மக்களுக்கும் தெரியட்டுமே!


மக்களுக்கும் தெரியட்டுமே!
x
தினத்தந்தி 12 Feb 2021 9:30 PM GMT (Updated: 2021-02-13T01:06:40+05:30)

திட்டத்தின் பயன்கள் எல்லாம் மக்களுக்கு முறையாகப்போய் சேருகிறதா?, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பதெல்லாம் நிச்சயம் மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

மக்களுக்காக அரசு பல நல்ல திட்டங்களை அறிவிக்கின்றன, தொடர்ந்து செயல்படுத்துகின்றன, அதற்கான நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தின் பயன்கள் எல்லாம் மக்களுக்கு முறையாகப்போய் சேருகிறதா?, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பதெல்லாம் நிச்சயம் மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி, 1985-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கலாஹண்டி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது, “அரசு செலவழிக்கும் ஒரு ரூபாயில் 15 காசுகள்தான் அதற்குரிய பயனாளிகளுக்கு போய் சேருகிறது” என்று குறிப்பிட்டார். சுப்ரீம் கோர்ட்டிலேயே இந்த கருத்து நீதிபதிகளால் பல ஆண்டுகளுக்கு பிறகு மேற்கோள் காட்டப்பட்டது. ராஜீவ்காந்தி இந்தக்கருத்தை கூறிய, 25 ஆண்டுகளுக்கு பிறகு, திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா கூறும்போது, “அரசு செலவழிக்கும் ஒரு ரூபாயில்16 காசுகள்தான் ஏழை மக்களுக்கு போய் சேருகிறது” என்று குறிப்பிட்டார்.

ஆக, அரசு செலவழிக்கும் நிதி முழுமையாக மக்களுக்குப்போய் சேர்ந்தால்தான், அந்த திட்டத்தின் முழு பலன் கிடைக்கும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தநிலையில், 2016-2017-ம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் தமிழக அரசு குடிமராமத்து திட்டம் என்ற ஒரு நல்ல திட்டத்தை தொடங்கிவைத்தது. அந்தந்த ஊர் நீர்நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் வகையிலான திட்டம் இது. 20-7-2019 அன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் கிராமம் தோறும் ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதி ரூ.750 கோடியுடன் கூடுதலாக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி தமிழக அரசு வழங்கி மொத்தம் ரூ.1,250 கோடி நிதி குடிமராமத்து பணிகளுக்கு பயன்படுத்தப்படும்” என்று அறிவித்தார். இந்த திட்டத்தின்கீழ், கிராமப்புற பகுதிகளில் பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டிலுள்ள 21,609 சிறிய நீர்ப்பாசன ஏரிகள், கிராம பஞ்சாயத்துகளிலுள்ள 48,758 குளங்கள் மற்றும் ஊருணிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, 30 ஆயிரம் சிறிய நீர்ப்பாசன ஏரிகள், குளங்கள், ஊருணிகளில் நிறைவேற்ற அரசாணை பிறப்பித்து, பணிகளும் நடந்துவருகிறது. இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், “அரசு நிறைவேற்றும் திட்டங்களில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டும். எனவே, குடிமராமத்து பணிகளில் திட்டப்பணிகளின் விவரம், எந்த அளவு அது நிறைவேற்றப்பட்டுள்ளது?, முடிக்கப்பட்டால் அதன் விவரம், திட்டம் நிறைவேற்றப்படும் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், திட்டம் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம், திட்டம் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகிய அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இது ஒரு நல்ல தீர்ப்பு. அரசு என்ன திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றுகிறது?, அப்படி நிறைவேற்றும் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?, எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றப்படும்? என்ற விவரங்கள் எல்லாம் நிச்சயம் மக்களுக்கு தெரிந்தாகவேண்டும். குடிமராமத்து திட்டம் எந்த முறைகேடும் இல்லாமல் நடந்தால், நிச்சயமாக கிராமப்புறங்களிலுள்ள நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.

இந்தநிலையில், ஐகோர்ட்டின் தீர்ப்பு, இந்தத்திட்டம் முறையாக செயல்படவும், பொதுமக்களுக்கு விவரங்கள் தெரியவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசுத் துறைகளும் திறம்பட செயல்பட உதவியாக இருக்கும். ஆனால், கிராமப்புற மக்களுக்கு இணையதளத்தில்போய் பார்ப்பது என்பது நிச்சயமாக இயலாத காரியம். எனவே, இணையதளத்தோடு அந்தந்த பகுதிகளிலுள்ள பத்திரிகைகளில், குடிமராமத்து பணி தொடர்பாக புகைப்படங்களுடன் விளம்பரம் செய்தால் நிச்சயம் பயனளிக்கும்.

Next Story