அன்பு ததும்பிய அரசியல் நாகரிகம்!


அன்பு ததும்பிய அரசியல் நாகரிகம்!
x
தினத்தந்தி 11 Feb 2021 9:30 PM GMT (Updated: 11 Feb 2021 9:17 PM GMT)

மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை, “இதுதான் இந்தியா, இதுதான் எங்கள் அரசியல் நாகரிகம்” என்று உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு உணர்ச்சிகரமான பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.

காஷ்மீர் மாநிலத்தில் முதல்-மந்திரியாகவும், 40 ஆண்டுகள் நாடாளுமன்ற அனுபவமும் கொண்டவர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத். இவர் மாநிலங்களவையில் 28 ஆண்டுகள் பதவிவகித்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றியவர். தற்போது அவருடைய பதவிகாலம் வருகிற 15-ந்தேதியோடு முடிவடைகிறது. இவருக்கும், மற்ற 3 உறுப்பினர்களுக்கும் பிரியாவிடை அளிக்கும் கூட்டம் மாநிலங்களவையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி மிகவும் உருக்கமாக பேசினார். அவர் கண்ணீர் வடித்ததை பார்த்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நெக்குருகி போனார்கள்.

2006-ம் ஆண்டு நரேந்திரமோடி குஜராத் முதல்-மந்திரியாகவும், குலாம்நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாகவும் இருந்தநேரத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 8 குஜராத் மாநில பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அப்போது முதல்-மந்திரியாக இருந்த குலாம்நபி ஆசாத், குடும்ப உறுப்பினர்களை இழந்ததுபோல, நரேந்திரமோடிக்கு கண்ணீர்வடித்துக்கொண்டே அந்த தகவலை சொன்னதும், ராணுவ மந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் இறந்தவர்கள் உடலை குஜராத் கொண்டுவர ராணுவ விமானம் வேண்டும் என்று கேட்டதும், உடனடியாக அவர் தந்ததையும் நினைவுகூர்ந்த நரேந்திரமோடி, கண்ணீர்மல்க மிகவும் தழுதழுத்த குரலில் குலாம்நபி ஆசாத்தின் மனிதாபிமானமிக்க செயலை உருக்கமாக கூறினார். இதேபோல், இறந்தவர்கள் உடல்களை விமானத்தில் அனுப்ப விமானநிலையத்தில் இருந்து பேசியதையும் நினைவுகூர்ந்தார்.

இந்தநேரத்தில், பிரதமரின் கண்களில் வழிந்த கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மிக தழுதழுத்த குரலில் பேசிய அவரால் உணர்ச்சியை அடக்கமுடியாமல், சிலமடக்கு தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திய பிறகுதான் மீண்டும் பேசமுடிந்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் கடமைகள்போல குலாம்நபி ஆசாத் செய்தார் என்று கூறிவிட்டு, பதவிகள் வரும்-போகும். அதிகாரங்கள் வரும்-போகும். ஆனால் அதை எவ்வாறு கையாள்வது? என்பதை குலாம்நபி ஆசாத்திடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறும்போது, மீண்டும் கண்ணீரை துடைத்துக்கொண்டே குலாம்நபி ஆசாத்தை நோக்கி, நரேந்திரமோடி ‘சல்யூட்’ அடித்தது எல்லோரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது. அப்போது குலாம்நபி ஆசாத்தும் பிரதமரை நோக்கி பதிலுக்கு கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தார். “உங்களை நான் ஓய்வுபெறவிடமாட்டேன். உங்களிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்பேன். உங்களுக்காக என்வீட்டின் கதவு எப்போதும் திறந்திருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆசாத்தின் இடத்தை வேறுஒருவரால் நிரப்புவது கடினம்” என்று பிரதமர் கூறினார்.

தனக்கு அளித்த பாராட்டுகளுக்கு நன்றிதெரிவித்து குலாம்நபி ஆசாத், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட குஜராத் மக்களை பற்றி பேசும்போது, கண்ணீர்மல்க மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மேலும், ‘நான் விமானநிலையத்துக்கு சென்றபோது தங்கள் குடும்பஉறுப்பினர்களை இழந்த சிறுகுழந்தைகள் என் கால்களை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறிஅழுதனர். அப்போது நானும் சத்தம்போட்டே அழுதுவிட்டேன். நான் ஒரு பெருமைமிக்க இந்தியன். பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, நான் இந்திய முஸ்லிம் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். நான் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து மட்டும் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை. பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். ஒரு எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்கவேண்டும்? என்பதை வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன்’ என்று மிகவும் பெருந்தன்மையோடு அவர் கூறினார். மிக உணர்ச்சிபூர்வமாக மோடி பேசியதும், குலாம்நபி ஆசாத் பதில் பேசியதும் அரசியல் நாகரிகத்தின் உச்சத்தை பறைசாற்றியது. இந்த தலைவர்களிடம் இருப்பதுபோல அரசியல் நாகரிகம் எப்போதும் மிளிரவேண்டும். “இதுதான் எங்கள் இந்தியா!” என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் நாகரிகத்தை பார்த்து, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டும் என்பது நரேந்திரமோடி, குலாம்நபி ஆசாத்தின் அன்புததும்பிய அரசியல் நாகரிகத்தை கண்டு நெகிழ்ந்துபோய் நிற்கும் இந்திய குடிமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story