அதிகம் கேட்டோம்; கொஞ்சம்தானே கிடைத்திருக்கிறது!


அதிகம் கேட்டோம்; கொஞ்சம்தானே கிடைத்திருக்கிறது!
x
தினத்தந்தி 17 Feb 2021 9:02 PM GMT (Updated: 2021-02-18T02:32:08+05:30)

தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கணிசமான தொகை வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழக அரசுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்குமே பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

இந்தியா பல மாநிலங்களைக் கொண்டிருந்தாலும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. எனவே, எந்த உதவி என்றாலும், மத்திய அரசாங்கத்திடம்தான் கேட்க வேண்டிய நிலை, மாநில அரசுகளுக்கு உள்ளது. அந்த வகையில், இயற்கை இடர்பாடுகளான கனமழை, கொடூர புயல், பெரும் வெள்ளம், சொல்லொண்ணா வறட்சி ஆகிய நேரங்களில் எல்லாம், மத்திய அரசாங்கத்திடம் மாநில அரசுகள் நிவாரண நிதி கேட்பது வழக்கம். அந்த வகையில், கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில், தமிழ்நாட்டை அடுத்தடுத்து நிவர், புரெவி புயல்கள், பெரும் மழை என்று இயற்கை பேரிடர்கள் தாக்கியதால் பலத்த சேதம் ஏற்பட்டது.

தமிழக அரசு தன் சொந்த நிதியில் இருந்து உடனடியாக பல்வேறு நிவாரண நிதிகளை வழங்கியது. நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பாதிப்புக்குள்ளான 3 லட்சத்து 10 ஆயிரத்து 590 ஹெக்டேர் பரப்பிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்காக 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு ரூ.600 கோடி, இடுபொருள் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டு, அது விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, மத்திய அரசாங்கத்திற்கு பயிர் சேதம் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டது.

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் சீரமைக்க ரூ.3,750 கோடியே 38 லட்சமும், புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் சீரமைக்க ரூ.1,514 கோடியும் தேவைப்படும் என தெரிவித்து, மத்திய அரசாங்கத்திடம் நிதி உதவி கோரப்பட்டது. மத்திய அரசாங்கமும், கடந்த ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அதே மாதம் 28 முதல் 30-ந் தேதி வரை புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மத்திய குழுக்களை அனுப்பி ஆய்வு செய்தது.

இவ்வளவு கேட்டிருக்கிறோம், நிச்சயமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கணிசமான தொகை வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர் மட்டக்குழு, தமிழ்நாட்டுக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடியுமாக மொத்தம் ரூ.286.91 கோடி மட்டும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக அரசுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்குமே பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

அதிக நிதி உதவி கேட்டோம்; கொஞ்சம்தான் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டைப்போல, நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.9.91 கோடி மட்டும் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திற்கு ரூ.280.78 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.1,255.27 கோடியும், காரிப் பருவ காலத்தின்போது பூச்சிகளின் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்திற்கு ரூ.1,280.18 கோடியும் வழங்க உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. சகோதர மாநிலங்களுக்கு உதவுவதில் தமிழக மக்களுக்கு எந்தவித மனக்குறையும் இல்லை. ஆனால், அதேபோல பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டுக்கும் இன்னும் சற்று அதிகமாக நிதி கொடுத்திருக்கலாமே என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னும் கனமழை பாதிப்புக்கு நிவாரண நிதி அறிவிக்கப்படவில்லை. அதற்காவது கணிசமாக நிதி வேண்டும்.

கொரோனா நேரத்தில், தமிழக அரசு கடும் நிதிச்சுமையால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேசிய பேரிடர் நிதியில் இருந்து குறைவாக கொடுத்தாலும், மத்திய அரசாங்கம் மற்ற துறைகளின் வாயிலாக ஒவ்வொரு பாதிப்புக்கும் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அதுபோல, ஒவ்வொரு துறை வாயிலாக தமிழ்நாட்டில் பாதிப்புக்குள்ளான சேதங்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story