குறைகிறது தங்கம் விலை!


குறைகிறது தங்கம் விலை!
x
தினத்தந்தி 18 Feb 2021 10:43 PM GMT (Updated: 18 Feb 2021 10:43 PM GMT)

தங்கம் என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிலும் விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. அதனால்தான் பெற்ற குழந்தையை தாய்கொஞ்சும்போது, “தங்கமே... தங்கமே...” என்று கொஞ்சுகிறாள்.

ஆதிகாலத்தில் ரூபாய்நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்முன்பே தங்கம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. தங்ககாசுகள் இருந்துள்ளன, இப்போது பல தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருநாளும் தங்கத்தின் விலை எல்லோராலும் உற்றுநோக்கப்படுகிறது. 1960-ம் ஆண்டில் ஒருபவுன் தங்கத்தின் விலை ரூ.100-ஐ தாண்டியபோது, தினத்தந்தியில் 8 காலம் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டது. அப்போது பவுன் படத்தை அந்த செய்தியோடு பிரசுரிக்க நினைத்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ஓவியராக இருந்த கணுவை அழைத்தார். “ஒரு பவுன் படம் வரையவேண்டும். பவுன் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டபோது, இல்லை அய்யா என்று கூறினார். உடனடியாக ரூபாயை கொடுத்து, “நகைகடைக்கு போய் ஒரு பவுன் வாங்கிக்கொண்டு வா” என்றார். அந்த பவுனை பார்த்து படம் வரையச்சொன்னார் தமிழர் தந்தை. ஓவியரும் தத்ரூபமாக வரைந்தார். அதை பாராட்டிய தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், அந்த பவுனை நீயே வைத்துக்கொள் என்று பரிசாக கொடுத்தது, அப்போது பத்திரிகை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்தநிலையில், தங்கத்தின் மீதான கலால்வரி 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், அதேநேரத்தில் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேல்வரி மட்டும் 2.5 சதவீதம் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது என்றும் சமீபத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தின் விலை மளமளவென சரியத்தொடங்கியது. அந்தவகையில் கடந்த மாதம் 5-ந்தேதி ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 848-க்கு விற்பனையான தங்கம், நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 80-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், மக்கள் அதில் முதலீடுசெய்ய தவறுவதில்லை. ஏனெனில் சிறந்த முதலீடாக கருதப்பட்டாலும், ஆபரணமாக வாங்கலாம் என்று நினைத்தாலும், ஆத்திர அவசரத்துக்கு உதவுவது தங்கநகை தான். மற்ற கடன்கள் வாங்குவதற்கு நிறைய ஆவணங்களை தரவேண்டும். ஆனால் தங்கத்தை பொறுத்தமட்டில் அப்படியல்ல. தங்கத்தை அடமானமாக வைத்து வங்கிகளிலும், நிதிநிறுவனங்களிலும், தனியாரிடமும் உடனடியாக கடன் பெற்றுக்கொள்ளலாம். கொரோனா நேரத்தில் பெரும்பாலான குடும்பங்களில் வேலையிழந்து, வருவாயிழந்து, தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்தது தங்கம்தான். வழக்கமாக வங்கிகளில் வழங்கும் நகைக்கடன்களைவிட, கொரோனா நேரத்தில் 30 சதவீதம் அதிகமான கடன்கள் கேட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனா காலத்துக்கு முன்பாக அடகுவைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்பட ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா நேரத்தில் அதாவது, 31.3.2021 வரை நகையின் மதிப்பில் 90 சதவீதம் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என்ற உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்தது. இது எல்லோருக்கும் பெரியளவில் கைகொடுத்தது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் 8.5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான ஆண்டு வட்டியில் தங்கநகை கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது கொரோனா முடிந்து மக்களின் சகஜவாழ்க்கை திரும்புவதால், 2020-ல் அடமானம் வைத்த தங்கநகைகளை மீட்டு புதிதாக தங்கள் வருமானத்தில் இருந்து தங்கநகைகளில் முதலீடு செய்யலாம் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. 2020-ல் கொரோனா நேரத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவில் தங்கத்தின் தேவை வெகுவாக சரிந்திருந்தது. 2019-ல் 690 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை, 446 டன்னாக குறைந்தது. என்றாலும், முதலீட்டுக்கான தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்தது. அதுபோல, டிசம்பர் வரையிலான காலாண்டில் நகைகள் வாங்குவதும் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் கைகொடுத்த தங்கத்தின் மதிப்பு, தற்போது மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

Next Story