்து!


பசுமை வரி ஒரு கசப்பான மருந்து!
x
தினத்தந்தி 10 Feb 2021 1:33 AM GMT (Updated: 10 Feb 2021 1:33 AM GMT)

மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை இடைவிடாமல் செய்யும் செயல், மூச்சு விடுவதுதான். மூச்சு அடங்கும்போது அவன் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை இடைவிடாமல் செய்யும் செயல், மூச்சு விடுவதுதான். மூச்சு அடங்கும்போது அவன் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. ஆக, அவன் மூச்சுவிடும் காற்று சுத்தமான காற்றாக இருக்கவேண்டும். மாசடைந்த காற்று அவன் நுரையீரலை தாக்கி, ஏராளமான நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது. உலகமே இப்போது சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்கவேண்டும் என்பதில், அதிக கவனமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு முக்கியமான காரணம், காற்றில் ஏற்படும் மாசுதான். காற்றில் மாசு என்பது தானாக உருவாவதில்லை. சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறது.

இந்தநிலையில், மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையினால்தான் பெருமளவு காற்றில் மாசு ஏற்படுகிறது. மனித வாழ்க்கைக்கு மோட்டார் வாகனங்கள் மிகவும் அத்தியாவசிய தேவையாகும். ஆனால், பழைய மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைதான் அதிகளவு மாசை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்ட உண்மையாகும். மோட்டார் வாகனங்கள், பெட்ரோல், டீசல் என்ற இரு எரிபொருட்களால் பெரும்பாலும் இயக்கப்படுகிறது.

இந்த எரிபொருள் எரிந்துதான் மோட்டார் வாகனங்களை ஓடச்செய்கிறது. அப்போது அந்த வாகனங்கள் வெளியேற்றும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் மனிதனுடைய நுரையீரலை வெகுவாக பாதிக்கின்றன. மேலும் ஓசோன் படலத்தில் துவாரம் விழுவதற்கும் இது காரணமாகிவிடுகிறது. இந்தநிலையில், மோட்டார் வாகனங்களை தடைசெய்வது என்பது ஒருபோதும் இயலாத காரியம். ஆனால், பழைய வாகனங்கள் பயன்பாட்டை குறைப்பது காலத்தின் கட்டாயம். மனிதகுல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது அவசியம்.

எனவே, பழைய கார்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பசுமை வரி விதிக்கும் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளது. விரைவில் மாநிலங்களின் கருத்துகளைக்கேட்க இந்தத்திட்டம் அனுப்பப்பட இருக்கிறது. இதன்படி, 8 ஆண்டுகளுக்கும் மேலான போக்குவரத்து வாகனங்கள், தகுதிச் சான்றிதழ்களை பெறவரும் நேரத்தில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம் வரை வரி வசூலிக்கவும், 15 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர் வைத்திருக்கும் சொந்த வாகனங்களுக்கு 8 சதவீதம் வரி விதிக்கவும், பஸ்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு குறைவான வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி போன்ற அதிக மாசு உள்ள நகரங்களில் 50 சதவீதம் வரை பசுமை வரி விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதில், பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு தனித்தனி விகிதத்தில் வரி வசூலிக்கப்படும். ஏனெனில், காற்று மாசு 66 சதவீதம் டீசல் வாகனங்களால்தான் ஏற்படுத்தப்படுகிறது என்று சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த பசுமை வரியிலிருந்து மின்சார வாகனங்கள், இயற்கை எரிவாயு, எல்.பி.ஜி. கியாஸ் ஆகியவற்றால் ஓடும் வாகனங்கள், டிராக்டர்கள், அறுவடை எந்திரங்கள், உழவு மோட்டார்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

காற்று மாசால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பசுமை வரி என்பது அத்தியாவசிய தேவையாகும். எல்லோருமே மோட்டார் வாகனங்களை நன்றாக பராமரித்து வைத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் சொந்த வாகனங்களுக்கும், 8 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் போக்குவரத்து வாகனங்களுக்கும் கூடுதல் வரி விதிப்பு என்பது நிச்சயமாக நடுத்தர வர்க்கத்தினரால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், டாக்டர்கள் கொடுக்கும் சில மருந்துகள் கசப்பான மருந்துகளாக இருந்தாலும், உடலில் ஏற்பட்டுள்ள நோயை தீர்க்க அது கண்டிப்பாக தேவை என்றவகையில், காற்று மாசை ஏற்படுத்தும் இந்த வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு என்பது நிச்சயமாக தேவையாகும்.

பழைய மோட்டார் வாகனங்களை உடைத்து நொறுக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு, இந்த வரி விதிப்பு செயல்வடிவம் கொடுக்கும் வழியை திறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story