ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு


ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு
x
தினத்தந்தி 10 Feb 2021 10:00 PM GMT (Updated: 2021-02-11T02:12:36+05:30)

தமிழ்நாட்டில் முன்பெல்லாம் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு‘, ‘ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை‘ என்று இந்தியா முழுமைக்கும் ஒரே திட்டங்கள் என்ற நோக்கில் செயல்பட்டுவரும் மத்திய அரசாங்கம், 2016-ம் ஆண்டில் நாடுமுழுவதும் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘நீட்‘ தேர்வை அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் எங்களுக்கு ‘நீட்‘ தேர்வு வேண்டாம் என்று எவ்வளவோ எதிர்ப்புகள் கிளம்பியும், நீதிமன்றத்தின் வாசல் கதவுகளை தட்டியும், நீட் தேர்வை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு அமலுக்கு வந்துவிட்டது. தமிழக மாணவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இந்த தேர்வை எழுதமுடியாமல் பெரும் இன்னலுக்குள்ளானார்கள். ஏனெனில் ஒரேநேரத்தில் பிளஸ்-2 தேர்வுக்கும் படிக்கவேண்டும், நீட் தேர்வுக்கும் படிக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் நீட் தேர்வுக்கு தனிபயிற்சியும் வேண்டும் என்ற வகையில், வசதிபடைத்தவர்கள் தனியார் பயிற்சி நிலையங்களில் படித்து தங்களை தகுதிப்படுத்தி கொண்டார்கள். வசதியில்லாத மாணவர்களுக்கு அரசு பள்ளிக்கூடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன என்றாலும், இதில் படித்த மாணவர்களால் பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை என்பது யதார்த்த உண்மை. எப்படியும் நான் டாக்டர் ஆவேன் என்ற ஆசையில் இருக்கும் மாணவர்கள் ஒருமுறை நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும், அடுத்தாண்டு தேர்வை எழுதி டாக்டர் ஆவேன் என்ற முயற்சியில் சில மாணவர்கள் உற்சாகமாக படித்துவிடுகிறார்கள். பல மாணவர்கள் என் முயற்சி வீணாகிவிட்டதே என்று மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள். நீட் தேர்வை அதிகபட்சமாக 3 முறை எழுதலாம். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக ஜே.இ.இ. என்று கூறப்படும் இணை நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

2019-ம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வு ஆண்டுக்கு ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இதை 4 முறை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக மத்திய கல்வி மந்திரி சமீபத்தில் அறிவித்தார். ஜே.இ.இ. தேர்வுக்கு ஒரு சலுகை, அது நீட் தேர்வுக்கு கிடையாதா?, ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா? என்று மாணவர்கள் மனக்குறையோடு இருந்தனர். இந்தநிலையில் இந்தாண்டு முதல் ஜே.இ.இ. தேர்வில் உள்ள நடைமுறையைபோல நீட் தேர்வையும் 2 முறை நடத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, 2 தேர்வையும் மாணவர்கள் எழுதலாம், எதில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ? அந்த மதிப்பெண்ணே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மனஉளைச்சலை போக்க மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

இதற்கான தேர்வு தேதிகள் சற்று காலஅவகாசம் கொடுத்து நடத்தப்படவேண்டும். ஏனெனில் முதல் தேர்வில் சரியாக எழுதாத மாணவர்கள், தங்களை தயார்படுத்திக்கொள்ள 2-வது தேர்வை எழுதும் முன்பு சிலநாட்கள் அவகாசம் வேண்டும். நீட் தேர்வு எழுத்து தேர்வாகவே நடைபெற இருக்கிறது. இவ்வளவு செய்த மத்திய அரசாங்கம் இன்னும் ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவேண்டும் என்று மாணவர்கள் வேண்டுகிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வு வழக்கமான பாடத்திட்டத்தின்படிதான் நடத்தப்படும் என்று தெரிகிறது. தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கூடங்களை இந்த கல்வியாண்டில் நடத்தாத சூழ்நிலையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பிளஸ்-2 வகுப்புக்கு 30 முதல் 40 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து கேள்விகளை கேட்டால் நிச்சயமாக மாணவர்களால் எழுதமுடியாது. இதையும் கருத்தில்கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story